அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்; ஜனாதிபதியின் உரை......

 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்; ஜனாதிபதியின்  உரை......

9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது  கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்  (08) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரை வருமாறு:

கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நான் சிந்தித்தேன். இந்த மாணவ மாணவிகளின் மனங்களில் அவர்களது எதிர்காலம் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை காணப்படுகின்றதா?

சுதந்திர தின நிகழ்வுக்காக இலங்கைக்கு வந்த பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர்  பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அண்மையில் எமது நாட்டின் இளைஞர் குழுக்களுடன் கலந்துரையாடினார். அதன் போது பெரும்பாலான இளைஞர் யுவதிகள், நீண்ட காலமாக இடம் பெற்று வந்த விடயங்கள் காரணமாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையினை இழந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர் யுவதிகளின் மனங்களில் எதிர்காலம் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை காணப்படுகின்றதா?

சுதந்திர தினத்துக்குப் பிந்திய தின ஞாயிறு சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விசேட சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. மதீசா உடவத்த இவ்வாறு கூறுகின்றார்.

While leaving the country is a constant resonating thought, there is still a smallest spark inside me that’s holding me close to home. I intend not let it die. I have not given up on my Sri Lanka yet.

'நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் என் மனதில் அடிக்கடி உதித்த போதும் எதிர்பார்ப்பின் சிறியதோர் ஒளிவிளக்கு இன்னமும் என் மனதில் ஒளிர்விடுகிறது. அது இந்த மண்ணுக்கு என்னை சமீபமாக்குகிறது. நான் இன்னமும் இலங்கையை கைவிடவில்லை.'

கிளிபேர்ட் பிரணாந்து இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்.

I won’t migrate but I sincerely hope here will be change in Sri Lanka. All our attitudes need to change, better discipline is needed, pepole need to obey rules and show more empathy towards each other – Clifford Fernando

'நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நான் எண்ணாத போதும் இலங்கையில மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கின்றேன். நம் அனைவரதும் மனோபாவங்கள் மாற்றமடைய வேண்டும். நாம் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். மற்றவர்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும்.'

சிலானி விஜேசிங்க இவ்வாறு கூறுகின்றார்:

I dont want to leave my country – I want to help it out of the situation it is in currently. I also dont want the people leaving at a time the country needs them the most,only to come back when higs are better. – Cilani Wijesinghe

'நான் எனது நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். தற்போது நாடு அடைந்துள்ள நிலைமையிலிருந்து மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேவை எனக்குள்ளது. இந்த நெருக்கடியான, நாட்டுக்கு மனிதவளம் அத்தியவசியமான வேளையில் நாட்டை விட்டுச் சென்று நிலைமை சீரான பின்னர் மீண்டும் வருபவர்கள் எனக்குத் தேவையில்லை.'

இக்கருத்துக்களை வாசிக்கின்ற போது அண்மையில் அநுராதபுரத்தில் என்னைச் சந்திப்பதற்கு வந்த இரட்டை சகோதரிகள் ஞாபகத்துக்கு வருகின்றனர். பல்லேகம ஹேமரதன தேரர் அவர்களுக்கு நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வின் இறுதியில் இந்த இரண்டு சிறுமிகளும் என்னைச் சந்தித்தனர். அவர்கள் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்கின்றார்கள். அவர்களின் பெயர் நமதி பெரேரா மற்றும் செனுதி பெரேரா. அவர்கள் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள். அப்பாடலின் இறுவட்டு ஒன்றை எனக்குத் தந்தார்கள். பாடலின் தலைப்பு – நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். எனது உரையின் பின்னர் அப் பாடலை ஒளிபரப்புமாறு நான் தொலைக்காட்சி ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த மாணவ மாணவிகள், இந்த இளைஞர் யுவதிகள் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆவர். நாட்டை விட்டுச் செல்லாது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரார்த்தனை செய்யும் எதிர்கால சந்ததியினர் ஆவர். அவர்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவது எமது அனைவரதும் பொறுப்பாகும். இந்த சபையில் உள்ள உங்களுடைய பொறுப்பும் அதுவாகும். அனைத்து இலங்கையர்ளதும் பொறுப்பு அதுவாகும்.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, நான் கருத்துக்களை முன்வைத்த சந்தர்ப்பத்தில் நாடு இருந்த நிலைமை பற்றி உங்களுக்கு நினைவிருக்குமென நம்புகிறேன். கடந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவை  சமர்ப்பித்த வேளை, நாடு இருந்த நிலைமையும், அதேபோல் ஏழு - எட்டு மாதங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையும் உங்களுக்கு நினைவிருக்கும்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. பரீட்சைகள் நடாத்த முடியாதிருந்தது. உரம் இன்றி விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன. விவசாயிகள் நிர்க்கதியாகி இருந்தனர். சுற்றுலாத்துறை வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. பத்து, பன்னிரண்டு  மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. எரிவாயு அறவே இல்லாமல் இருந்தது. நகர்ப்புற வீடுகளில் குடியிருப்பவர்கள் சமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் வரிசைகளில் நாள் கணக்கில் அலைக்கழிய நேரிட்டது. களைப்புற்ற மக்கள் தமது உயிர்களை வரிசைகளில் நின்ற நிலையில் இழந்தார்கள். அழுத்தத்தை பொறுத்துக்கொள்ள இயலாமல் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள்.

ஆனாலும் இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இத்தகைய அழுத்தங்களை மெது மெதுவாக குறைப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். அபாயகரமான தொங்கு பாலத்தில் இலங்கைத் தாயை வெகுதூரம் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு எம்மால் முடிந்துள்ளது. நாம் அவ்வாறு பயணித்த பாதை இலகுவானது அல்ல. ஆனாலும் பயணம் இன்னமும் முடிவடையவில்லை.

வீழ்வதற்கு நெருங்கியிருந்து அரச நிதி முறைமையைப் பாதுகாப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டோம். அரச செலவினங்களை மட்டுப்படுத்தினோம். வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் காரணமாக வரி வருமானம் வீழ்ச்சியடைந்ததை நாம் அறிவோம். 2019 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் தொழில்முயற்சிகள், கம்பனிகள் மற்றும் தனிநபர்கள் 16 இலட்சம் பேர்கள் வரி செலுத்தினார்கள். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் வரி செலுத்தும் எண்ணிக்கை 5 இலட்சம் பேர் வரை வீழ்ச்சியடைந்தது. அரசின் வரி வருமானம் படுமோசமாக வீழ்ச்சியடைந்தது.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழிவைப் புரிந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த வரி முறைமைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். இலங்கை நிர்வாக சேவை சங்கம் 2022 ஏப்ரல் மாதம் பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான துரித முன்மொழிவுத்திட்டம் ஒன்றை முன்வைத்தது.

முன்மொழிவுத்திட்டத்தின் பிரிவு 3.3 இன் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உழைக்கும் போதே வரி செலுத்தும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தல்.

அரச தொழில் முயற்சிகளில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்கொள்வோர் ஊடாக அன்றி தனிப்பட்ட ரீதியில் தமது சம்பளத்திலிருந்து வரி செலுத்தல்.

நிறுத்திவைக்கும் வரி முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்தல்.

அனைத்து வரிவிடுதலைகளையும் இடைநிறுத்தல்.

வருமான வரி செலுத்த வேண்டிய வருமான மட்டம் மற்றும் பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய புரள்வு எல்லைகளை திருத்துதல்.

இலங்கை நிர்வாக சேவை சங்கமானது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த முன்மொழிவை சமர்ப்பித்தது. தற்போது நாம் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துகின்றோம்.

ஆனாலும் இவ்வாறான ஒரு வரிக்கொள்கை தேவை எனத் தெரிவித்தவர்கள் இன்று வரிக்கொள்கையை விமர்சிக்கின்றார்கள். வரி அறவிடுவதற்கான புதியதொரு கொள்கையை அறிமுகப்படுத்தல் அரசியல் ரீதியாக பிரபல்யம் மிக்கதொரு தீர்மானம் அல்ல. எனக்குத் தேவை பிரபல்யமடைவதற்கு அல்ல. எனக்குத் தேவை இந்த நாடு அடைந்துள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆகும். ஆம். நான் நாட்டுக்கான பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுப்பேன். அத்தகைய தீர்மானங்களின் முக்கியத்துவத்தை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வார்கள்.

வரி செலுத்த வேண்டிய வருமான எல்லையை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க வேண்டுமென சிலர் கூறுகின்றார்கள். உழைக்கும் போதே வரி செலுத்தும்  முறையை நீக்க வேண்டுமென மற்றும் சிலர் கூறுகிறார்கள். நாம் விருப்பத்துடன் இந்த வரிகளை விதிக்கவில்லை. ஆனாலும் எமக்கு விருப்பமானவற்றை செய்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. விரும்பாவிட்டாலும் சரியானதைச் செய்ய வேண்டும்.

உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும். வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும். இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும். இவ்வளவு பாரியதொரு தொகை இழப்பதைத் தாங்கிக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. 

தற்போது நலிவுற்ற பொருளாதாரத்திற்கு உரிமை கோருவதன் காரணமாக அனைவராலும் வரிச்சுமை பாரியளவில் உணரப்படுவதை நாம் அறிவோம். இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயம் உள்ளது. தற்போது எமது நாட்டில் கூடுதான அளவு வரியினை பொதுமக்களே செலுத்துகின்றார்கள். நேரடியாக வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் உரிய முறையில் வரி அறவிடப்படாமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் மறைமுக வரியாக பெருந்தொகைப் பணத்தை செலுத்துகின்றார்கள். வரி செலுத்துவதற்கு தேவை அற்ற பாரியளவு எண்ணிக்கையினர் தம்மை அறியாமலேயே வரி செலுத்துகின்றார்கள். அத்தகைய வரி மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.

உலகின் ஏனைய நாடுகளில் கூடுதலான அளவு வரி அறவிடப்படுவது வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் ஆகும். இந்தியா – நேரடி வரி 67 சதவீதம். மறைமுக வரி 33 சதவீதம். 2021 இல் பங்களாதேஷ் - நேரடி வரி 68 சதவீதம். மறைமுக வரி 32 சதவீதம். நேபாளம் - நேரடி வரி 69 சதவீதம். மறைமுக வரி 31 சதவீதம். 2021 இல் தாய்லாந்து - நேரடி வரி 63 சதவீதம். மறைமுக வரி 37 சதவீதம். 2020 இல் மலேசியா - நேரடி வரி 66 சதவீதம். மறைமுக வரி 34 சதவீதம். 2021 இல் இந்தோனேசியா - நேரடி வரி 60 சதவீதம். மறைமுக வரி 40 சதவீதம்.

ஆனாலும் எமது நாட்டில் நிலைமை அதற்கு மாற்றமானது ஆகும். 2021 இல் எமது நாட்டின் நேரடி வரி 21 சதவீதம். மறைமுக வரி 79 சதவீதம். 

ஆகவே இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை குறைவடையும். 

பொருளாதார நெருக்கடி நிலைமையின் கீழ் பணவீக்கம் உயர்வடைகிறது. பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. தொழில்கள் அபாயத்தை எதிர்நோக்குகின்றன. தொழில்முயற்சிகள் வீழ்ச்சியடைகின்றன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் வாழ்க்கை நடாத்துவது கடினமானதாக உள்ளது. ஆனாலும் இன்னும் ஐந்து, ஆறு மாத குறுகிய காலம், இக் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியுமாயின் எமக்கு தீர்வை நோக்கி செல்ல முடியும். இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் ஆண்டின் மூன்றாவது, நான்காவது காலாண்டுகளில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவினை செலுத்துவதற்கு எம்மால்  முடியும். தனியார் துறைக்கு சலுகைகளை வழங்க முடியும். முழு நாட்டு மக்களதும் கைகளை, இன்று இருப்பதை விடவும் வளமாக்க முடியும். தொழில் மூலமான வருமான மார்க்கத்தை அதிகரிக்க முடியும். வங்கி வட்டிவீதத்தைக் குறைக்க முடியும். மேலும் சுமார் மூன்று ஆண்டுகள் செல்லும் போது இன்று ஈட்டும் வருமானத்தை விட சுமார் 75 சதவீத வருமானத்தைப் பெற முடியும்.

தற்போது அனைத்து கஷ்டங்களுக்கும் மத்தியில் நலிவுற்ற பொருளாதாரம் காரணமாக அவதியுறும், வறுமையில் வாடும் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இதற்காக உலக வங்கி எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது.

ஆயினும் எமது நாட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் முறை சிதைவுற்றுக் காணப்படுகிறது. அதிக வருமானம் உழைக்கும்  நபர்கள் கூட நிவாரண உதவிகளைப் பெறுகின்றார்கள். நாம் இந்த நிலைமையை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். உண்மையான, வறுமை சமூகத்தை நாம் அடையாளம் காண்கின்றோம். நிவாரண வங்கிக் கணக்கின் ஊடாக அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்த வருகின்றோம்.

ஆனாலும் சில குழுக்கள் இந்த பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் வரி குறைக்கப்படும் - சம்பளம் அதிகரிக்கப்படும் போன்ற கற்பனைக் கதைகளைக் கூறுகின்றார்கள். பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போடுவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

நான் ஒரு போதும் செய்ய முடியாதவற்றைக் கூற மாட்டேன். அதிகாரத்துக்காக பொய் கூற மாட்டேன். வரவு செலவுத்திட்ட உரையின் போதும், பாராளுமன்றத்தை  திறந்துவைக்கும் போதும் நான் கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எம்மால் முடிந்துள்ளது.

மறைப் பொருளாதாரத்தில் இருந்து நேர்கணிய பொருளாதாரத்தை நோக்கி நாம் தற்போது பயணம் செய்து வருகின்றோம். 2023 ஆம் ஆண்டு இறுதியளவில் நேர்கணிய பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

நான் ஜனாதிபதியாக ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நாட்டின் பணவீக்கம் 70% ஆகும். எமது செயற்பாடுகள் காரணமாக 2023 ஜனவரி மாதமளவில் அதனை 54% சதவீதமாக குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் அதனை 54 சதவீதம் குறைப்பதற்கு எம்மால் முடிந்தது.  அதனை தனி இலக்கத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் முயற்சிக்கிறோம்.

2022 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்தது. அதற்காக உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் பெருமளவு பாடுபட்டார்கள். அதேபோல் இறக்குமதி செலவினத்தை 18 பில்லியன் டொலர்கள் வரை மட்டுப்படுத்த எமக்கு முடிந்தது. வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்கள் இந்த இக்கட்டான நிலையில் தாய் நாட்டுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். 2022 ஆம் ஆண்டு இறுதியளவில் 4 பில்லியன் டொலர் வெளிநாட்டு அந்நிய  செலாவணியை அவர்கள் எமக்கு வழங்கினார்கள்.

எமது தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள், அவர்களுக்கு பல்வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்த பின்னணியிலேயே இந்த அர்ப்பணிப்பை நாட்டுக்காக மேற்கொண்டார்கள். ஆனாலும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்புவது நாட்டுக்காக அன்றி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிக்காக அல்ல என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும் நாம் கௌரவிக்கின்றோம்.

பெரும்பாலும் பூச்சியத்துக்கு வீழ்ந்த எமது அந்நிய செலாவணி ஒதுக்கினை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எமக்கு தற்பொழுது முடிந்துள்ளது.

சுற்றுலாத்துறையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. வீதிகள் முழுவதும் குறுகிய அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தடைகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தார்கள். உலகின் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டது. இந்த ஜனவரி மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். அது ஒரு சாதனையான எண்ணிக்கை ஆகும். இவ்வாறு அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு வருகின்றோம்.

கிரேக்கம் சில காலங்களுக்கு முன்னர் எம்மைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. வங்கரோத்து நிலை அடைந்தது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைத்து வங்கரோத்து நிலையிலிருந்து மீண்டு, மீண்டும் கடன்களைச் செலுத்தும் பலத்தை ஏற்படுத்துவதற்கு அவர்களுக்கு 13 ஆண்டுகள் சென்றது. அக்கால எல்லைக்குள் மூன்று தடவைகள் ஐ.எம்.எப் அமைப்பின் உதவிகைளப் பெற்றது.  

ஆனாலும் நாம் பயணிக்கும் இந்த திட்டத்தின் பிரகாரம் முன்னோக்கிச் சென்றால் 2026 ஆம் ஆண்டளவில் வங்கரோத்து நிலையிலிருந்து எமக்கு மீள முடியும். நான் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டவாறு, நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்கு இந்த பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், எமக்கு அதற்கு முன்னர் இந்த நெருக்கடியில் இருந்து மீள சந்தர்ப்பம் கிடைக்கும்.

தற்பொழுது நாம் கடன் மறுசீரமைப்புக்காக எமக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். அதற்கு மேலதிகமாக ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமான மற்றைய ஒரேயொரு  சர்வதேச நாணய நிதியம் மாத்திரம் ஆகும். அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் அடித்தளத்தின் பிரகாரம் எமக்கு முன்னோக்கி பயணிக்க முடியும். அதுதவிர எமக்கு வேறு எந்தவொரு மார்க்கமும் இல்லை. வேறு மாற்று வழிகள் இருப்பின் அதனை இச்சபைக்கு அறியத் தருமாறு நாம் பயணிக்கும் இந்தப் பாதையை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தற்பொழுது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். கடந்த செப்டம்பர் மாதமளவில் அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எம்மால் முடிந்தது. கடன் பேண்தகு தன்மையை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளது.

அதற்கு ஏற்புடைய வகையில் பரிஸ் சமூகத்துடன் நாம் இணக்கப்பாட்டுக்கு வந்தோம். பரிஸ் மாநாட்டில் அங்கத்துவம் வகிக்காத இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடினோம். இந்தியா எமது கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஒரு புறம் பரிஸ்  மாநாட்டுடனும் இந்தியாவுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகிறது. நாம் நேரடியாக சீனாவுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறோம். எமக்கு அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் சாதகமான பதில் கிடைத்துள்ளது. ஏனைய நாடுகளின் பிரவேசம் மற்றும் சீனாவின் பிரவேசம் ஆகியவற்றுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த முயற்சியின் போது எமக்கு உதவி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் எமது நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சர்வதேசம் எமக்கு வழங்கும் ஒத்துழைப்பு பிரதிபலிப்பது என்னவெனில் நாம் செல்லும் பாதை சரியானது என்பதாகும். மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் குறைந்துள்ளமை எடுத்துக் காட்டுவது யாதெனில் இப்பாதை சரியானது என்பதாகும்.

2020ஆம் ஆண்டு நாம் ஐ.எம்.எப் அமைப்பில் இருந்து விலகினோம். அவ்வாறான தொலைநோக்கற்ற தீர்மானங்கள் தற்போதைய நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது. பங்களாதேஷ் தொடர்ந்தும் ஐ.எம்.எப் அமைப்புடன் இணைந்திருந்த காரணத்தால் அவர்களுக்கு அந்த அமைப்பில் இருந்து வேகமாக நிவாரணங்களை பெற முடிந்தது. எமக்கு அனைத்து தொடர்புகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு நேர்ந்தது. எவ்வாறாயினும் நாம் கஷ்டத்துக்கு மத்தியில் ஆரம்பத்திலிருந்து பயணத்தை தொடர்ந்தோம். 

தற்போது மக்கள் படும் துயரம் அன்றை விடக் குறைந்துள்ளது. நாம் பயணிக்கும் இந்த மார்க்கம் சரியானதென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. வீழ்ச்சியடைந்த விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. பெரும்போக அறுவடை அதிகரிக்குமென எதிர்கூறப்பட்டுள்ளது.  இம்முறை அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் அறுவடைகளை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 10 கிலோ வீதம் இரண்டு சந்தர்ப்பங்களில் இலவசமாக வழங்கப்படும். வரிசைகள் இல்லை. மின்சாரத் துண்டிப்பு குறைவடைந்துள்ளது. பாடசாலை பணிகள் வழமை நிலைக்கு வந்த வண்ணம் உள்ளது. மாணவ, மாணவிகள் மீண்டும் கல்வி சுற்றுலாக்களை மேற்கொள்கிறார்கள். பரீட்சைகள் இடம் பெறுகின்றன. இதே பாதையில் தொடர்ந்தும் பயணித்து நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதா? அவ்வாறின்றி இந்த பாதைக்கு முட்டுக்கட்டை போட்டு எதிர்ப்புக் கோஷங்களை முன்வைத்து அரசியல்வாதிகள் மீண்டும் நாட்டை அழிவடையச் செய்வதா என்ற தீர்மானம் இன்று எம் முன்னிலையில் உள்ளது.

குறுகிய அரசியல் நோக்கங்கள் இல்லாத, நாட்டை நேசிக்கும் பெரும்பான்மை மக்களது தீர்மானம் இதேபோன்று முன்னோக்கி செல்வதென்பதை நாம் அறிவோம்

இன்று இலங்கை பொருளாதார ரீதியாக ஒரு கவலைக்கிடமான நோயாளியாக உள்ளது. உடனடியாக நோயை இனம் கண்டு அதற்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் சிலர் இதுவரை சிகிச்சை வழங்கிய வைத்தியர்களின் குறைகளை கூறி  வருகின்றார்கள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றார்கள்.

ஆனாலும் ஆரம்பத்தில் நோயாளியை குணப்படுத்துவதற்கு நான் முயற்சி செய்து வருகின்றேன். நோயாளியை குணப்படுத்திய பின்னர் எமக்கு ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனாலும் நாம் நோயாளியை குணப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நான் அதனையே தற்போது செய்துவருகிறேன்.

ஆனாலும் நோயாளியை கவலைக்கிடமான நிலையில் இருந்து மீட்டெடுத்தவுடன் நாம் மற்றுமொரு நடவடிக்கையினை மேற்கொள்வோம். மீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்படக்கூடிய அனைத்து வழிகளையும் தடைசெய்ய வேண்டும். இந்த நோக்கத்துக்காக நாம் ஊழல்களைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டுவருவோம்.  ஐ.எம்.எப் அமைப்புடன் ஏற்படுத்திய இணக்கப்பாட்டுக்கு அமைய உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து 'திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் கண்டறியும் முயற்சியை'  இச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

ஐ.எம்.எப் அமைப்பின் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் எமக்கு பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வர முடியும். ஆயினும் நோயை முற்று முழுதாக குணப்படுத்த வேண்டுமாயின் எமக்கு முன்னோக்கிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.எம்.எம் அமைப்பின் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் உலக வங்கி, ஆசியா அபிவிருத்தி வங்கி போன்ற ஏனைய சர்வதேச நிறுவனங்களிடம் கடனுதவிகள் பெறுவது தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்படுதிக்கொள்ள முடியும். அதன் போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை உறுதி செய்யப்படும். அதன் காரணமாக அந்நிய செலாவணி நாட்டுக்கு பாய்ச்சப்படும் போக்கு ஏற்படும். நாம் அந்த உதவிகளை உரிய முகாமைத்துவத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் சுற்றுலாக் கைத்தொழிலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும். இடைநடுவில் தடைப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.

அதேபோல் எமது நாட்டுக்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக குறுகிய அரசியல் தேவைப்பாடுகளுக்காக பொருளாதார மறுசீரமைப்புக்களை நாம் தாமதப்படுத்தினோம். நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமைகளை மக்கள் மீது சுமத்தினோம். கடந்த ஆண்டு தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் அரச நிறுவனங்களின் நட்டம் 800 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். அந்த முழு நட்டத்தையும்  மக்கள் செலுத்துகின்றார்கள். பல்லாண்டு காலமாக மக்கள் அந்த நட்டத்தை செலுத்தி வருகின்றார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்கள் தாம் இவ்வாறு நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமைகளைச் சுமப்பதை அறியவில்லை. மிகவும் அப்பாவி ஏழையும் இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு செலவு செய்ய வேண்டியுள்ளது.  

ஆகவே நாம் உடனடியாக பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இன்று நாளுக்கு நாள் முன்னோக்கி செல்கின்றன. அவ்வாறு இல்லாதுவிடின் எமக்கு பின்னோக்கிச் செல்ல நேரிடும்.

இந்த மறுசீரமைப்புகளின் போது அரசின் கடமைப் பொறுப்பினை நாம் சரியாக இனம் காண வேண்டும். பின்னணியில் இருந்து தனியார் துறையை நேரடியாக தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துதல் அரசின் பிரவேசமாக அமைய வேண்டும். ஒழுங்குபடுத்தல் பணிகள், பொது வசதிகள் மற்றும் சட்டமும் ஒழுங்கையும் நிலைநாட்டல் போன்ற துறைகள் மீது மாத்திரம் அரசு தலையீட்டை மேற்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தின் உந்துசக்தியாக தனியார் துறையை பயன்படுத்த வேண்டும். அவ்வாறே வெளிநாட்டு பொருளாதார உறவுகளை வலுவடையச் செய்வதற்காக தனியார் தொழில் முயற்சியாண்மையினை பங்கேற்கச் செய்ய வேண்டும்.

உற்பத்தியை அதிகரிப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது கைத்தொழில் மற்றும் விவசாய நவீனப்படுத்துவது ஆகியவற்றிற்காக உச்ச அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறே கடன்களை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்கள் மதிப்பீட்டுச் செயன்முறையின் அடிப்படையில் மாத்திரம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அரசியல் காரணங்களுக்காக அரச முதலீடுகளை வழிநடாத்தும் முறையை இடைநிறுத்துவது அத்தியாவசியமான ஒரு விடயமாகும்.

அண்மையில் வங்கிக் கடன்களை அறவிடுவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டதால் வங்கி முறைமை பலவீனமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த சலுகை காலம் முடிவடைந்துள்ளது. அதனால் வங்கிகள் மீண்டும் பலமடைந்துள்ளன.

அதேபோல் இடர்கள் காரணமாக பலவீனமுற்ற தொழில்முயற்சிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். பொருளாதார வளர்ச்சியுடன் அவர்களுக்கு மீண்டும் எழுந்து நிற்பதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

உற்பத்தியை அதிகரித்தல், பொருட்கள் சேவைகளை வழங்குதல், கைத்தொழில் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தலுக்காக உயர்ந்தபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். தற்போது நாட்டின் வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 8.15  சதவீதம் ஆகும். இதனை 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். நாம் பிரச்சனைகளை வழி விட்டோமே தவிர நீண்டகால தீர்வினை தேடவில்லை. அதன் விபரீதத்தை தான் நாம் அனைவரும் இன்று அனுபவிக்கின்றோம்.

நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவும்.  இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும். வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது. நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம். ஆகவே நாம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் ஆகும்.

பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும்.

திரு.ஆர். சம்பந்தன் அவர்களும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்ற ஒரு பொதுவான கனவு எம் இருவருக்கும் உண்டு. அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தன. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதை நாம் அறிவோம். யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு முகாம்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடம் சுமார் 3300 ஏக்கர் காணி உள்ளது. இதில் பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் பல ஏக்கர் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள்.

1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

தேசிய காணி சபை ஒன்றை தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படும். தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

சுகாதார துறை தொடர்பாகவும் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். 1992 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டம்

மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன  முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ் அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும்.

  பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்டீ.நவாஸ் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன் பரிந்துரைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம்.

யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். மல்வத்துஓயா அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண நதிகள் மற்றும் நீரை முகாமை செய்தல், வடமாரச்சி குளம் மற்றும் களப்பு புனரமைப்பு, குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக அதன் மூலம் நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மூலம் இப் பிரதேசங்களின் மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்காக பயன்படுத்தப்படும். சூரியசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் சக்தி இதற்காக பயன்படுத்தப்படும்.

சுற்றுலாக் கைத்தொழிலுக்காக கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும். முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படும். விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் வழங்கப்படும். 

காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம். இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய  திரு.செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக திரு.ஏ.சீ.எஸ்.ஹமீட் தெரிவு செயற்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விசேடமான நிலைமை பற்றி அவர் எனக்கு விளக்கம் அளித்துள்ளார். அடிக்கடி முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதை நாம் அறிவோம். அது தொடர்பாகவும் நாம் முழு அவதானம் செலுத்துகின்றோம்.

சிங்கள சமூகமும் அவர்களுக்கென மட்டுப்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அது பற்றியும் நாம் கவனம் செலுத்துகின்றோம். அப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஒரு கலந்துரையாடல் தேவைப்படுகிறது. விசேடமாக சாதி வேறுபாடுகள் காரணமாக சமூகத்தில் ஓரம் காட்டப்பட்டுள்ள சமூகங்கள் தொடர்பில் முழு அவதானம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறான அனைத்து விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தி ஒற்றையாட்சி அரசில் உயர்ந்தபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய ஒரு விடயத்தினை மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். நாட்டைப் பிரிப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு துணை போகும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ள மாட்டோம்.

எனக்கு இந்த பாராளுமன்றத்தில் குழுவொன்று கிடையாது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் காணப்படுகின்றார். ஆனாலும் நான் ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நான் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். இங்கு கட்சி அரசியல் எனக்கு இல்லை.

ஆகவே இவ் அனைத்து முன்மொழிவுகளையும் நான்  பாராளுமன்றத்தின் தேசிய சபை ஊடாகவே நடைமுறைப்படுத்துவேன். அதற்கு மேலதிகமாக மக்கள் கருத்துப் பிரதிநிதித்துவப் பணிக்காக நாம் ஜன சபைச் சட்டத்தை சட்டமாக்குவோம்.

நான் முன்னைய பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியவாறு புதிதாக சிந்தித்து புதியதொரு பயணத்தை மேற்கொள்வதற்குரிய காலம் தற்போது வந்துள்ளது. இதுவரை நாம் பின்பற்றிய சம்பிரதாய அரசியல் தொடர்ந்தும் செல்லுபடியாகாது. அரசியல் நன்மைகளுக்காக போலியாக மற்றும் மூடநம்பிக்கையின் மூலம் மேற்கொண்ட ஏமாற்று வேலைகள் எதிர்காலத்துக்கு பொருந்தாது.

முறைமை மாற்றம் தொடர்பாக பேசுகின்ற ஒருசில அரசியல் கட்சிகள் தன்னைத் தவிர ஏனைய நபர்களை மாற்றுமாறு யோசனை தெரிவிக்கின்றார்கள். இதுவும் சம்பிரதாய அரசியலில் ஒரு பகுதியாகும். நாம் வந்தால் நாம் மாற்றுவோம். அவ்வாறு தான் கூறுவார்கள். நாம் கோணலாக சென்று மற்றவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றோம்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பேசியவர்கள் அதிகாரத்தின் முன்னே சுயாதீன ஆணைக்குழுக்கள் வேண்டாமென கூறுகின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை நிராகரித்த நபர்கள்இ தாம் அதிகாரத்துக்கு வந்தால் அந்த அதிகாரங்களை பயன்படுத்தும் விதம் பற்றிக் கூறுகின்றார்கள். அதிகாரத்திற்காக கொள்கையை மாற்றுகின்றார்கள். அன்றிலிருந்து இன்று வரை நாம் அனுபவித்தவை இவைதான். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். இன்றேல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த ஒருவருக்கும் முடியாது.

மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் எம்மில் இருந்து. நாம் அனைவரும் மாற்றமடைய வேண்டும். இந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமைய வேண்டும். அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும். அரசியல் கட்சிகள் மிகவும் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும். பாராளுமன்றம் மிகவும் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும். நிறைவேற்றுத் துறை மிகவும் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும். நீதித்துறை மிகவும் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும். அரச சேவை மிகவும் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும்.

இந்த மாற்றத்துக்காக நாம் தற்போது பாராளுமன்ற மேற்பார்வை செயற்குழுவை முறையினை தாபித்துள்ளோம். ஆயினும் இன்னமும் மேற்பார்வை செயற்குழுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை. அதனைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு நான் பாராளுமன்றத்தை கோருகின்றேன். மேற்பார்வை செயற்குழுக்கள் மூலம் உயர்ந்தபட்ச பயனை அடைந்துகொள்வதற்கான மனமாற்றத்தை ஏற்படுத்துவது இந்த சபையில் உள்ள உங்கள் அனைவரதும் பொறுப்பாகும்.

நாம் அத்துடன் நின்று விடப் போவதில்லை. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்  அரசாங்கத்தின் செயலூக்கமான பங்காளர்களாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். இதற்காக, முழுமையான சுயாதீனமுள்ள பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகம் ஒன்று தாபிக்கப்படும்.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க விழுமியம் தொடர்பில் காணப்படும் சட்டவிதிகள் போதுமானதாக இல்லை. ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவிழுமியம் மற்றும் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான ஒரு சட்டமூலம் தயாரிக்கப்படும்.

விருப்புவாக்கு முறைமை பல்வேறு ஊழல்களுக்கு ஏதுவாயமைவதாக நாம் தற்போது நடைமுறை ரீதியில் இனம் கண்டுள்ளோம். ஆகவே மாற்றுத் தேர்தல் முறைமை ஒன்றின் தேவையினை முழுநாடும் உணர்ந்துள்ளது. பாராளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். புதிய தேர்தல் முறைமையில் புத்திஜீவிகள், இளைஞர் சமுதாயம் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென நான் நம்புகின்றேன்.

இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். அரசியல் கட்சிகள் என்பதை விட தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவற்றுள் பெரும்பாலானவை பணத்துக்காக விலைபோன அரசியல் கட்சிகள் ஆகும். புறக்கோட்டை நடைபாதை வியாபாரம் போன்று கட்சிகளையும் அதன் சின்னங்களையும் விற்பனை செய்கிறார்கள். ஒருசில விலை போகின்றன.

இலங்கையின் அரசியல் கட்சிகள் மற்றும் அவை செயற்பட வேண்டிய முறை பற்றிக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.

கட்சிகளைப் பதிவுசெய்தல், வெளிப்படைத் தன்மையுடன் செயற்படல், அங்கத்தவர்களின் உரிமைகள், நிதியம் மற்றும் வருமானம் ஈட்டுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்தல், ஊடகப் பயன்பாடு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆழமாக ஆராயும் பொறுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

இப் பணியின் போது கென்யா, ஜேர்மனி மற்றும் நோர்வே நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்பான சட்டம், ஐக்கிய இராச்சியத்தின் வாக்காளர் சட்டம், அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐரோப்பிய முறைமை, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை அடிப்படையாக கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தை மிகவும் சிறந்ததாக மாற்றியமைப்பதற்காக புதிய நிறுவனங்கள், புதிய சட்டவிதிகள் மற்றும் பல புதிய கருத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

வரலாறு தொடர்பான நிறுவனம், பொருளாதார விஞ்ஞானம் மற்றும் வியாபார நிறுவனங்கள், மகளிர் மட்டும் ஆண் பெண் பாலினம் தொடர்பான நிறுவனங்களை நாம் புதிதாக தாபிப்போம். அதேபோல் நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்படும். அரச மற்றும் அரச கொள்கைகள் தொடர்பான பல்கலைக்கழகம், விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுத் துறை பல்கலைக்கழகம். புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம், ஆண், பெண் பாலின சமத்துவ சட்டம், பெண்களை வலுவூட்டும் சட்டம், சிறுவர் பாதுகாப்பு சட்டம், இளைஞர் பாராளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம், போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.

எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது. அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். 


காலநலை மாற்றச் சட்டம், சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம், மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம், உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம், ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம், முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம். பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.


வருமான அதிகாரச் சட்டம். வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், அரச சொத்து முகாமைத்துவச் சட்டம், பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம், தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம், புதிய மதுவரிச் சட்டம், அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம், புன்வத் சட்டம், வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம், டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம், கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம், பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம் இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. சமூகத்தை அறிவூட்டும் பிரதான வகிபாகம் ஊடகத்துக்கு உரியதாகும்.

அதற்காக ஊடகவியலாளர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்க வேண்டும். 1993 இல் நான் பிரதமர் என்ற ரீதியில் ஊடக பயிற்சி நிறுவனம் ஒன்றை தாபித்தல் தொடர்பில் பரிந்துரை பெற்றுக்கொள்வதற்காக கலாநிதி காமினி கொரயா அவர்களின் தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அந்த நிறுவனத்தை தாபிப்பதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற போதும் 1994 பொதுத் தேர்தல் காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்குவதற்காக ஊடக நிறுவனம் முதல் பல்கலைக்கழகம் வரையிலான நிறுவன முறைமை ஒன்றை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த பல தசாப்த காலத்தை ஆராய்கின்ற போது ஊடகங்களின் வகிபாகம் உரியவாறு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. ஆகவே ஊடக மறுசீரமைப்பு எமது நாட்டுக்கு தேவையாக உள்ளது. இதன் போது சம்பிரதாய ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகிய இரண்டு துறைகள் பற்றியும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். ஆகவே தான் ஊடகங்கள் தொடர்பிலும் தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

அரச மற்றும் ஊடக தொழில் ஆகியன ஒன்றிணைந்து கூட்டு சுய ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்று பற்றி கவனம் செலுத்துவது முக்கியமானதென நான் கருதுகின்றேன். இணைய அவகாசத்தில்  பொய்யான செய்திகள், வெறுப்பூட்டும் வெளியீடுகள், பிழையான தகவல்கள், சிறுவர் மற்றும் பெண்கள் துன்புறுத்தல்கள், தொந்தரவுகள் மாத்திரமன்றி மோசடிகள் மற்றும் ஊழல்களையும் நாம் அனுபவித்து வருகின்றோம். இது தொடர்பாக சமூக ஊடக வலையக் கம்பனிகள் உள்ளடங்களாக தெட்டத் தெளிவான ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்று தேவைப்படுவதாக நாம் கருதுகின்றோம்.

நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான ஒரு விடயம் யாதெனில், கொள்கை தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது ஆகும்.

அரசாங்கங்கள் மாறுகின்ற போது மாற்றமடையாத தேசிய கொள்கை. அமைச்சர்கள் மாற்றமடையும் போது மாற்றமடையாத தேசிய கொள்கை. உலகத்தின் அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளும் நிலையான கொள்கைகளின் ஊடாக முன்னோக்கிச் சென்ற நாடுகளாக காணப்படுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு கொள்கைகள் இயற்றைப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் அரசாங்கங்கள் மாற்றமடைகின்ற போது கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட மாட்டாது.

இது முறைமை மாற்றத்துக்கான ஆரம்பம் மாத்திரம் ஆகும். மேலும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இலங்கையர்களின், விசேடமாக இளைஞர் யுவதிகளின் கருத்துக்கு அமைய அந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நாம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அந்த கோரிக்கையினை இந்த சபையில் உள்ள உங்களிடம் மாத்திரம் நான் முன்வைக்கவில்லை. ஒட்டுமொத்த இலங்கையர்களிடத்திலும் முன்வைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் இருந்தாலும்இ வெளிநாடுகளில் இருந்தாலும் உங்களது கருத்துக்களை முன்வைக்கவும். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையுங்கள்.

இன்று இந்த நாட்டில் உள்ள பலருக்கு இன்று நாடு அடைந்துள்ள நீளம் – அகலம் – ஆழம் புரிவதில்லை. அது நாம் அனைவரும் வாழ்நாளில் இவ்வாறான ஓர் அபாயத்தை மற்றும் பாரதூரமான நெருக்கடிக்கு முகம் கொடுக்காமையினால் ஆகும். இந்த நெருக்கடியிலிருந்து விரைவாக மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டுனெ நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், அறிஞர்கள், தொழில் வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்ற அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக இணைதல் வேண்டும். குறிப்பிட்ட சில காலம் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவுகள் எட்டப்படல் வேண்டும். சமூக இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டுக்காக நம் அனைவரதும் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்ட அனைத்துக் குழுக்களும் தற்போது தம்மை அர்ப்பணித்துள்ளார்கள். சுமைகளைத் தாங்குகின்றார்கள். இடர்களை எதிர்கொள்கின்றார்கள். ஆகவே நாம் பொருளாதாரத்தை மீண்டும் மேலுயர்த்திய பின்னர் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் பொருளாதார அபிவிருத்தியின் சிறந்த பெறுபேறுகளின் பங்குதாரர்களாக அமைய வேண்டும்.  

இந்த சமூக நீதியை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் சமூக நீதிக்கான ஆணைக்குழுவை தாபிக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கொள்கைச் சட்டத்தை இந்த சமூக இணக்கப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்குவோம். . 

 இறுதியாக எனக்கு மற்றுமொரு விடயத்தை ஞாபகப்படுத்த வேண்டும். அரசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான வேறுபாட்டினை நாம் புரிந்து கொள்வோம். இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் கட்டுபட்டுள்ளோம். தேர்தல்களின் போது ஜனநாயக ரீதியில் அரசாங்கங்களை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் உண்டு. ஆனாலும் இலங்கையை அராஜகமாக்கும் உரிமை எவருவருக்கும் இல்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லை. எந்தவொரு குழுவுக்கும் இல்லை.

எமது தாய்நாட்டை பொருளாதார அல்லது சமூக காலனித்துவமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல இடமளிக்க முடியாது. நாட்டை உண்மையாக நேசிக்கும் எந்தவொரு நபரும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். நாம் அனைவரும் நாட்டை நேசிக்கும் தரப்பில் இருக்க வேண்டுமே தவிர நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்லும் தரப்புடன் அல்ல.

'அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவார்களென நான் எதிர்பார்க்கின்றேன். அவர்கள் தற்போது துரதிஷ்டவசமாக தோல்வியடைந்துள்ளார்கள். மக்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதாயின் அவர்கள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். நெகிழும் தன்மையுடைய இலங்கையர்களுக்கு தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தாங்கும் சக்தி உள்ளது. தலைவர்கள் அறிவுடைவர்களாக மற்றும் சுயபுத்தியுடன் தாம் கூறுகின்றவற்றை நடைமுறைப்படுத்தினால்இ தந்திரோபாய ரீதியாக இந்த சவால்மிக்க காலத்தை எம்மால் வெற்றிகொள்ள முடியும்.'    

நாட்டைப் பற்றி எதிர்பார்ப்புடன் உள்ள நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எண்ணியுள்ள இந்த மாணவ மாணவிகளின், இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச் செய்தல்  இந்த சபையில் உள்ள நம் அனைவரதும் பொறுப்பு ஆகும். நீங்கள் அதற்குத் தயாரா?

இறந்தகால சிறைக் கைதிகளாக இல்லாமல் நாம் எதிர்காலம் பற்றிச் சிந்திப்போம். நாம் ஒன்றாக இணைவோம். பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவோம். ஜனநாயக கருத்துக்கள் ஊடாக  முன்னோக்கிச் செல்வோம். நாடு அடைந்துள்ள கவலைக்கிடமான நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குவோம். அரசியல் நோக்கங்கள் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த பின்னர் அது பற்றி சிந்திப்போம்.

கௌதம புத்த பெருமான் இவ்வாறு போதித்தார்.

'நீங்கள் உங்களுக்கே விளக்காக இருங்கள்' அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டு நாம் எமக்கே விளக்காக இருப்போம். அப்போது தான் முழு நாட்டையும் வெளிச்சமாக்க முடியும்.

நன்றி.  

Comments