முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும்.....

 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும்.....

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி தனது அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் கதிராமத்தம்பி விமலநாதனின் சேவையினைப் பாராட்டி மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும் 19-05-2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்த இவர் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
கிழக்கு பல்கலைக்கழக B.Sc - இயற்பியல் அறிவியல் பட்டதாரியான இவர் மேலாண்மை முதுகலை டிப்ளோமாவினை இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்திலும் சமூகவியல் கலை மாஸ்டர் பட்டப்படிப்பினை இந்தியாவின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.
அத்துடன் அரசு ஊழியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டத்தின் பகுதி i & ii தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
1986 டிசம்பர் முதல் 1991 ஏப்ரல் 19 வரை மட்/புனித மிக்கேல் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக தனது அரச சேவையை ஆரம்பித்த இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து களுவாஞ்சிக்குடி உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையேற்றார்.
பின்னர் உதவி உணவு கட்டுப்பாட்டாளர், சமூக சேவைகள் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேலதிக செயலாளர் எனப் பல பதவிகளை வகித்த இவர் இறுதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையேற்று தற்போது ஓய்வு பெறுகின்றார்.
2008 மற்றும் 2010 தொடக்கம் 2013 வரை மட்டக்களப்பு மாவட்டத்திலும் 2013 தொடக்கம் 2019 வரை அம்பாறை மாவட்டத்திலும் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கல்வியில் மாத்திரமல்லாது விளையாட்டு நடவடிக்கைகளிலும் குறிப்பாக கால்பந்து மற்றும் தடகள நிகழ்வுகளிலும் பல சாதனை படைத்துள்ளார்.
இவருக்கான இந்தப் பிரியாவிடை நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதிஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரச்சந்திர, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மெல், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், வட மாகாண நில அளவையாளர் நாயகம் பொ.சிவானந்தன், வடமாகாண நீர்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சாரதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது "விமலநாதம்" எனும் மணிவிழாச் சிறப்பு இதழும் வெளியிடப்பட்டது.







Comments