முதல் முதலில் இலங்கை அணிக்காக 05 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் வினோதன் ஜோன்.....

 8.முதல் முதலில் இலங்கை அணிக்காக 05 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் வினோதன் ஜோன்: இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்........... 


இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த ஒரு தமிழ் கிரிக்கெட் வீரர் தான் வினோதன் ஜோன் பேட் ஜெயராஜசிங்கம். இவர் 1960 மே 27ல் கொழும்பில் பிறந்தார். பம்பலப்பிட்டி சென் பீட்டஸ் கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக 12 செப்டம்பர் 1982ல் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். வலது கை துடுப்பாட்ட வீரராகவும், வலது கை மித வேக பந்து வீச்சாளராகவும் தன்னை நிலை நிறுத்திய இவர் இலங்கை அணிக்காக 45 போட்டிகளில் பங்குபற்றி இவர் மொத்தமாக 84 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்த வரை 34 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள இவரின் சிறந்த பந்து வீச்சாக 28 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதேயாகும். இவர் தன்னை ஒரு பந்து வீச்சாளராகவே நிலை நிறுத்தி செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரின் இறுதி ஒரு நாள் போட்டியானது உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்துடன் 1987 ஒக்டோபர் 30ம் திகதி நடைபெற்ற போட்டியை குறிப்பிடலாம்.

இவரது முதல் டெஸ்ட் போட்டியை பொறுத்த வரை 04 மார்ச் 1983 நியுசிலாந்துடனான போட்டியை குறிப்பிடலாம், இவர் இலங்கை அணிக்காக 06 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பந்து வீச்சை பொறுத்தவரை 28 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் ஒரு இனிங்சில் சிறந்த பெறுபேராக 60 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், ஒரு டெஸ்ட் போட்டியில் 159 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தார். 05 விக்கெட்டுக்களை இரண்டு தடவையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவரது இறுதி டெஸ்ட் போட்டியானது இங்கிலாந்துடன் 23 ஆகஸ்ட் 1984 நடைபெற்ற போட்டியை குறிப்பிடலாம்.

மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வினோதன் ஜோன் நியுசிலாந்திற்கு எதிராக உள்நாடு, வெளிநாடு என ஜந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தன் சிறந்த பந்து வீச்சு பெறுதியை பெற்றுக் கொண்டார். இங்கிலாந்துடனான  லோட்சில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டியில் பங்குபற்றி தன் டெஸ்ட் போட்டிகளுக்கு முடிவுக்கு வந்தார். இப்போட்டியிலேயே இவர் 98 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிதத் வெத்தமுனி 190 ஓட்டங்களை தனிநபராக பெற்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடமாகும். 

புளும் பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடக்கள கழகம், S.S.C, மொரட்டுவ விளையாட்டு கழகம் போன்றவற்றில் தன் திறமையான விளையாட்டை பதிவிட்டு, தொடர்ந்து இரண்டு தசாப்தங்களாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை பிரதிநிதிப்படுத்தி விளையாடி உள்ளார்.

இவர் ஒரு கொழும்பு சென் பிட்டஸ் கல்லூரியின் வீரர் ஆவார் இவருடன் இணைந்து மேலும் 03 சென் பீட்டஸ் கல்லூரி வீரர்கள் ஒரே நேரத்தில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளனர் மற்றவைர்கள் ருமேஸ் ரட்நாயக்க, ரோய் டயஸ் மற்றும் அமல் சில்வா ஆகியோர் கலந்து கொண்டதாக அவர் தெரிவிப்பதுடன், தான் இலங்கை அணிக்காக முதல் முதலில் 05 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்று குறிப்பிடும் இவர், இப்போட்டியானது நியுசிலாந்துடன் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் 1984 மார்ச் 09 நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு, இப் போட்டியில் 86 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை தான் கைப்பற்றி உள்ளதாகவும் குறிப்பிட்ட இவர் ஸ்ரீதரன் ஜெகன்நாதனுக்கு முன்பே தான் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடிய முதல் தமிழ் வீரர் என சென் பீட்டஸ் கிரிக்கெட்டின் பொற்காலம் எனும் தொகுப்பில் தெரிவித்துள்ளார். தற்போதும் கிரிக்கெட் மீது ஆவர்வமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments