சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு.30 மில்லியன் ரூபா இழப்பீடு.....
2022 டிசம்பர் முதல் வாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீசிய 'மண்டூஸ்' சூறாவளியைத் தொடர்ந்து நிலவிய குளிர் காலநிலையால் பல பகுதிகளில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடாக நேற்று 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ப்பு பிராணிகளின் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்
இதன்படி, உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடாக 30.44 மில்லியன் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காசோலைகளை அமைச்சர் கால்நடைப் பிரிவு மேலதிக செயலாளர் கலாநிதி எல்.டபிள்யூ.என்.சமரநாயக்கவிடம் கையளித்தார்.
இறந்த கால்நடைகளுக்கான இழப்பீடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர்களால் வழங்கப்படுகிறது. .வடமாகாணத்திற்கு 18.53 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு 11.9 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. வட மாகாணத்தில் 514 மாடுகள், 630 கன்றுகள், 305 ஆடுகள் மற்றும் 144 குட்டிகள் குளிர் காலநிலையால் உயிரிழந்துள்ளன.
மேலும், கிழக்கு மாகாணத்தில் 423 மாடுகள், 299 கன்றுகள், 65 ஆடுகள் மற்றும் 45 குட்டிகள் உயிரிழந்துள்ளன.
மாடு ஒன்றுக்கு ரூ.20,000, கன்று ஒன்றுக்கு 10,000 ரூபா, ஆடு ஒன்றுக்கு 5,000 மற்றும் குட்டி ஒன்றுக்கு 3,000 ரூபாவும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment