'ஏழு ஸ்வரங்களுக்குள்...' எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்.....
தமிழ்த் திரை உலகில் மட்டுமல்ல, இந்தியத் திரை உலகிலும் மறக்க முடியாத குரல்களில் ஒன்றான வாணி ஜெயராம், மெல்ல வருடும் பாடல்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.
வேலூர் மாவட்டத்தில் துரைசாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதியின் மகளாக 1945ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்த வாணி ஜெயராமின் இயற்பெயர் கலைவாணி.
இவரது பெற்றோருக்கு ஆறு மகள்கள், மூன்று மகன்கள் என மிகப் பெரிய குடும்பம். கலைவாணி அதில் ஐந்தாவது மகள்.
இசைப் பாரம்பரியமுள்ள குடும்பம் என்பதால் ஐந்து வயதுக்குள்ளாகவே கர்நாடக இசைப் பாடல்களின் பல்வேறு ராகங்களை அவரால் அடையாளம் காண முடிந்தது. கடலூர் சீனிவாச ஐயங்கார், டி.ஆர்.பாலசுப்பிரமணியன், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் தொடர்ந்து கர்நாடக இசையைக் கற்று வந்த அவர், எட்டாவது வயதில் சென்னை அகில இந்திய வானொலியில் முதல் முறையாகப் பாடினார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் கலைவாணி. சென்னையில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தது. இதற்குப் பிறகு 1967வாக்கில் அவர் ஹைதராபாதுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், சாஸ்த்ரீய இசையில் பெரும் ஆர்வம் கொண்டவரும் ரசிக ரஞ்சனி சபா நிறுவனருமாக இருந்தவர் எஃப்.ஜி. நடேச ஐயர். இவருடைய மகள் பத்மா சுவாமிநாதனின் மகன் ஜெயராம் சுவாமிநாதனுக்கும் கலைவாணிக்கும் திருமணமானது.
இதற்குப் பிறகு கலைவாணியும் ஜெயராமும் மும்பைக்குக் குடிபெயர்ந்தனர். தனது வங்கிப் பணியையும் மும்பைக்கு மாற்றிக்கொண்டார். சிறுவயதிலிருந்தே சினிமாவில் பாடும் ஆசை கலைவாணிக்கு இருந்தது. அவரது கணவர் ஜெயராம், அவரை இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தவே, உஸ்தாத் அப்துல் ரெஹ்மான் கானிடம் இந்துஸ்தானி இசையைப் பயின்றார். இந்தத் தருணத்தில் தனது வங்கி பணியை விட்டுவிட்டு, இசையையே வாழ்க்கையாகக் கொள்ளத் தீர்மானித்தார் வாணி ஜெயராம். இந்துஸ்தானி இசையின் தும்ரி, கஜல், பஜன் ஆகியவற்றின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்ட அவர், 1969ல் மேடையில் அறிமுகமானார்.
அப்போது, இந்திப் படங்களின் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான வசந்த் தேசாயின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவர் கலைவாணிக்கு புரனன என்ற படத்தில் மூன்று பாடல்களைப் பாடும் வாய்ப்பை அளித்தார். இந்துஸ்தானி ராகமான மியான் மல்ஹரில் அமைந்த 'போலே ரே பப்பி ஹரா' என்ற பாடல் அதில் பெரும் பிரபலமடைந்தது. இந்திப் படங்களில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த பாடல்களுக்கு வழங்கப்படும் விருதான தான்சேன் சம்மான் விருது அந்தப் பாடலுக்கு வழங்கப்பட்டது. இதே பாடலுக்கு அடுத்தடுத்து பல விருதுகள் வழங்கப்பட்டன. இதற்குப் பிறகு பல புகழ்பெற்ற இந்தி இசையமைப்பாளர்களின் படங்களில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
'மல்லிகை... என் மன்னன் மயங்கும்'
1973 வாக்கில் தமிழ்த் திரையுலகில் நுழையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்த தாயும் சேயும் படத்தில் முதல் முதலாக ஒரு பாடலைப் பாடினார் வாணி ஜெயராம். ஆனால், அந்தப் படம் வெளியாகவேயில்லை. இதற்குப் பிறகுஇ சங்கர் - கணேஷ் இசையில் வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுடன் 'ஓர் இடம் உன்னிடம்' என்ற பாடலைப் பாடினார். அவர் பாடி தமிழில் வெளியான முதல் பாடல் இதுதான்.
ஆனால், 1974ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தீர்க்க சுமங்கலி படத்தில் வாலி எழுதிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல்தான் அவரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் அறிமுகம் செய்தது.
1975ஆம் ஆண்டில் தமிழின் முன்னணி பாடகியாக உயர்ந்தார் வாணி ஜெயராம். அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பாடிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்', 'கேள்வியின் நாயகனே' ஆகிய பாடல்களுக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.
இதற்குப் பிறகு, எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் - கணேஷ், கே.வி. மகாதேவன், விஜய பாஸ்கர் படங்களில் தொடர்ந்து பாடிவந்தார் வாணி ஜெயராம். 1980ம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் படத்திற்கு அவர் பாடிய பாடலுக்காக மறுபடியும் இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றார் வாணி ஜெயராம். 1991ல் சுவாதி கிரணம் படத்திற்காக மூன்றாவது முறையாகவும் அந்த விருதைப் பெற்றார் வாணி ஜெயராம்.
புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் முதன் முதலில் இளையராஜாவின் இசையில் பாடினார் வாணி ஜெயராம். இதற்குப் பிறகு, இளையராஜாவின் இசையிலேயே அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் அவர் பாடிய 'நானே நானா' பாடலுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது வழங்கப்பட்டது.
1994ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடினார் வாணி ஜெயராம். வண்டிச்சோலை சின்னராசு படத்தில் 'எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார் அவர். டூயட் பாடல்களைப் பொறுத்தவரை டி.எம்.சௌந்தரராஜனில் இருந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வரை பலருடன் இணைந்து பாடியிருக்கிறார் வாணி ஜெயராம்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் திரையிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம்.
பல முறை மத்திய, மாநில அரசின் விருதுகளையும் ஃபில்ம் ஃபேர் விருதுகளையும் வென்றிருக்கும் வாணி ஜெயராமுக்கு 1991ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இவரது கணவர் ஜெயராம் 2019ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
Comments
Post a Comment