மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொழுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை.......
மட்டக்களப்பில் தொழுநோய் தொடர்பான கருத்தரங்கு மாவட்ட போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், தொழு நோய்க்கான இலங்கையிலுள்ள அமைப்புகள், பிருத்தானிய தொழுநோய் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இலங்கையில் மேல்மாகாணத்தில் முதலாவதாக தொழுநோய் வைத்திய சாலை 17ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டம் முதலாவது இடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது இடத்திலும் குறிப்பாக சிறுவர்களுக்கு தொழு நோய் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.
இதன்போது "மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயை கட்டுப்படுத்த வைத்தியர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் செயற்பாட்டினால் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் விரைவில் கட்டுப்படுத்துவோம்" என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் இதன்போது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "மட்டக்களப்பில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததனால் அது தொடர்பான ஆய்வொன்றை முன்னெடுத்ததுடன், இந்தியாவில் தொழுநோய் பற்றிய பயிற்சியையும் பூர்த்தி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பிருத்தானிய தொழுநோய் அமைப்பின் உதவியுடன் இந்நோய் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, பிருத்தானிய பல்கலைக்கழகம் ஒன்றின் பங்களிப்புடன் கிழக்கு பல்கலைக்கழ மருத்துவ பீடமும் மாவட்ட சுகாதார வைத்திய பணிமனையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இணைந்து செயற்படவிருப்பதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தோல் வைத்திய நிபுணர் என்.தமிழ்வண்ணன், கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடாதிபதி வைத்தியர் சதாநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர் ரோஷினி, பிருத்தானிய தொழுநோய் அமைப்பின் தலைவர் பீட்டர், கே.கே.எம்.அருட்தந்தை ஜோசுவா, ஏ.டி.ரி அமைப்பின் தலைவர் மற்றும் துறை சார்ந்தவர்கள் என பலர் பங்குபற்றினர்.
Comments
Post a Comment