115 ஆண்டு வரலாறு கொண்ட மட்டு நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயம்.....

 115 ஆண்டு வரலாறு கொண்ட மட்டு நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயம்.....

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூத்து அன்னை ஆலயம் மே மாதம் 05ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14ம் திகதி திருவிழா திருப்பலியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்று (07)ம் திகதி மூன்றாவது நவநாள் காணிக்கை மாதா வட்டாரத்தினால் கொண்டாடப்படவுள்ளது, இதன் பொருட்டு இவ்வாலயத்தை புதிதாக கட்டப்பட்ட போது பொருளாளராக இருந்த நான் சேகரித்த பல தகவலின் அடிப்படையில் இவ்வாலயத்தின் வரலாற்றை சற்று பின்நோக்கி பார்ப்பதற்காக இக்கட்டுரையை மீண்டும் வெளியிடுகின்றேன். 

நாவற்குடா பிரதேசத்திலே, கிறிஸ்தவ சமயத்தை முதலில் அறிமுகம் செய்துவைத்தவர்கள் மெடிஸ்த, அங்சிலிக்கன் சபைகளைச் சேர்ந்த வேத போதகர்களேயாவர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் மெதடிஸ்த சபையினர் களத்தில் நுழைந்தனர். இலங்கை பிரித்தானியர்களுக்கு உட்பட்ட பின்னர், அங்கிலிக்கன் திருச்சபையினர் இங்கு பிரவேசித்தனர். இன்றும் கூட, அங்கிலிக்கன் கிறிஸ்தவ சமூகம், 1892ம் ஆண்டு தொடக்கம் வரலாறு உள்ள புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலயமும் இப் பகுதியில் உள்ளன.

இயேசு சபைக் குருமாரின் வருகைக்குப் பிற்பட்டதாகவே, நாவற்குடா கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு காணப்படுகிறது. அதற்கு முன், அதாவது அமல மரித்தியாகிகளின் காலத்தில், ஏதாவது செயற்பாடுகள் இப் பகுதியில் நிகழ்ந்தவா என்பதற்கு எந்தவிதப் பதிவுகளுமில்லை. ஆயினும் ஆரம்பகாலத்தில், மட்டக்களப்பிலிருந்து சில கத்தோலிக்க குடும்பங்கள், இப் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்று குடியேறியிருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

பிரெஞ்சு நாட்டு இயேசுசபைத் துறவிகள், எமது மறைமாவட்டத்துக்கு வருகை தந்தபின், நாவற்குடாவிலே அவர்கள் ஓர் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பிக்க முயற்சி செய்தனர். புனித மிக்கேல் பாடசாலைக்குத் தம் பிள்ளைகளை அனுப்ப முடியாது, வசதி குறைந்திருந்த வகுப்பினருக்காகவே இம் முயற்சி எடுக்கப்பட்டது. ஆயினும் அங்கிலிக்கன் திருச்சபை, ஏலவே ஓர் ஆங்கிலப் பாடசாலையை இப் பகுதியில் ஆரம்பித்து முறையாக நடத்திக்கொண்டிருந்தனர். மேலும் கத்தோலிக்க பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த தாழ்ந்த வகுப்பினரின் ஊக்கமின்மை காரணமாக, அது விரைவில் கைவிடப்பட்டது. பாடசாலைக் கட்டடமே நாவற்குடா சின்ன லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயமாக மாறியது. 'காட்போட்' மட்டையில் ஒட்டப்பட்ட லூர்து அன்னையின் படம், புதிய சிற்றாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இவ்வாறாக நாவற்குடா சின்ன லூர்து சிற்றாலய வரலாறு, கி.பி. 1908ம் ஆண்டளவில் ஆரம்பமாகிறது. கல்லடிப் பாலம் கட்டப்படு முன்னே, புளியந்தீவுக்கும் தெற்குக் கரையோர நிலப்பரப்புக்குமிடையே வள்ளங்கள் மூலமாகத்தான் பிரயாணிகள் வாவியைக் கடந்து சென்றார்கள். மட்டக்களப்புக் கோட்டையின் பின்னால் வாவிக்கரையில் ஓர் இறங்குதுறை அமைந்திருந்தது. வாவியின் மறுதுறை, நாவற்குடாக் கிராமத்தின் வடமுனையாகிய கல்லடியில் அமைந்திருந்தது. அக் காலத்தில், இந்துக்களின் செல்வாக்குக்குட்பட்டதோரிடமாகவே நாவற்குடா விளங்கியது.

1909ம் ஆண்டளவில், அருட்தந்தை டு.ஆராஸ்(யே.ச) அவர்களுக்கு, திரேவூ என்ற இடத்துக் கார்மேல் கன்னியரிடமிருந்து, லூர்து அன்னையின் ஆழகான சொரூபம் ஒன்று வந்து சேர்ந்தது. பார்ப்பவரைக் கவர்ந்த அழகான 'இனாமல்' கண்கள் இச் சொரூபத்திற்கு பொருத்தப்பட்டிருந்தன. அதே ஆண்டு, ஐப்பசி மாதம் 17ம் திகதி, இச் சொரூபத்தை, ஆயர் லவிஞ் ஆண்டகையவர்கள் உத்தியோகபூர்வமாக ஆசீர்வதித்து, நாவற்குடாச் சிற்றாலயத்தில் ஸ்தாபித்து வைத்தார். அதற்கு முந்தி இரவு முழுவதும், அந்த சுருவத்தை புனித மிக்கேல் பாடசாலைப் பெற்றாராக இருந்த ஓர் இந்துப் பெரியவரின், வழிபாட்டறையிலே, திரு விளக்கெரிய இச் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. அருட்தந்தை சாள்ஸ் றிச்சாட் அவர்களின் அச்சிடப்படாத ஆவணமொன்றிலே இச் சொரூபம் பற்றிய குறிப்பொன்று உள்ளது. அன்னையின் சொரூபத்தை, இந்த இந்துப் பெரியார் கண்மூடாது பார்த்துக்கொண்டிருப்பாராம். 'சுவாமிகளின் சமயம் அழகானது. எம்மையும் செபிக்கக் கூப்பிடுவது போல் கைகளைக் குவித்துக் கொண்டு மோட்சத்தைப் அண்ணார்ந்து நோக்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான சொரூபத்தைப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்..' என்று இந்தப் பெரியார் கூறியதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது.

புனித செபஸ்தியார் பங்கில் தங்கியருந்த அருட்தந்தை ஹொப்பனோ அவர்கள், முக்கியமான பணிகளுக்காக நாவற்குடாவுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். இவரது முயற்சிகளுக்குச் சாதகமாகச் செவிகொடுத்தவர்கள் அவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்களே. இவர்கள், உயர்குடி மக்களால் அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள். விரைவிலே ஒரு சிறிய கத்தோலிக்க சமூகம் உருவாகியது.

ஆரம்பத்திலிருந்த சிற்றாலயம் ஓர் ஓலைக் கொட்டிலென்றுதான் சொல்ல வேண்டும். 1920ம் ஆண்டுக்கு முன், இது கற்கட்டமாகி, ஓட்டினால் வேயப்பட்டது. அருட்தந்தை ஹொப்பனோ, மெதுவாக சக்கிறீஸ்ரியிலே குடியேறினார். இங்கிருந்துதான் அவர் தமது மறைபரப்புப் பணியை ஆரையம்பதி, தாளங்குடா கிராமங்களுக்கு விஸ்தரித்தார்.

1960ம் ஆண்டிலே, அருட்தந்தை பிளசிடஸ் சில்வா அவர்கள், லூர்து அன்னைக்கு ஒரு கெவியை நிர்மாணிக்க ஆரம்பித்து, 1963ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ம் திகதிஇ தந்தை பீலிக்ஸ் கிளாக்சன் (யே.ச) அவர்கள் கெவிக்கான அடிக்கலை ஆசீர்வதித்துப் பதித்து கட்டிட வேலைகளை மூன்று வருடங்களுக்குள் முடித்தார். 1966-02-11ஆம் திகதி புதிய கெவி ஆயர் கிளெனி ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டதுடன் மாதாவின் ஆசீநீரும் மக்களின் பினி தீர்க்கும் நீராக மாற பிரான்ஸ் தேசத்தில் லூர்து மாதா ஆலயத்தில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு புதிதாக கிணறு அமைக்கப்பட்டு இக்கிணறுக்குள் இப்புனித நீரை ஊற்றி அதையும் திறந்துவைத்து, தந்தை பிளசிடஸ் கெவிக்கு 'சின்ன லூர்து' என நாமஞ் சூட்டி, நாடு முழுவதிலுமிருந்து, பெருந்திரளான  சிங்கள, தமிழ் யாத்திரிககர்கள் வந்து தங்கி செல்லும் ஒரு புண்ணியஸ்தலமாக நாவற்குடாவை மாற்றியது. 

1994ஆம் ஆண்டு அருட்பணி. D.சாமிநாதன் அடிகளார் நாவற்குடாவில் அன்னைக்கு புதிதாக ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என கூறி அதற்கான நிதியை மக்களிடம் இருந்து திரட்டலாம் என ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதன் பின் 2003ம் ஆண்டளவில் அருட்பணி. B.A.ஜோசப் அவர்கள் ஆலய கட்டிடத்திற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பித்ததுடன் புதிய ஆலயத்திற்கான அடிக்கலினை அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாநில ஆயர் அதிவந்தனைக்குறிய கலாநிதி ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்ககால் ஆலயத்திற்கான அடிக்கல் 2008.12.08ம் திகதியன்று நாட்டப்பட்டது.

2011ம் ஆண்டு பங்குத்தந்தையாக அருட்பணி X.I.ரஜீவன் அடிகளார் அவர்கள் வருகை தந்ததன் பின்னர் ஆலயத்தில் மாதாவின் ஆசி நீர் கிணறு தூர்வாங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது, சேமக்காலையில் மாதாசுருவம் ஸ்தாபிக்கப்பட்டது, மாதாவின் கெவி புதுப்பிக்கபட்டு பீடத்திற்கு மாபில் பதிக்கப்பட்டு, சில்வர் கிராதி அடிக்கப்பட்டது, சிலுவைபாதை செய்வதற்காக சிலுவைகள் நாட்டப்பட்டதுடன், ஆலயத்திற்கான மதில்கள் அமைக்கப்பட்டது மற்றும் சேமக்காலையில் மதில்கள் அமைக்கப்பட்டு பீடமும் தாபிக்கப்பட்டது.  பல அருட்பணியாளர்களின் எண்ணமும் பங்கு மக்களின் கனவாகிய ஆலய கட்டுமாண பணிகளை அருட்பணி X.I.ரஜீவன் அடிகளார்  11.02.2014ம் தொடங்கினார். கட்டுமாண பணிகள் தொடங்கப்பட்டு சரியாக 309 நாட்களில் மிகப்பிரமான்டமான  ஆலயத்தை கட்டி முடித்துள்ளார் .


இதற்கான பணத்தினை தேட வேண்டிய ஒரு பாரிய பணி இருந்த போதிலும் பங்கு மக்களின் தாராள உதவியும், வெளிப்பங்கு மக்களின் தராள உதவியும், வெளிநாடுகளில் உள்ள நம் உடன்பிறப்புக்களின் உதவியும், பிறசமய மக்களின் உதவியும் அருத்தந்தை X.I.ரஜீவன் அடிகளார் பெற்று இவ்வாலத்தை கட்டி முடித்துள்ளார் என்றால் அது மாதாவின் புதுமைகளில் ஒன்று என்றே கூறலாம்.

இவ்வாலயத்தை 16.12.2014 செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு அபிசேக திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆன்டகை அவர்களாள் அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் வரலாற்று சான்றாக திகழும் நாவற்குடா சின்ன லூர்து  ஆலயம் இன்றும் எல்லோராலும் பேசப்படும் ஒரு ஆலயமாக காணப்படுகின்றது.






Comments