மட்டக்களப்பில் சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு ஊர்வலம்......

 மட்டக்களப்பில் சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு ஊர்வலம்......

சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு ஊர்வலம் (30) மட்டக்களப்பில், கரிதாஸ் எகெட் நிறுவன இயக்குநர் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.

கரிதாஸ் எகெட் நிறுவன தலசீமியா செயற்திட்ட இணைப்பாளர் மேரி ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற நிகழ்வில், 'தலசீமியா நோய் பற்றி அறிந்து கொள்வோம் பகிர்ந்து கொள்வோம், நோயாளிகள் மீது அக்கறை கொள்வோம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி சால்ஸ் மண்டபம் வரை இடம் பெற்றது.

சால்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர் கருத்துக்கள் மற்றும் தலசீமியா நோய் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டிய வகையில் கருத்துக்களும் வைத்திய அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மைதிலி பாத்லட், போதனா வைத்தியசாலை சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் சித்திரா கடம்பநாதன், போதனா வைத்தியசாலை சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் விஜி திருக்குமார், மற்றும் கரிதாஸ் எகெட் நிறுவன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments