அங்குரார்ப்பண ICC-19 வயதுக்குட்பட்ட மகளிர் T20 உலகக் கிண்ணம் நாளை(14) ஆரம்பம்........
ICC-19 வயதுக்குட்பட்ட இருபது:20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அங்குரார்ப்பண அத்தியாயம் தென் ஆபிரிக்காவில் 14ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 16 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண 19வயதுக்குட்பட்ட இருபது:20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த 16 அணிகளும் 4 குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும்.
Aகுழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும் Bகுழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவண்டா, ஸிம்பாப்வே ஆகிய அணிகளும் Cகுழுவில் இந்தோனேசியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் Dகுழுவில் இந்தியா, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும் பங்குபற்றுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் 2ஆம் சுற்றான சுப்பர் 6 சுற்றில் இரண்டு குழுக்களாக போட்டியிடும். 4ஆம் இடங்களைப் பெறும் 4 அணிகள் நிரல்படுத்தலுக்கான சுற்றில் விளையாடும்.
முதல் சுற்றுப் போட்டிகள் ஜனவரி 14ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை நடைபெறும். நிரல் படுத்தல் போட்டிகள் ஜனவரி 20ஆம் திகதி நடைபெறும்.
Aமற்றும் Dகுழுக்களிலில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் ஒரு குழுவிலும் Bமற்றும் Cகுழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் மற்றொரு குழுவிலும் சுப்பர் 6 சுற்றில் மற்றொரு லீக் அடிப்படையில் மோதும்.
சுப்பர் 6 போட்டிகள் ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை நடைபெறும்.
சுப்பர் 6 சுற்றில் 2 குழுக்களிலும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடி அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது:20 உலகக் கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.
அரை இறுதிப் போட்டிகள் ஜனவரி 27ஆம் திகதி நடைபெறுவதுடன் 28ஆம் திகதி இருப்பு நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி ஜனவரி 29ஆம் திகதி நடைபெறும். இருப்பு நாளாக 30ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment