உலகக் கிண்ண வலைபந்தாட்ட இலங்கை குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம்....

 உலகக் கிண்ண வலைபந்தாட்ட இலங்கை குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம்....

தென் ஆபிரிக்காவில் இவ் வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 20 வீராங்கனைகளைக் கொண்ட தேசிய வலைபந்தாட்ட உத்தேச குழாத்தில் இலங்கையின் முன்னாள் அணித் தலைவியும், நட்சத்திர மற்றும் சர்வதேச அரங்கில் அதிக கோல்களைப் போட்ட சாதனை வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கமும் இடம்பெறுகிறார்.

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை குழாத்தில் இணைவதற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது வாழ்ந்து வரும் தர்ஜினி சிவலிங்கம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளன ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

தர்ஜினி சிவலிங்கம் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவருவதன் மூலம் அவரது ஆற்றல்களை வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவரது வருகை அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் எனவும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாச தெரிவித்தார்.

2018, 2022 ஆகிய இரண்டு ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை சம்பியனாவதற்கு பெரிதும் உதவிய தர்ஜினி சிவலிங்கம், இங்கிலாந்தின்  லிவர்பூலில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு சாதனை நிலைநாட்டியிருந்தார்.

அத்துடன் முன்னாள் அணித் தலைவிகளான செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்துராங்கி ஜயசூரிய, சமகால தலைவி கயஞ்சலி அமரவன்ச, உதவி அணித் தலைவி துலங்கி வன்னிதிலக்க ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுவது இலங்கையை மேலும் பலப்படுத்துவதாக அமைகிறது.

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் சம்பியனான அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளும் உத்தேச குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

உத்தேச குழாம்:

தர்ஜினி சிவலிங்கம், செமனி அல்விஸ், கயனி திசாநாயக்க, திசலா அல்கம, சத்துராங்கி ஜயசூரிய, கயஞ்சலி அமரவன்ச, துலங்கி வன்னித்திலக்க, ஷானிக்கா பெரேரா, ஹன்சிமா திசாநாயக்க, இமாஷா பெரேரா, ரஷ்மி பெரேரா, ருக்ஷலா ஹப்புஆராச்சி, பாரமி கொடிதுவக்கு, சமுதி விக்ரமரட்ன, மல்மி ஹெட்டிஆராச்சி, தரூஷி நவோத்யா, துலஞ்சலி சுரவீர, காயத்ரி கௌஷல்யா, இஷானி மதுஷிக்கா, பாஷினி யோஷித்தா (சுகயீன விடுமுறை).

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண  வலைபந்தாட்டத்தில் சிங்கப்பூரை வெற்றி கொண்டு ஆசிய சம்பியனானதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட ஆசிய வலயத்தில் இருந்து இலங்கை தகுதிபெற்றது.

16 நாடுகள் பங்குபற்றும் 16ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஜெமெய்க்கா, வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் C குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை சந்திக்கவுள்ளது.

முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ் மற்றும் நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும்.


 

Comments