GCERF மற்றும் HELVETAS நிறுவன பிரதிநிதிகள் மட்டக்களப்பிற்கு வருகை-Battieye.blogspot.com

 GCERF மற்றும் HELVETAS நிறுவன பிரதிநிதிகள் மட்டக்களப்பிற்கு வருகை-Battieye.blogspot.com

மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துவரும் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவன காரியாலயத்திற்கு GCERF (Global Community Engagement and Resilience Fund) மற்றும் HELVETAS நிறுவனப் பிரதிநிதிகள் (20) திகதி வருகை தந்தனர்.
"கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும்" எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசரணையில் அரச சார்பற்ற தேசிய செயலகத்தின் வழிகாட்டலில், LIFT நிறுவனம், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களம் மற்றும் மனிதநேயத் தகவல் குறிப்புகள் (மதகு ஊடகம்) ஆகியவை இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் குறித்த முன்னெடுப்புக்கள், எதிர்நோக்கிய சவால்கள், திட்டம் முன்னெடுக்கப்படும் விதம், எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
LIFT நிறுவனத்திற்கு வருகைதந்த இக்குழுவினர், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் மற்றும் நிதிப்பணிப்பாளர் நடராஜா ஜெபராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டு செயற்படுத்தப்படும் திட்டம் தொடர்பாக விளக்கமளித்திருந்தனர்.குறித்த கலந்துரையாடலில் மதகு ஊடகத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவரான எந்திரி. கோபிநாத் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
GCERF நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருகை தந்த இலங்கைக்கான முகாமையாளர் பசில், கண்காணிப்பு மதிப்பீடு மற்றும் மதிப்பீடுகள் நிபுணர் இம்மானுவேல் நேனே ஒட்ஜிட்ஜா ஆகியோரும், HELVETAS நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஹசந்தி கஹந்தவால, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர் சங்க கலகொட, பிராந்திய திட்ட உத்தியோகத்தர் என்.ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்று மாவட்ட ஊடகப் பிரிவினைப் பார்வையிட்டதுடன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தம் உள்ளிட்ட ஊடகப்பிரிவு உத்தியோகத்தர்களுடன் குறித்த திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த இளம் ஊடகவியலாளர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments