ATM கொள்ளை தொடர்பில் மேலும் பல தகவல்கள்.....
கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்துடன் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைதானவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் இரட்டையர்களும் அடங்குகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
கைதான 7 பேரில் ஒருவர் கம்பளை நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய ஆறு பேரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் கலஹா – ஹல்வத்த பகுதியில், சுமார் 200 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இதன்போது, 18 இலட்சத்து 70 ஆயிரம் பணமும் கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார், மோட்டார் சைக்கிள், இரண்டு தங்க சங்கிலிகள், சலவை இயந்திரங்கள், கையடக்க தொலைபேசி, தங்க மோதிரம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி கலஹா பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றை கொள்ளையிட்டு அதன் பண வைப்பு பெட்டகத்தை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சி தோல்வி அடைந்ததுடன் நிதி நிறுவனத்தில் இருந்த ஏனைய சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.
அத்துடன் குறித்த குழுவினரால் இரண்டு தங்க ஆபரண நிலையங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Comments
Post a Comment