நிதி வழங்கினால் 20 அல்லது 25 ஆம் திகதிகளுக்குள் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான பணிகளையும் நிறைவு செய்ய முடியும் - அரச அச்சகத் திணைக்களம்.....

 நிதி வழங்கினால் 20 அல்லது 25 ஆம் திகதிகளுக்குள் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான பணிகளையும் நிறைவு செய்ய முடியும் - அரச அச்சகத் திணைக்களம்.....

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான முழு தொகையையும் கோரவில்லை, முற்பணத்தை மாத்திரமே கோருகிறோம். நிதியமைச்சு வெளியிடும் சுற்றறிக்கை, நிறுவன நிர்வாககோவை ஆகியவற்றுக்கு அமையவே செயற்பட முடியும்.

நிதி வழங்கினால் 20 அல்லது 25 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய முடியும் என அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியககே தெரிவித்தார்.

அரச அச்சகத் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, திறைச்சேரி ஆகிய இரு தரப்பிலும் நான் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளுக்கு நிதி வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நான் கடந்த திங்கட்கிழமை காலை அனுப்பி வைத்த கடிதம் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டு, தற்போது ஒரு தரப்பினரால் அது அரசியல் பிரசாரமாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் உட்பட ஏனைய கடமைகளுக்கான பணிகளை முன்னெடுக்க 400 மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது.

தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கும், மார்ச் மாதம் 09 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தேவையான வாக்குச்சீட்டு அட்டைகளை அச்சிடுவதற்கு 200 மில்லியன் ரூபா முற்பணத்தை கோரினோம். இருப்பினும் நிதி விடுவிப்பு நெருக்கடியால் தேர்தல்கள் ஆணைக்குழு 200 மில்லியன் ரூபா முற்பணத்தை அரச அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கவில்லை.

வாக்கெடுப்பு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைச்சேரியிடம் நான் 40 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டேன். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியில்லை, திறைச்சேரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தும் பதிலில்லை. எவரும் பொறுப்பேற்காத நிலையில் எவ்வாறு எம்மால் தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியும்.

அரச செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் வெளியிடும் சுற்றறிக்கை மற்றும் நிர்வாககோவை ஆகியவற்றுக்கு அமையவே எம்மால் செயற்பட முடியும். கடனுக்கு பணிகளை செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள பின்னணியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

 தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் மார்ச் 09 வாக்கெடுப்பு ஆகியவற்றுக்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிட வேண்டுமாயின் துரிதமாக நிதி ஒதுக்க வேண்டும். நிதி வழங்கினால் 20 அல்லது 25 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய முடியும் என்றார்.

Comments