கிரிக்கெட் யாப்பு குழுவில் இருந்து விலகும் பர்வீஸ் மஹரூப்:Battieye.blogspot.com
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹரூப் இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) புதிய யாப்பினை உருவாக்கும் குழுவில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க கடந்த வாரம் 10 பேர் அடங்கிய குழுவொன்றினை இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பினை கட்டமைக்கும் நோக்கில் நியமனம் செய்திருந்தார்.
அதன்படி 10 பேர் அடங்கிய இந்த குழுவில் ஒருவராக இடம்பெற்றிருந்த பர்வீஸ் மஹரூப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு வாயிலாக குழுவில் இருந்து விலகிய விடயத்தினை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
'கௌரவத்திற்குரிய விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட்டிற்குரிய புதிய யாப்பினை கட்டமைக்கின்ற குழுவில் இருந்து என்னை விலக அனுமதித்தமைக்கு நன்றி. நான் இந்த (கிரிக்கெட்) விளையாட்டின் யாப்பமைக்கும் விடயங்களில் அல்லாமல் திறன்கள் சார்ந்த விடயங்களிலேயே நிபுணத்துவம் கொண்டிருப்பதாக நினைக்கின்றேன். எனவே கொள்கை, சட்டங்கள் போன்ற விடயங்களை தவிர்த்து என்னால் திறன்கள் சார்ந்த விடயங்களில் அதிக பங்களிப்பு வழங்க முடியும் என நினைக்கின்றேன்.' என்றார்.
பர்வீஸ் மஹரூப் விலகிய நிலையில் அவரின் பிரதியீடாக யார் யாப்பு உருவாக்கும் குழுவில் இணைவார் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
இதேநேரம் கிரிக்கெட் யாப்பு உருவாக்கும் இந்தக் குழுவில் பர்வீஸ் மஹரூப் தவிர்த்து தற்போது Dr.துமின்த ஹூலுன்கமுவ, Dr.அரித விக்ரமநாயக்க, ஜனாபதி செயலகத்தின் ஹர்ஷ அமரசேகர, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரேனுக ரொவேல், தீப்திக்கா குலசேன, கயால் கலாட்டுவ, ஹரிகுப்தா ரோஹான்தீர மற்றும் சரித் சேனநாயக்க ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment