75 வது சுதந்திர தின விழா களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில்....
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் (04)ம் திகதி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நான்கு கட்ட நிகழ்வுகளாக இடம்பெற்றது.
பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதனை தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், தேச விடுதலைக்காக உயிர்நீத்தோருக்காக இரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தற்கால சூழலில் உணவுப்பாதுகாப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்களினால் 75வது சுதந்திர தின விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் டெங்கு பரவலை தடுத்தல், சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பசுமை மேம்பாடு அடிப்படையில் அலுவலக வளாகத்தினுள் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த நிகழ்வாக களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் 75 வகையான பழமரக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டதுடன், நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு சுபீட்ஷமான வாழ்க்கைக்கான பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இறுதி நிகழ்வாக களுதாவளை 4 சாந்திபுரம் கிராம சேவகர் பிரிவில் இடர்களை எதிகொள்ளும் 75 குடும்பங்களின் உணவுப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் வாழ்வாதார உதவிகளும், கடன் திட்டங்களும் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆலய நிருவாகத்தினர், மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment