பிரதேச விளையாட்டு கழகங்கள் சகல விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்ட வேண்டும்! - உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் வேண்டுகோள்......

 பிரதேச விளையாட்டு கழகங்கள் சகல விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்ட வேண்டும்! - உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் வேண்டுகோள்......

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கு, ஓட்டமாவடி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) இடம்பெற்றது.
இதன் பொது கருத்துத் தெரிவித்த உதவிப் பிரதேச செயலாளர் எஸ். எம்.அல் அமீன் "விளையாட்டுக் கழகங்கள் கிரிக்கட் மற்றும் கால்பந்து போன்றவற்றில் மாத்திரம் கவனம் செலுத்தாது, ஏனைய விளையாட்டுக்களிலும் ஆர்வம் காட்டுவது அவசியம்" இதன் மூலம் இளைஞர்களை தேசிய மட்டம் வரை கொண்டு செல்வதற்கும், போதை பாவனையிலிருந்து பாதுகாப்பதற்கும் ஏதுவாக அமையயும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய உதவிப் பிரதேச செயலாளர், வீரர்கள் ஒரு கழகத்திலிருந்து விலகி வேறு கழகங்களுக்காக விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு பொருத்தமான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
அதற்காக, பதிவு செய்யப்பட்ட கழகங்களிலிருந்து ஒவ்வொரு உறுப்பினர் வீதம் உள்வாங்கப்பட்டு குழுவொன்றை அமைத்து அதனூடாக குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுதல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களால் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டதுடன் அவற்றுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.இன்ஷாத் அலி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.இம்தியாஸ், ஓட்டமாவடி பிரதேசத்தில் செயற்படும் 14 பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவிற்காகக் காத்திருக்கும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments