உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் மேலும் தாமதமாகும்....
க.பொ.த. உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை மறுதினம் (22ம் திகதி ) முதல் மதிப்பீடுகள் தொடங்குவதாக இருந்தது. எனினும் அந்தந்த பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகளை, மதிப்பீட்டு பணிக்கு தயார் செய்ய, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மறுத்ததால் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதுடன், அதிகரிக்கப்படவுள்ள கொடுப்பனவுகள் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டுமென அமைச்சரவை தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம், மதிப்பீட்டு ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அங்கீகாரம் வழங்குமாறு பரீட்சை திணைக்களம் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், நிறுவன பணிப்பாளர் நாயகம் கோரிக்கையை அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் சில பாடங்களின் மதிப்பீட்டிற்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததால் குறித்த பாடங்களின் மதிப்பீட்டிற்கு மீண்டும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை கோர தேர்வுத்துறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
Comments
Post a Comment