போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.....Battieye.blogspot.com.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.............
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்திலிருந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் (23)ம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்காக மாவட்டத்தில் தற்போதைய கள நிலவரம் மற்றும் எவ்வாறான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பன தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்கத்தின் பிருத்தானிய அமைப்பின் வைத்தியர் நவநீதனுக்கு, மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு செயலணியினால் கிராம மற்றும் பாடசாலை மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் தற்கால மனோ நிலை குறித்து தெளிவு படுத்தப்பட்டது.
இதன் போது நீண்ட காலத்திட்டமாகவும், போதைப் பொருள் பாவனையிலிருந்து தடுப்பதாகவும், புதிய வினைத்திறனான அணுகுமுறைகளுடன், சகல தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒரு மாணவ சமுதாயத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்பை தாம் வழங்கவுள்ளதாக வைத்தியர் நவநீதன் தெரிவித்தார்.
அத்துடன் இத்திட்டம் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதற்கான ஆயத்தங்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு, கோரளைப்பற்று தெற்கு மற்றும் கோரளைப்பற்று மத்தி, போரதீவுப்பற்று, மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளடங்கும் மட்டக்களப்பு மத்தி, மேற்கு, மட்டக்களப்பு, கல்குடா மற்றும் பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்கத்தின் பிருத்தானிய அமைப்பினால் அனுசரணை வழங்கப்படவுள்ள இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல மருத்துவ ஆலோசகர் வைத்திய கலாநிதி தி.கதம்பநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உளநல வைத்திய அதிகாரி தயான் சௌந்தரராஜா, மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன, பொலிஸ் குற்றப் பிரிவின் ரி.ரசிகாந்த், விசேட அதிரடிப்படையின் அத்தியட்சகர் மாலக ஜயசேகர, மற்றும் பிரதேச செயலாளர்கள், போதைப்பொருள் பாவனை தடுப்பு செயலணியின் அலுவலர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment