நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை...
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2022/2023 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குவதும், மேலதிக நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்வதும், தற்போதைய கடினமான பொருளாதார நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
2022/2023 பெரும் போக நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாவட்டச் செயலாளர்களால் நாட்டரிசி வகை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதன்படி, அதிகபட்ச ஈரப்பதம் 14% மற்றும் 9% தரம் குறைந்த 01 கிலோ நெல் 100 ரூபாவிற்கும், 14% இனை மிஞ்சும் மற்றும் 22% அல்லது அதற்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட 01 கிலோ நாட்டரிசி வகை நெல் 88 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும்.
நெல் கொள்முதல் நடவடிக்கையின் போது அது தொடர்பான நெல்லை கையேற்பது களஞ்சியப்படுத்துவது அதனுடன் தொடர்புள்ள ஆவணங்களைப் பேணுவது, கணக்குகளை வைத்திருத்தல் ஆகிய பொறுப்புகள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு, வழங்கப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்படும் நெல் கையிருப்பு உடனடியாக அரிசியாக மாற்றப்பட்டு 2023 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், நெல்குத்தும் பணியை நிறைவு செய்யும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் நெல் குத்தும் திறனை பரிசீலித்து, நெல்லை கொள்முதல் செய்ய தேவையான பணம், ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
பயிரிடப்பட்டுள்ள, நிலப்பரப்பிற்கு அமைய, விவசாயி ஒருவரிடமிருந்து அதிகபட்ச மாக 01 ஏக்கர் வரை 2,000 கிலோவும், 1-2 ஏக்கர் வரை 4,000 கிலோவும், 02 ஏக்கருக்கு மேல் 5,000 கிலோவும் நெல் கொள்வனவு செய்யப்படும்.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தை ஆரம்பிக்கத் தேவையான நிதி குறித்து மாவட்ட செயலாளர்களினால் திறைசேரி அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.
இதன்படி, அபிவிருத்தி நிதித் திணைக்களத்தினால் நேரடியாக மாவட்ட செயலாளர்களுக்கு திறைசேரி நிதியை ஒதுக்க த் தேசிய வரவு செலவுத் திணைக்களத்திற்கும் தேவையான முற்பணத்தை வழங்க, திறைசேரி செயற்பாட்டு திணைக்களத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கப்படும்.
இதன்படி, தேசிய வரவு செலவுத் திணைக்களம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு நேரடியாக வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை வழங்கு வதுடன் திறை சேரி செயற் பாட்டுத் திணைக்களம் குறித்த மாவட்டச் செயலாளர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை வழங்கும்.
நெல் கொள்முதல் திட்டத்துக்கான நிதி, தேவைக்கு ஏற்ப அவ்வப்போது திறைசேரியால் வழங்கப்படும்.
தங்கள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து மாத்திரமே நெல் கொள்முதல் செய்யப்படுவதை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பெயரில் வழங்கப்பட் ட கட்டணச் சான்றிதழை இலங்கை வங்கி, மக்கள் வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளையில் சமர்ப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வங்கியினால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தேவையான தொகையை உடனடியாக வரவு வைக்கும்.
பெரும் போகத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல் கையிருப்பு அரிசாக மாற்றப்பட்டு அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை உள்வாங்கும் வகையில், ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் இரண்டு மாத காலத்திற்கு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மகளிர் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் வெளியிடப்படும்.
நெல் கொள்முதல் திட்டத்தை வெற்றியடையச் செய்ய மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய, நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதோடு களஞ்சியத்திலுள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்புகளை பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை ஈடுபடுத்துதல், நெல் கொள்வனவின் போது செயல்பாட்டு செலவுகள் குறித்த தொடர்பான நிதி விதி முறைகள், சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய அரச அனுமதிகளுக்கு உட்பட்டு செயற்படுவதற்கு அதிகாரி ஒருவரை நியமிப்பதும் இதில் அடங்கும்.
இந்தத் திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி அரச செலவை மட்டுப் படுத்தி, அறுவடைக் காலத்தில் முழு அரச சேவையும் அர்ப்பணிப்புடனும் முன்மாதிரியா கவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment