இலங்கையின் முதல் சுதந்திர தினம்......

 இலங்கையின் முதல் சுதந்திர தினம்...


இலங்கை பிரித்தானியாவிடமிருந்து விடுதலை   பெற்றதும் கொண்டாடப்பட்ட இலங்கையின் முதல் சுதந்திர தினம் இவ்வாறே இருந்தது,

அன்று நாடே கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது. மக்கள் எல்லா இடங்களிலும் கூட்டமாக தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு கூடியிருந்தார்கள். தூர இடங்களில் இருந்தும் அநேகமானோர் கொழும்புக்கு வந்திருந்தார்கள்.

இலங்கை போக்குவரத்துச் சபை வாகனங்கள் இல்லாத காலத்தில் அவர்களுக்கு தனியார் பஸ் வாகனங்களே உதவின. ரயில் வண்டிகளில் தங்களால் முடிந்த அளவுக்கு சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள்.

லேக் ஹவுஸ், துறைமுகம் உள்ளிட்ட கொழும்பின் கட்டடங்கள் அனைத்தும் சுதந்திரக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 'ரேடியோ சிலோன்' நிகழ்ச்சிகளை அனைவரும் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். களனி ரஜமஹா விஹாரையிலிருந்து பிரித்தோதும் நிகழ்ச்சியும் அதில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டது. மேலும் சிறிய குற்றங்களைப் புரிந்த கைதிகள் 1886 பேர் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டார்கள்.

அது மாத்திரமல்ல சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் மத வழிபாடுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. வெளிநாட்டு தூதுவர்கள், விருந்தினர்கள் என முதலாவது சுதந்திரத்தினத்தை கொண்டாடுவதற்காக வருகை தந்திருந்தார்கள்.

இலங்கையின் சுதந்திர தினத்தின் பிரதம அதிதி இங்கிலாந்தின் ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் இளைய சகோதரர் க்ளோஸ்டர் பிரபு ஆவார். பிரித்தானியர்களால் கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் அரசனின் சிம்மாசனம், கிரீடம் இவாள் உள்ளிட்ட அனைத்தையும் 1934ஆம் ஆண்டு மீளஅளிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நாட்டின் ஆளுநர் மாளிகையில் இருந்து ஊர்வலமாக அதிதிகள் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படும் சுதந்திர சதுக்கத்திற்கு ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்டார்கள். அதிதிகளுக்கு வழிநெடுகிலும் மக்கள் வாழ்த்துத் தெரிவித்தார்கள். கொழும்பு மேயர் உள்ளிட்ட உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டார்கள்.

கொழும்பு அளுத்கடை பிரதேசத்தில் இருந்து ஊர்வலத்தில் வந்த நீதிமன்ற நீதிபதிகளும் இந்த ஊர்வலத்தில் பர்சன் சந்தியில் இணைந்து கொண்டார்கள். சுதந்திர தின மேடை மிகவும் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. அது இந்நாட்டின் அநுராதபுரம், பொலனறுவை அரச இராச்சியங்களை நினைவூட்டியது. அன்றைய அரச சபையின் தோற்றத்தை ஒத்திருந்தது.

சந்திரவட்டக்கல் கொண்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஏறி வருபவர்களின் கண்களை கவரும் விதமாக விசேட மண்டபமொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் சிம்மாசனம், கிரீடம், அரசவாள் என்பன வைக்கப்பட்டிருந்தன. அந்த மேடைக்கு பிரதிநிதிகள் அழைத்து வரப்பட்டார்கள். தற்போது அனைவரும் அந்த சுபவேளையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ரேடியோ சிலோன் ஊடாக மல்வத்துமஹாநாயக தேரர், அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் ஆகியோர் நாட்டின் சுதந்திரம் பற்றி ஆற்றிய உரைகள் ஒலிபரப்பாகின. மதத்தலங்களில் மணியோசையுடன் இசைக்கருவிகளின் ஓசைகளும் வானைப் பிளந்தன.

காலை 10.30 க்கு க்ளோஸ்டர் பிரபு உள்ளிட்ட அதிதிகள் மண்டபத்துக்கு பிரவேசித்தவுடன் அரச பீரங்கி படையினரின் 21 மரியாதை வேட்டுக்கள் முழங்கின.

அதன் பின்னர் படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. அன்றைய தினம் தேசிய கீதமாக ஸ்ரீலங்கா மாதா- பாலா யஸ மஹிமா கீதம் நொத்தாரிசான பி. பி.இலங்கசிங்கவால் எழுதப்பட்டு லயனல் எதிரிசிங்கவால் இசையமைக்கப்பட்டு இருந்தது. இந்த எளிமையான சுதந்திர தின கொண்டாட்டம் 10 நிமிட நேரமே நடைபெற்றது.

அன்று பாடசாலை சிறுவனாக இருந்த சோம ஸ்ரீ கஸ்தூரி ஆராய்ச்சி அதனை இவ்வாறு விபரித்தார். 'பெப்ரவரி நான்காம் திகதி எமது பாடசாலையின் அதிபர் பாடசாலை மைதானத்தில் நடப்பட்ட தூணில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் எல்லோரும் கரகோஷம் எழுப்பினோம். எமது பாடசாலையில் உயர்வகுப்பு மாணவிகள் லமா சாரி அணிந்து கொண்டு எமது கைமுனு, கஜபா, விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற அரசர்கள் மற்றும் கெப்பட்டிபொல போன்ற வீரர்களினதும் புகழ் பற்றி பாடினார்கள். அதைக் கேட்ட எமது பிஞ்சு மனங்களில் தேசாபிமானம் துளிர் விட்டது'.


Comments