தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி விடுவிக்குமாறு கோரல்......

 தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி விடுவிக்குமாறு கோரல்......

இலங்கையில் ஒரு உள்ளுராட்சி சபை தவிர்ந்த, ஏனைய அனைத்து உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளமையால், மேலும் ஒரு வருடகாலம் அமைச்சருக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இத்தேர்தல் 2023 ஆம் ஆண்டில் நடாத்துவதற்காக தேர்தல் ஆணைக்கழுவின் வேண்டுகோளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழு குறித்த தொகையை நிதி அமைச்சிடம் கோரியதாக வெகுசன ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் அது தொடர்பாக அமைச்சினால் முன்னேற்றகரமான பதில்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பின் 104ஈ உறுப்புரைக்கமைய தேர்தலை நடாத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்துவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவது அனைத்து அரச அலுவலர்களின் பொறுப்புப் பற்றி அரசியலமைப்பின் 104ஈ(2) உறுப்புரை தொடர்பாக தங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

உள்ளுராட்சி சபை தேர்தலை உரிய வகையில் நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட ஒருசிலரால் அடிப்படை மனித உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டதுடன், தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவானது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வழங்கியுள்ள வாக்குறுதியின் அடிப்படையிலேயேஇ குறித்த மனு மீதான ஆணை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்படவில்லை.

அத்துடன் உள்ளுராட்சி சபை தேர்தல் நடாத்தப்படுவதை மறுத்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், தபால் மூல வாக்கெடுப்பு பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் தேர்தலின் தொடர் செயற்பாடுகளுக்கு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான நிதியை துரிதமாக விடுவிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

குறிப்பாக அரசியலமைப்பின் பிரகாரம் நிதிக்கட்டுப்பாடுகள் தொடர்பான அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தால், நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் என்பது, பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளை சவாலுக்குட்படுத்துவதுடன், பாராளுமன்றத்தை நகைப்புக்குட்படுத்துவதாகவும் அமையும் என்பதை நாம் குறிப்பிட்டுக் கூற விரும்புவதுடன், வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் பணியை மேற்கொண்ட அமைச்சே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுவிக்காவிடின், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் ஏனைய நிதியொதுக்கீடுகள் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளமையை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

அத்துடன், அரசியலமைப்பின் 104எஎ(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் தேர்தல் ஒன்றை நடாத்துவது அல்லது மக்கள் தீர்ப்பொன்றை நடாத்துவது தொடர்பிலான ஏதேனும் சட்டத்தினை வலுவுக்கிடலை உறுதிப்படுத்துவதற்கு ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைவதற்கு நியாயமான காரணமன்றி மறுக்கின்ற அல்லது தவறுகின்ற: பகிரங்க அலுவலர் ஒருவர் தவறொன்றைப் புரிந்தமைக்கான குற்றமொன்றாகும். எனக் குறிப்பிட்டுள்ள உறுப்புரை மீது கவனத்தை செலுத்துமாறு நாங்கள் வேண்டிநிற்பதுடன், மக்கள் இறைமையின் அடிப்படைக் கூறாக அமைகின்ற தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு குறித்த நிதியை விடுவித்து ஒத்துழைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்விடயம் மக்களுக்குரிய முக்கிய விடயமாக அமைவதால், இக்கோரிக்கைக் கடிதம் வெகுசன ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தப்படுகின்றமையை மேலும் தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Comments