மட்டு.வாகரையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com

 மட்டு.வாகரையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு:Battieye.blogspot.com

"பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு வாகரை கண்டலடி கடற்கரையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் என்.தனஞ்சயன், மட்டக்களப்பு மாவட்ட மீன் பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ், வாகரை பிரதேச செயலாளர் பொறியியலாளர் க.அருணன் மற்றும் கல்குடா வலயக் பிரதி கல்விப் பணிப்பாளர் ஜெயவதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்வாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கௌரவிக்கப்பட்டதுடன், சம காலத்தில் மிகத் துரித கதியில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைப்பாடும் இடைவெளிகளும் மற்றும் சிபார்சுகளும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட வன்முறை அடங்கிய பரிந்துரைகள் அரசாங்க அதிபரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று கூடி இணைய வழி வன்முறை தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்து, இணைய வழி வன்முறையை நிறுத்து, இணையத்தின் ஊடாக பெண்களை மிரட்டாதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
கண்டலடி கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது சுமார் 5 கிலோமீற்றர் தூரம் வரை சென்று வாகரை பொது மைதானத்தில் நிறைவடைந்ததும், அங்கு பெண்களுக்கெதிரான வன்முறையை தடுத்தல் தொடர்பான நாடகம், கவிதை, ஆங்கில பேச்சு, நாட்டுக் கூத்து என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.











Comments