யாழில் பெண் ஒருவர் அடித்துக் கொலை - விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்......
யாழ்.அத்தியடிப் பகுதியில் சுப்பிரமணியம் கலாநிதி (வயது-54) என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த குடும்பம் நாவற்குழிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சில வருடங்களுக்கு முன்பே அத்தியடிப் பகுதியில் வீடு வாங்கி குடியமர்ந்தனர் என்றும் கொல்லப்பட்ட பெண் நீண்ட காலமாகக் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொல்லப்பட்ட பெண்ணும், 24 வயதுடைய அவருடைய மகளுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தலையின் பின் பக்கத்தில் பிக்கான் ஒன்றினால் தாக்கியதாலேயே பெண் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு நபர் வரும் வேளைகளில் வீட்டுக்கு முன்பக்கத்தில் நடமாட வேண்டாம் என மகளுக்குத் தாய் கண்டிப்பாகக் கூறியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் குறித்த நபர் வரும் போது தான் அறைக்குள் இருந்ததாக மகள் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் மாலை 3.30 மணியளவில் அம்மா பெரிதாக அலறும் சத்தம் கேட்டதாகவும், மாலை 6 மணியளவில் வீட்டு வேலைக்கு வந்தவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டதாகவும் மகள் தெரிவித்துள்ளார். 6.30 மணியாகியும் அம்மா வராத நிலையில் பின் பக்கத் கதவு வழியாகச் சென்று பார்த்தபோது அம்மா தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டார் என்றும் மகள் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வீட்டுக்குள் இருந்து முன்பக்க கதவு வழியாக வருபவர்களைக் கொலை செய்யும் நோக்கில் இரும்புக் கம்பியால் மின்சார இணைப்பை ஏற்படுத்தி விட்டே அந் நபர் தப்பிச் சென்றுள்ளார். அத்துடன் குறித்த வீட்டில் செய்வினை, சூனியம் செய்யும் பல பொருட்கள் காணப்பட்டதுடன். சுமார் 30 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டது. குறித்த பணம் நாவற்குழியில் காணி விற்பனை செய்த பணம் என தெரியவந்த நிலையில் பணத்தை மகளின் வங்கிக் கணக்கில் பொலிஸார் வைப்பிலிட்டுள்ளனர்.
தச்சன் தோப்பில் உள்ள கொலைச் சந்தேக நபரின் வீட்டுக்குப் பொலிஸார் சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிள் மட்டுமே காணப்பட்டது. அவர் வீட்டிலிருக்கவில்லை. எனவே அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment