"பெண்களின் வரலாற்று மாதத்தின்" அடையாளமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஜானு தெரிவு-Battieye.blogspot.com
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் மட்டக்களப்பைச் சேர்ந்த ஜானு முரளிதரன் "பெண்களின் வரலாற்று மாத" த்தின் (Women's History Month) அடையாளமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக வரலாறு, கலாசாரம், சமூகம் போன்றவற்றிற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய பெண்களைக் கௌரவிக்கும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சர்வதேச பெண்கள் தினமாகிய மார்ச் 8 ஆம் திகதியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் "பெண்கள் வரலாற்று மாதம்" என அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் ஜானு முரளிதரன் உட்பட மூன்று பெண்களை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கௌரவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பல மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் லிப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், சமூக சேவகியாகவும், இசை, நடனம், நடிப்பு என பல்துறைக் கலைஞராகவும் தனது ஆற்றல்களை ஜானு முரளிதரன் வெளிப்படுத்தி வருகிறார்.
சமூக சேவைக்காக 2021 ஆம் ஆண்டு "வனிதாபிமான" கிழக்கு மாகாண வெற்றியாளர், 2022 ஆம் ஆண்டு "வளர்ந்துவரும் உதவும் கரங்கள்" எனும் சர்வதேச பெண்கள் சின்னம் மற்றும் 2021ஆம் ஆண்டு குவியம் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது போன்றவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்க தூதரக முகநூலில் (தமிழ் மொழிபெயர்ப்பு):
"மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த ஜானு முரளிதரன் தனது இரண்டு குழந்தைகளையும் 2006 முதல் 2015 வரை முழுநேர இல்லத்தரசியாக வளர்த்தார். தனது கணவரின் மனிதாபிமானப் பணியின் ஆர்வத்தைக் கண்ட ஜானு, இலங்கையர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க மற்றும் மேம்படுத்துவதற்காக அவரது கணவரால் ஸ்தாபிக்கப்பட்ட நாளைய எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் (LIFT) என்ற சமூக சேவை மனிதாபிமான அமைப்பில் இணைந்து கொண்டார்.
அவரது அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் ஐக்கிய அமெரிக்க உதவு நிறுவனம் இலங்கையின் ஆதரவுடன் லிப்ட் நிறுவனம் மட்டக்களப்பு பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் முழுமையான திறனை அடைய உதவுவதில் கவனம் செலுத்தும் பல வேலைத்திட்டங்களை செய்துள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் பள்ளி மாணவர்களுக்கான உதவி மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது என கிழக்கு மாகாணத்தில் மதம் மற்றும் சாதி வேறுபாடின்றி பல திட்டங்கள் இவரால் முன்னெடுக்கப்படுகின்றன.
2022 இல் பெண்கள் சின்னத்தின் சிறந்த வளர்ந்து வரும் உதவிக்கரங்கள் விருதையும் இவர் பெற்றார்.
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு சிறந்த ஒரு உத்வேகத்தை வழங்குகிறார்" என பதிவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment