2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான திகதி ஏப்ரல் 25 - தெரிவத்தாட்சி அலுவலர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிடுவர்
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான திகதி ஏப்ரல் 25 - தெரிவத்தாட்சி அலுவலர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிடுவர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதி என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு இதனை அறிவித்துள்ளதாக இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இது தொடர்பான மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பாராத காரணங்களால் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய திட்டமிட்டபடி 2023 மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை மார்ச் 09 இற்கு முன் அறிவிக்கவுள்ளதாக, கடந்த வாரம் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதாக கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
அதன் பின்னர், 2023 வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வித தடையுமின்றி விடுவிக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கடந்த வாரம் (03) உத்தரவு பிறப்பித்திருந்தது.
தேர்தலுக்கு நிதி வழங்கக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை பரிசீலிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த மனு பரிசீலனை எதிர்வரும் மே 26ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் நீதிமன்றத்தின் குறித்த உத்தரவின் பின்னர் அதே தினத்தில் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகர், உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை இவ்வார ஆரம்பத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment