ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் யாழ். மண்ணின் வியாஸ்காந்த்-Battieye.blogspot.com

 ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் யாழ். மண்ணின் வியாஸ்காந்த்-Battieye.blogspot.com

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயற்பட அழைக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வியாஸ்காந்த் முதலாவது பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T/20 தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

அந்த வகையில் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ச்சியாக அசத்தி வரும் இவர், இறுதியாக நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் பருவத்தில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஆடி தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் ஐந்து பந்துவீச்சாளர்களில் ஒருவராக இடம் பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் வியாஸ்காந்த் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியில் வலைப்பந்து வீச்சாளராக இணைக்கப்பட்டிருக்கும் விடயமானது அவ்வணியின் முகாமைத்துவக் குழு மூலம், உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை 2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இம்மாத இறுதியில் (மார்ச் 28) ஆரம்பமாகவுள்ள நிலையில் வியாஸ்காந்த் மிக விரைவில் இந்தியா பயணமாகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே வேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட ஜாம்பவனுமான குமார் சங்கக்கார ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் செயற்பட்டு வரும் நிலையில் வியாஸ்காந்த்திற்கு இந்தப் பருவத்திற்கான ஐ.பி.எல். தொடர் முழுவதும் சங்கக்காரவின் ஆளுகையில் பயிற்சிகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவரை முதன் முதலில் இனங்கண்டு லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஆடவைத்த பெருமை ஹரி வாகீசன் அவர்களையே சாரும். எம்மவர்களுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்குடன் செயற்பட்ட வரும் ஹரி வாகீசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் தமது முதல் போட்டியில் ஏப்ரல் 02ஆம் திகதி சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை எதிர் கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments