இலங்கை கிரிக்கெட்டில் நெருக்கடி, SLC கலைக்கப்படுகிறதா?, 65 மில்லியனை வீணடித்த SLCஅதிகாரிகள்..!
இலங்கை கிரிக்கெட்டுக்கு தற்போது எதுவும் சரியாக நடக்கவில்லை. ஒரு நாள் சர்வதேச தொடரில் இந்தியா 3-0 என இலங்கையை வீழ்த்தியது, மேலும் களத்திற்கு வெளியேயும் விஷயங்கள் நன்றாக இல்லை. இந்தியா இலங்கை கிரிக்கெட் அணியை களத்தில் வீழ்த்தியதை அடுத்து, அரசாங்கம் இந்த வாரம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க சந்தர்பம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கலைக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ICC T/20 உலகக் கோப்பையின் போது விளையாட்டு தொடர்பான சம்பவங்கள் குறித்து ஆறு பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய பிறகு இந்தநிலை வந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் கீழ் போட்டிகளைக் காண அதிகாரிகளை அனுப்புவதற்கு செலவு செய்ததாகக் கூறப்படுவது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. நிதி முறைகேடு காரணமாக விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் SLC நடவடிக்கைகளை கொண்டுவர விளையாட்டுச் சட்டம் மற்றும் அதன் கீழ் நிறுவப்பட்ட விதிகளின் கீழ் அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு குழு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளது.
குற்றச் சாட்டுகள், செலவுகள் குறித்து சுயாதீன தணிக்கையை மேற்கொள்ளுமாறும், சாட்சியங்கள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக சபை ஆவணங்களைக் கைப்பற்றுமாறும் புலனாய்வாளர்கள் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினர். இந்த அறிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
' நிறுவனத்தின் நல்ல பெயரைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் கட்டாயப்படுத்தப்படுவோம்' என்று SLC செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
அறிக்கையில் என்ன இருக்கிறது?:
அறிக்கையின்படி SLC 16 நிர்வாகிகளை அனுப்ப 65 மில்லியன் ரூபா விரையம் செய்துள்ளது, இதில் இரண்டு ஊதியம் பெற்ற ஊழியர்களும், உலகக் கோப்பையைக் காண நிர்வாகக் குழுவின் 14 உறுப்பினர்களும் அடங்குவர். செலவுகளை குறைக்க விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்திய போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பயணம் தற்போது விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு முன்னதாகவே அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இந்த தொகையில் வணிக வகுப்பு பயணத்திற்கு 25.5 மில்லியன் செலவானது. எஞ்சியவை அவர்கள் தங்கியிருந்த காலத்தில் செலவினங்களைச் சமாளிக்க கொடுப்பனவுகளாகச் செலுத்தப்பட்டது.
ஒவ்வொன்றும் 10 நாட்களுக்கு ஒரு நாளுக்கு ஒருவருக்கு USD 700. அதன்படி USD 107,800-தோராயமாக தற்போதைய நாணய மாற்று விகிதத்தில் 39,438,812.00 குறித்த 16 அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் விமான டிக்கெட்டுகள் ரூ. 25,687,498.00. 'இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பின்படி, இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பது, ஒழுங்குபடுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவது அவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.' இருப்பினும், பொறுப்பான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் அதைச் செய்வதற்குப் பதிலாக, SLC நிதியை தங்கள் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தினர், இது விளையாட்டிற்காக அவர்கள் செய்யும் கெளரவ சேவைக்கான incentive என்று 63 பக்க அறிக்கை கூறுகிறது.
யாரெல்லாம் பயணம் செய்தார்கள் ?:
SLC தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா, உப தலைவர்களான ஜயந்த தர்மதாச மற்றும் ரவீன் விக்கிரமரத்ன, பொருளாளர் லசந்த விக்கிரமசிங்க, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஜெரோம் ஜயரத்ன ஆகியோர் பயணித்தவர்களில் அடங்குவர். செயற்குழு உறுப்பினர்களான சுஜீவ கொடலியத்த, கிரிஷாந்த கபுவத்த, ஜனக பத்திரன, திலக் வத்துஹேவா, சமந்த தொடன்வெல, பிரியந்த அல்கம, பந்துல திஸாநாயக்க, ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வா மற்றும் நளின் அபோன்சு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
உலகக் கோப்பையுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்திய பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக சிலர் உத்தியோகபூர்வ நிலையில் பயணம் செய்தனர், ஆனால் பெரும்பாலானவர்கள் முழு ஊதியத்துடன் விடுமுறையில் இருந்தனர். ஜெரோம் ஜெயரத்னவுக்கு அணியில் எந்தப் பங்கும் இல்லை, ஆனால் அவர் மெல்போர்னுக்கு அனுப்பப்பட்டார் என்று அறிக்கை கூறுகிறது. பயணத்தின் போது அவர் அணிக்கு எதுவும் பங்களிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக தனது சகோதரியுடன் நேரத்தை செலவிட்டார் என்றும் அது கூறுகிறது.
உலகக் கோப்பையின் போது வீரர்கள், அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகளிடையே நடந்ததாகக் கூறப்படும் தவறுகள் குறித்து விசாரணை நடத்த விளையாட்டு அமைச்சர் குழுவை நியமித்தார்.
'SLC பொருளாளர் லசந்த விக்கிரமசிங்க வழங்கிய அறிக்கையின்படி, அவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலத்தில் ஒரே ஒரு போட்டியை மட்டுமே பார்த்துள்ளார். எவ்வாறாயினும், SLC தலைவர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இரண்டு இலங்கை போட்டிகளையும் மற்றுமொரு போட்டியையும் பொருளாளர் பார்வையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. SLC பொருளாளர், வணிக வகுப்பில் (Business class) பயணித்ததாக SLC தலைவர் தெரிவித்த போதிலும், தாம் முதல் வகுப்பில் (First class) அவுஸ்திரேலியா சென்றதாக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் SLC தலைவர் எமக்கு பொய்யான அறிக்கையை வழங்கியுள்ளார் என்பதை இது நிரூபிக்கிறது என்று குறித்த அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
அதிகாரிகளின் பயணம் மற்றும் போட்டிகளில் அவர்கள் வருகை குறித்து SLC தலைவரால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் பல நிகழ்வுகளை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இரண்டு உப தலைவர்களான ஜயந்த தர்மதாச மற்றும் ரவீன் விக்கிரமரத்ன மற்றும் செயற்குழு உறுப்பினர்களான சுஜீவ கொடலியத்த, கிரிஷாந்த கபுவத்த, ஜனக பத்திரன, திலக் வத்துஹேவா, சமந்த தொடன்வெல, பிரியந்த அல்கம, பந்துல திஸாநாயக்க, பந்துல திஸாநாயக்க, ஆகியோருக்கு குழுவினால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பரிந்துரைகள் என்ன?:
*இலங்கை கிரிக்கெட் சபையின் ஊதாரித்தனமான செலவுகள் நீண்ட காலமாக விவாதத்திற்குரிய ஆதாரமாக இருந்து வருகிறது.
*கமிட்டி வீரர்கள் சூதாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடையை பரிந்துரைத்துள்ளது, மேலும் மனைவிகளை அவர்களது ஹோட்டல் அறைகளில் அனுமதிக்கவும் பரிந்துரைத்துள்ளது. மனைவியர் வெளியே தங்காமல் இருக்கவும், குழு ஒழுக்கத்தை மீறுவதையும் உறுதிசெய்யும் என நோக்கப்படுகிறது.
*வீரர்களுக்கு சமூக ஊடக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலுவான நபர்களை கேப்டன் மற்றும் அணி முகாமையாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
*முதல்தர அணிகளின் (First class cricket) எண்ணிக்கையை 26 ல் இருந்து 10 ஆகக் குறைக்க வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை எப்படி செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் 26 அணிகள் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏராளமான சிக்கல் நிலையை ஶ்ரீ லங்கா கிரிக்கெட் எதிர்கொண்டிருக்கும் நிலையிலேயே இலங்கை அணி இந்தியாவில் அடைந்திருக்கும் தோல்விகள் அதிகாரிகளுக்கு அழுத்தங்களை உருவாக்கியுள்ளது. அதன் ஓர் அங்கமாக தமக்கான அழுத்தத்தை தவிர்க்கவே இலங்கை அணியின் முகாமையாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Comments
Post a Comment