விளையாட்டுத்துறை அமைச்சர் ICCக்கு அவசர கடிதம்!
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் இலங்கையின் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லேக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்பதே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிலைப்பாடாகும். விளையாட்டுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தானும் அதனை அங்கீகரிப்பதாகவும், தானும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் மட்டுமன்றி பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசிய விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும், அவற்றின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் செயற்பாடுகள் முறையான தரம் மற்றும் நெறிமுறைகளின் படி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
Comments
Post a Comment