கச்சத்தீவு புனித அந்தோணியாரிடம் சென்று வருவோமா:Battieye.blogspot.com

 கச்சத்தீவு புனித அந்தோணியாரிடம் சென்று வருவோமா:Battieye.blogspot.com

கோடி அற்புதராக இனம், மதம், மொழி கடந்து விசுவசிக்கப்படுபவர் தான் புனித அந்தோணியார், இவர் உலகெங்கும் லட்சக்கனக்கான தன் பக்தர்களுக்கான கோடி அற்புதத்தை வழங்கினாலும், இலங்கை இந்திய மக்களுக்கு இவரை கச்சத்தீவு சென்று வணங்கி வருவதே ஒரு வரப்பிரசாதமாக கொண்டு நம்பிக்கையுடன் அவரை நேரில் சென்று சந்தித்து போல் தங்கள் உயிரைக் கூட துச்சமென மதித்து கடல் பயணம் செய்து அந்த ஒரு நாளை காணச்செல்கின்றார்கள்.


முதலில் கச்சத்தீவை பற்றி அறிந்து கொள்வோம்: 1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு தீவு தான் இந்த கச்சத்தீவாகும். இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்).




கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியே கச்சத்தீவு  ஆகும். தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு முத்துராமலிங்க சேதுபதி மன்னர்   பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே 1795இல் மரணமுற்றதால்  அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். இவ்வாறு இந்தியாவின் கீழ் இருந்த கச்சத்தீவு, 28.06.1974ல் கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு வழங்கி அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். தற்போது இலங்கை அரசின் கண்காணிப்படும் ஒரு  தீவாக கச்சத்தீவு காணப்படுகின்றது.

புனித அந்தோணியார் கச்சதீவில் குடியேறிய விதம்: புனித அந்தோணியாரை 1913ம் ஆண்டு தொண்டி அருகே உள்ள நம்புதாளை என்ற ஊரை சேர்ந்த சீனிகுப்பன் படையாட்சி என்பவர் புனித அந்தோணியாருக்கு  தேவாலயத்தை கச்சதீவில் உருவாக்கினார். 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில் கடந்த 2002இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. இதன் பின் 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆலய திருவிழா நடாப்பட்டு வருகின்றது மீண்டும் கொராணா காரணமாக தடைப்பட்டு 2023ம் ஆண்டு புனிதரின் வருடாந்த திரு விழா நடைபெற்றது.
வருடத்தில்  ஒரு நாள் மட்டுமே தங்க கூடிய இப்புனித தலத்தில் தங்குவதற்காக இலங்கையில் நாலாபுரத்தில் இருக்கும் புனிதரின் பக்தர்களும் இந்தியாவில் உள்ள பக்தர்களும் கச்சதீவை நோக்கி படையெடுப்பர். இது இவ்வருடம் பெப்ரவரி 3ம், 4ம் திகதிகளை தனதாக்கி கொண்டது. எப்போதும் இவ்வாலயத்தின் திருவிழா இயேசுவின் பாடுகளின் காலத்தில் இரண்டாம் வெள்ளியை மையப்படுத்தி சிலுவைப்பாதை நடாத்தி வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திற்கான பயணம்....

2023ம் ஆண்டு புனிதரின் ஆலயத்தை பார்ப்பதற்கான மூன்றாவது சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது. மட்டக்களப்பில் இருந்து 02ம் திகதி யாழ்ப்பாணம் நோக்கிய எமது பயணம், 03ம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து 32 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் குறிகாட்டுவான் இறங்கு துறையை சென்றடைந்தோம். இங்கிருந்து தான் கச்சதீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்திற்கும், நயினாதீவில் இருக்கும்  ஶ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் செல்வதற்கான படகு சேவைகள் காத்துக் கொண்டருந்தன.

கடந்து காலங்களில் செல்லும் போது மிகவும் பரபரப்பாக காணப்பட்ட குறிகாட்டுவான் இறங்கு துறை இம்முறை குறைந்த அளவிலான மக்களே கச்சத்தீவுக்கான பயணத்திற்கு நின்று கொண்டிருந்தனர். பெரும் பாலும் மக்களால் கூறப்பட்ட காரணம் பொருளாதாரப்பிரச்சனை மற்றொன்று முதல் நாள் விடுக்கப்பட்ட வானிலை அறிக்கை தான் கூடுதலானவர்கள் கச்சத்தீவிற்கு வருகை தரவில்லை என்பதாகும். 

நாங்கள் இறங்கு துறையை அடைந்ததுதம் எதுவித கெடுபிடிகளும் இல்லாமல் இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு செல்வோரை ஓரிடத்தில் அமரச் சொன்னர்கள். மறுபுறம் நயினாதீவு செல்வோரை அமரச் சொன்னனர். இதில் நயினாதீவிற்கு செல்வதற்கு ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். சிறிது நோரத்தில் ஒரு தொகுதி பக்தர்கள் சேர்ந்த போது கச்சத்தீவுக்கு செல்வோர் படகினில் ஏறுமாறு பணிப்பட்டனர்.

அணைவரும் பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு படகினில் ஏறினோம் சுமார் 70 தொடக்கம் 100 பேர் இந்த படகில் ஏற்றப்பட்டனர். படகு தனக்கே உரிய வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. கீழ் தளத்தில் இருந்த நாங்கள் வழமை போன்று படகின் மேல் தளத்தில் ஏறிக் கொண்டோம். சுட்டெறியும் வெயில் என்றாலும் இதமான காற்றால் வெயிலின் அகோரம் தெரியவில்லை  கீழ் தளத்தில் இருந்தோரில் பலருக்கு புதிய அனுபவம், 
பலரும் வாந்தி எடுத்த வண்ணம் பயணித்தனர். இத்துன்பங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு பயணித்தனர், காரணம் அந்தோணியாரை காண வேண்டும் என்கின்ற ஆசையில் பொறுத்துக் கொண்டு இருந்தனர். நேற்றைய வானிலை தகவலின் படி காற்று அன்றைய தினம் கொஞ்சம் பலமாக தான் இருந்தது படகு கூடுதலாக அசைந்த படியும் மேல் எழுந்து கீழாக வருவதுமாக இருந்தது பலருக்கும் பயம் கௌவிக் கொண்டது.

நாங்கள் பயணித்த படகே கச்சத்தீவிற்கான இறுதிப்படகாகவும் இருந்தது. பெரும் பாலும் 20 மேற்பட்ட படகுகள் செல்வதாகவும் இம்முறை 13 படகுகள் மாத்திரமே செல்வதாகவும் படகை செலுத்தியவர் தெரிவித்தார். சுமார் 40 வேகத்தை கொண்ட படகு மிகவும் ஆறுதலாக தன் பயணத்தை தொடர்ந்தது. படகில் வருவோர் ஒருவரை ஒருவர் அறிமுகமாக்கி கொண்டனர். எமது கடல் பயணம் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது, இப்போது நாங்கள் நெடுந்தீவை கடந்து முடிந்தது அப்போது மணி 12 தட்டியது. கடலில் பயணம் சுமார் 4 தொடக்கம் 5 மணித்தியாலங்கள் போதும் என தெரிவித்தார்கள் கடந்த காலங்களில் நாங்கள் 4 மணிநேரத்தில் சென்றடைந்தோம்.

தூரத்தில் ஒரு தீவு தெரிவதாக  ஒருவர் சொன்னார் அப்போது தான் படகினை செலுத்துபவர் எங்களிடம் பிரயாண கட்டணமானக ஒரு வழிக்கு ஆயிரம் என அறவிட்டார். இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடயமே ஏன் இதை குறிப்பிடுகின்றேன் என்றால் கடந்த முறை 250 ரூபாவாக இருந்தது இக்கட்டணம் தற்போது 1000மாக மாறியுள்ளது. இதற்கான காரணம் எரிபொருள் பிரச்சனையே இருந்தது இதை கூட பக்தர்கள் பொருட்படுத்தாமல் அந்தோணியாரை சந்திக்க வேண்டும் என சென்று கொண்டிருந்தனர். நேரம் 3 மணியாகியது கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர்  எம்மை அன்புடன் வரவேற்றனர்.

 

கச்சத்தீவில் இறங்கியவுடன் இந்தியாவில் இருந்து வந்த பக்தர்கள் வேறாகவும், இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் வேறாகவும் வருமாறு அறிவுறுத்தப்பட்டோம், ஏன் என்றால் உணவு வழங்குவதற்கான அட்டை பெறுவதற்காகவும், புனிதமான இவ்விடத்தில் போதைபாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைக்காக அனைவரது பொதிகளும் பரிசோதனை செய்யப்பட்டது. 

இதன் போது பல நெரிசல்கள் ஏற்பட்டு அங்கலாய்த்து விட்டோம். மதியம் 3ஐ கடந்து விட்டதால் பசியேடுத்து விட்டது மதிய உணவுக்கான இடம் தேடிய போது வழமை போன்று  நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம் நடாத்தும் உணவகத்தில் பணம் செலுத்தி சோறு மற்றும் பருப்புடன் உணவை உட்கொண்டோம். இரவும், அடுத்த நாள் காலைக்குமான இலவச உணவு அட்டையை தந்திருந்தது இலங்கை கடற்படையினர். 

உணவு அருந்திய பின் ஒரு அறிவித்தல் வந்தது கொடியேற்றம் நடைபெறவுள்ளதாக உடனடியாக அவ்விடம் வந்து கொடியேற்றத்தை பார்த்தோம் நீண்ட ஒரு மரக்கம்பம் முற்றிலும் வைரமான மரமாகவே இருந்தது அந்த மரத்தில் புனிதரின் கொடி ஏற்றப்பட்டது. 




அடுத்தாக இயேசுவின் பாடுகள் பற்றிய சிலுவை பாதை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எம்முடன் புதிதாக வந்தவர்கள் குளிப்பதற்கு இடம் தேடினர் நான் கூறினேன் குளிப்பது என்றால் கடலில் தான் குளிக்க வேண்டும் என்று கூறினேன், எல்லோரும் சரி என்று கூறிக்கொண்டு கடலில் இறங்கினார்கள் நான் கூறினேன் கற்கள் தாறுமாறாக இருக்கும் கால்கள் கவணம் என ஆனால் அணைவரும் அக்கடலில் குளித்தபடியே இருந்தனர் நானும் இறங்கி குளித்தேன். ஆங்காங்கே கடற்படையினர் தண்ணீர் தொட்டிகளை வைத்திருந்தனர். இத்தண்ணீரில் இறுதியாக ஒரு போத்தல் தண்ணீரில் தங்கள் உடம்பை இறுதியாக கழுவிக் கொண்டோம்.
நேரம் 5ஐ தாண்டிய போது இயேசுவின் பாடுகள் பற்றிய சிலுவைப்பாதை ஆரம்பமானது மிகவும் பாரமான நீண்ட சிலுவை கொண்டு வரப்பட்டது. முதலில் குருக்கள் ஆரம்பித்துவைக்க பின்னர் அருட் சகோதரிகள் தொடர அடுத்தாக பக்தர்கள் சிலுவையை சுமக்கத் தொடங்கினர். பலரது கண்களில் கண்ணீர் சாரை சாரையாக வழிந்தோட தேம்பி தேம்பி அழுதபடி 

பலரும் இயேசு தனியே சுமந்த அந்த பாரமான சிலுவையை சுமந்து சென்றார்கள். ஆலயத்தை சுற்றி வந்திருந்த போதிலும் மக்கள் வெள்ளம் இவ்விடத்தை அலை மோதி யார் இச்சிலுவையை தூக்குவது, இச்சிலுவையில் என் கை படாதா என அங்கலாய்த்த படி இருந்தனர். இறுதியாக சிலுவை கோயில் முன்றலில் வைக்கப்பட்டதுடன் திருப்பலி ஆரம்பமானது திருப்பலி முடிவுற்றதும் புனிதரின் திருச்சுருவம் பவணியாக ஆலயத்தை சுற்றி வந்தது மிகவும் அழகாக இருந்தது.
அதே நேரம் இரவுணவு இலங்கை கடற்படையிரால் வழங்கப்பட்டிருந்தது. எனக்கு இராவுணவு அருந்த மனம் விரும்பவில்லை. ஆலயத்ரைத சுற்றி வந்தேன் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி மற்றும் சந்தனகுச்சிகள் ஏற்றுவதற்கான ஓர் தனியான இடம் ஒதுக்கப்பட்டு சுண்ணாம்பு கற்களால் அது மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தது அங்கு எந்த நேரம் சென்றலும் மெழுவர்த்தி எரிந்த படியே இருந்தது இரவு வேளைகளில் மிகவும் அழகாக இருந்தது.

மறுபுறமாக வந்த போது பழைய ஆலயம் காணப்பட்டது, இவ்வாலயம் 1913ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.  அவ்வாலையத்துக்குள் அந்தோணியாரின் திருச்சுருவம் வைக்கப்பட்டிருந்தது. பலரும் பலவிதமாக தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்தும், நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருந்தார். 
பலர் ரோஜாப்பூக்களை கொண்ட மாலைகளை புனிதருக்கு இட்டும், புனிதரின் செபத்தை சொல்லியவாறு மண்டியிட்டு சென்றனர், சிலர் புனிதரின் செபத்தை அமைதியாக சொல்லிக் கொண்டிருந்தனர், சிலர் வேண்டுதலுக்காய் உப்பு, மிளகு போன்றவற்றுடன் வேண்டுதலுக்கான நேர்த்திகளையும் அவர் பாதத்தில் சமர்ப்பித்திருந்தனர். மறுபுறம் ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணை மற்றும் தண்ணீர், செபமாலை, புனிதரின் படங்கள், மெழுகுதிரிகள் மற்றும் புனிதரின் வரலாற்று மற்றும் ஜெப புத்தகங்கள் ஆலய வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டதையும் அவதானித்த நான் ஆசீர் செய்யப்பட்ட தண்ணீர் மற்றும் எண்ணையை, ஜெப புத்தகம் போன்றவற்றை நான் வாங்கிக் கொண்டேன்.
அன்றைய நாள் இரவு நான் தூக்கத்திற்காக செல்ல முற்பட்ட போது தூக்கமே வரவில்லை, காலை 6 மணிக்கு செபமாலை அதனைத் தொடர்ந்து திருவிழா திருப்பலி என அறிவித்த இருந்தார்கள். நல்ல குளிர் காற்று வீசியது பின்புறமாக இருந்த புனிதரின் பெரிய திருச்சுருவத்திற்கு அருகில் தான் கையடக்க பேசிக்கான சிக்னல் கிடைக்க கூடியதாக இருந்தது, பலரும் அவ்விடத்திலேயே பெரும்பாலும் ஒன்று கூடி இருந்தனர். முன்பு நாங்கள் கடற்கரை ஓரத்திலேயே தூங்குவோம் ஆனால் இம்முறை கடல் சற்று உள்நோக்கி வந்திருந்ததால் அவ்விடத்தில் தூங்க முடியவில்லை சற்று மேலேயே உறங்கிக் கொண்டோம்.

மறு நாள் 5மணிக்கு விழித்துக் கொண்ட நான் தண்ணீர் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர் நோக்கினோம். இருந்த பேதிலும் இலங்கை கடற்படையில் அதற்குரிய ஒழுங்குகளை மேற் கொண்டு தண்ணீர் பெற்றுத்தந்தனர். காலையில் செபமாலை ஆரம்பமாகி முடிவுற்றதும் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது, 

இலங்கை இந்திய அருட்தந்தையர்கள் கூடுதலாக பங்குபற்றி இருந்தனர். இறுதியாக புனிதரின் ஆசீருடன் கொடி இறக்கப்பட்டு அணைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வர அன்றைய காலை உணவை இலங்கை கடற்படையினர் எமக்கு வழங்கி இருந்தனர். நாம் ஆலயத்தை விட்டு வெளியேறி போது கடற்படையினருக்கு நன்றி சொல்லி வெளியேறினோம். மீண்டும் அதே படகில் எமது பயணம் தொடங்கியது வந்ததை போன்றே எம் பயணம் தொடர்ந்தது எதிர் காற்று வீசியதால் படகின் வேகம் சற்று மந்தமாகவே இருந்தது காலையில் 9.30 புறப்பட்ட எமது படகு மதியம் 2.30 மணிக்கு குறிகாட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்தது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு சென்று வந்தவுடன் எனக்கு பல நல்ல செய்தி கிடைத்துள்ளது, நான் கேட்காத பல விடயங்கள் நடைபெற்றுள்ளது. இம்முறை என்னுடன் 09 பேர் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு சென்றிருந்தோம், ஆனால் கத்தோலிக்கர்கள் என இரண்டு பேர் மாத்திரமே சென்றிருந்தோம், மற்றைய அணைவரும் இந்து மத நண்பர்கள் என குறிப்பிடுவதில் பெருமையமைகின்றேன். 03 தடவை இப்புனித பூமியை மிதித்த நான் இன்னும் பல ஆண்டுகள் அவரின் பாதையன்டை சென்று அவரின் ஆசீரை பெற வேண்டும் என நினைக்கின்றேன். எத்தனையோ இடர்களை கடந்து எத்தனையோ முதியோர் தொடக்கம் சிறுவர் வரை அவரை தேடி பயணிக்கின்றார்கள் நீங்களும் ஒரு முறை கச்சத்தீவு அந்தோணியாரிடம் சென்று பாருங்கள்...

புனித அந்தோணியாரின் பக்தர்களில் ஒருவன்

என்றும் அன்புடன் ஜெயா.....

சில பழைய புகைப்படங்கள் ............




















Comments