கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமோர் மைல் கல் - சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்கள்!!

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமோர் மைல் கல் - சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்கள்!!

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திசார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து செயற்படவுள்ளமை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் யுனான் மாகாண பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது எதிர்காலத்தில் ஒன்றிணைந்த செயற்படவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் பீடங்களின் பீடாதிபதிகள், மையங்களின் இயக்குனர்கள், கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் உட்பட யுனான் மாகாணம் மற்றும் யுனான் பல்கலைக்கழகம் சார்பில் யுனான் மாகாண அரசின் வெளிநாட்டலுவல்கள் அலுவலக இயக்குனர் தலைமையிலான துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
பிராந்திய அபிவிருத்தியை மையமாகக்கொண்டு யுனான் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மிகமுக்கியமாக கல்விசார் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றங்கள் இணைந்த ஆராய்ச்சிகள் ஏனைய சமூக பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் இவ் உடன்படிக்கையின் மூலம் செயற்படுத்தப்பட உள்ளதுடன்,சீனாவின் ஒரு மாகாணத்தின் முழுமையான வள பங்கீட்டுடன் நடைபெறவுள்ள இவ் வேலைத்திட்டங்களில் புதிய தொழில்நுட்ப யுக்திகள், விவசாய வர்த்தகம் சார் புத்தாக்க நடவடிக்கைகள் என்பவை முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகம் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திசார்ந்த நடவடிக்கைகளை ஏற்கனவே பல்வேறு வழிகளில் மேற்கொண்டுவரும் நிலையில், எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் யுனான் மாகாணத்தின் ஆளுநர் கலந்து கொள்ளவுள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments