வெளிநாட்டில் ஆடச் சென்ற வீரர்கள் இலங்கைக்கு திரும்ப அழைப்பு: டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவதற்காக....
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் T/20 லீக் போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் சிலரை மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைக்க கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் இந்த வீரர்கள் அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. இதன்படி தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோசன் திக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகிய வீரர்களை தேர்வுக் குழுவினர் தாய்நாட்டுக்கு அழைக்கவுள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையிலேயே இவர்கள் அழைக்கப்படவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் தேசிய சுப்பர் லீக் தொடரில் இந்த வீரர்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. காலி, கண்டி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றிருக்கும் இந்தத் தொடரில் நான்கு நாட்கள் கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும் தேசிய சுப்பர் லீக் போட்டிகள் நடைபெறும் காலத்தில் இலங்கை தேசிய அணி வீரர்கள் பலரை வெளிநாட்டு T/20 போட்டிகளில் விளையாடுவதற்கு விடுவித்திருப்பது தொடர்பில் கடும் விமர்சனம் எழுந்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் தேசிய விளையாட்டு சபை மற்றும் தேசிய தேர்வுக் குழு அவதானம் செலுத்தி இருக்கும் பின்னணியிலேயே இந்த வீரர்கள் திருப்பி அழைக்கப்படவுள்ளனர்.
Comments
Post a Comment