முடிவுக்கு வரும் இலங்கையின் நெருக்கடி நிலை....
நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் ஒன்று இல்லை. அத்துடன் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றை நடத்துவதனால் பெரிய மாற்றம் ஒன்று வந்துவிடப்போவதில்லை. நாங்கள் ரூபாயை மேலும் வலுவடைய செய்ய வேண்டியதே தற்போது முக்கிய விடயமாகும்.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு 4 வருடங்களாகும் என பலர் கூறினார்கள். ஆனால் 8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும். நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் ஏனைய கட்சியினர் தேர்தலை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். பந்து எங்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. அடித்து ஆட தயாராக இருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மூலம் இலங்கைக்கு பல கதவுகள் திறக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'இலங்கையுடனான இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் உடன்படுகிறோம் என அடுத்த முடிவாக சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிவிப்பை வெளியிடும். அதன் பிறகு முதல் தவணை வெளியாகும்' என அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சுமார் 300 – 350 மில்லியன் டொலர் பெறுவோம் என்று நினைக்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணம் வேறு எங்கும் செல்ல முடியாது. இலங்கை மத்திய வங்கியின் கையிருப்புகளுக்கு நேரடியாக செல்கிறது. அவர்களின் கையிருப்பு அதிகரிக்கும் போது, எங்கள் கடன் வகைப்பாடு அதிகரிக்கிறது. அங்கிருந்து, நாம் பல கதவுகளைத் திறக்கலாம். அவை கடன் பணம் என்ற போதிலும் பணத்துடனான பல அலுமாரிகள் திறக்கப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஒரு ரூபாய் கடன் கூட வாங்க முடியாதென சூழலில் கிடைக்கும் இந்த பணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். பொதுவாக டொலரின் விலை 300 ரூபாய்க்கு அருகில் வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment