மட்டு.மாநகர சபையின்,மின் தகனசாலையின் பணிகள் ஆரம்பம்-Battieye.blogspot.com
மட்டக்களப்பு மாவட்டத்தின் அவசிய தேவையாக காணப்படும் மின் தகனசாலையினை அமைக்க வேண்டும் என்ற மட்டக்களப்பு மாநகர சபையின் தீர்மானத்துக்கு அமைய, கள்ளியங்காடு இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 40 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில், நிர்மாணிக்கப்பட்ட மின் தகன சாலையின் செயற்பாடுகளை நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்களின் அவசர, அவசிய தேவை கருதி தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதம கணக்காளர் ஹெலன் சிவராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் ஓய்வுநிலை பொறியியலாளர் எந்திரி தேவதீபன், மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர்.சி.துஷ்யந்தன், நிர்வாக உத்தியோகத்தர் கிரிஜா பிரேம்குமார், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான ஜெயகௌரி ஜெயராஜன், எஸ்.சுதர்சன் ஆகியோருடன் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மின் தகனசாலையானது இலங்கையில் மிக உயர்ந்த புகை சீராக்கியுடன், அதிநவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு சுற்று சூழல் பாதுகாப்பு அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment