யப்பானியர்கள் முழங்கிய ‘தமிழ்ப் பறையோசை’…….

 யப்பானியர்கள் முழங்கிய ‘தமிழ்ப் பறையோசை’…….

கடந்த பெப்ரவரி (04)ம் திகதியன்று, யப்பான் தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவிலே, பல அற்புதங்கள். அதில் ஒன்று யப்பானியப் பெண்களால் நடத்தப் பெறும் ‘நிருத்தியாஞ்சலி’ குழுவினர் நடத்திய பறையாட்டம் மற்றும் கரகாட்டம் நிகழ்வு.
Tokyo Sacred Heart பல்கலைக் கழகத்தில், தென்கிழக்காசிய பாரம்பரியக் கலைகள் குறிப்பாக இந்தியக் கலைவடிவங்கள் பற்றிய பட்டப் படிப்பினை மேற்கொண்டு (Ph.D) முனைவர் பட்டம் பெற்ற Dr Taeko Kurokawa, யப்பானில் திண்டுக்கல் ‘சக்தி’ குழுவினர் நிகழ்த்திய ‘பறை இசை’ நிகழ்ச்சியால் கவரப்பட்டு, தமிழகம் சென்று, சந்தவாசல்-Dalit Resource Centerலும்- திண்டுக்கல்-Sakthi Cultural Centreலும் முறையாகப் பறையாட்டக் கலை கற்றுத் திரும்பி, 2002ம் ஆண்டு பறையாட்டம் பற்றிய தனது ஆய்வினை யப்பானிய மொழியில் Osaka பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து அதிலும் Ph.D.முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருடன் நிதி முகாமைத்துவ நிறுவனமொன்றில் பணியாற்றும் Toko Mutoவும். இணைந்து உருவாக்கிய இந்த ‘நிருத்தியாஞ்சலி’ நாட்டியப் பள்ளியில் பறையாட்டம் மட்டுமன்றி பரத நாட்டியமும், தமிழ்க் கிராமிய நடனங்களும் கற்றுத் தரப்படுகின்றன.
பொங்கல் விழா மேடையில் இவர்களோடு யப்பானியப் பெண்மணிகளான Shiori Kubota, Aki Miyata, Wakako Abo, ஆகியோரும், அவர்களிடம் பறையாட்டம், கரகாட்டம் பயின்ற நம் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் இணைந்து, ஆனந்தக் களிப்புடன் ஆடிய ஆட்டம், கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
புலம் பெயர்ந்து வாழும் நாட்டிலே, அந்நாட்டு மக்களையும் இணைத்துக்கொண்டு, தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்களை பெருமையுடன் வளர்த்துவரும் ‘யப்பான் தமிழ்ச் சங்கத்தினருக்கு’ நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்நிகழ்வில் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீட் அவர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்


Comments