430 மில்லியன் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 24 வேலைத்திட்டங்கள்......
நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக 25 மாவட்டங்களிலும் நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு இணையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் கடன் திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் (04) திகதி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்கள் மாவட்ட செயலக அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது மாவட்டத்தில் 430 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள 24 வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச அவர்களது வழிகாட்டலுடன் உலக வங்கி கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த நீர் உதவி மற்றும் நீர் வழங்கல் முகாமைத்துவ கருத்திட்டம் மற்றும் காலநிலைத் தாக்கங்களைக் குறைப்பதற்கான பல்கட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு செயற்படுத்தவுள்ளமையினை முன்னிட்டு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் தமது நன்றிகளை விவசாயிகள் இதன்போது தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு கிராமத்திலுள்ள வயல் வீதி மற்றும் வடிகால் புனரமைப்பு வேலைத்திட்டங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment