கால்பந்தாட்ட நிர்வாகத்தில் ஊழல் மோசடியை ஒழித்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதாக ரங்கா உறுதிமொழி......

 கால்பந்தாட்ட நிர்வாகத்தில் ஊழல் மோசடியை ஒழித்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதாக ரங்கா உறுதிமொழி......

இலங்கை கால்பந்தாட்ட நிருவாகத்தில் ஊழல் மோசடிகளை ஒழித்துக்கட்டி கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதே தனக்கு முன்னே உள்ள பிரதான பணி என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தெரிவான ஜே. ஸ்ரீ ரங்கா தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (14) முற்பகல் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜே. ஸ்ரீ ரங்கா 03 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தலைவரான பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிருவாகிகளுக்கான தேர்தல் ஓய்வுநிலை நீதிபதி யூ.எல்.அப்துல் மஜீத் தலைமையிலான தேர்தல் குழுவினரால் நடத்தப்பட்டது. மன்னார் கால்பந்தாட்ட லீக் சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு 27 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட நாவலப்பிட்டி கால்பந்தாட்ட  லீக்கைச் செர்ந்த ஜகத் குமார டி சில்வாவுக்கு 24 வாக்குகளும் கிடைத்தன.

தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் யூ.எல்.ஜஸ்வருக்கு தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என கடைசி நிமிடத்தில் தேர்தல் குழு அறிவித்ததை அடுத்து அவரது தரப்பில் ஜகத் குமார டி சில்வா போட்டியிட்டார். அப் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த யாழ்.கால்பந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஈ.ஆர்னல்ட் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

செயலாளர் நாயகமாக மாத்தறை கால்பந்தாட்ட லீக்கை சேர்ந்த இந்திக்க தேனுவர 29 - 22 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்னல்டை வெற்றி கொண்டு புதிய செயலாளர் நாயகமாக தெரிவானார்.

பொருளாராக தேசிய சேவைகள் கால்பந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ரி.சுதாகர் போட்டியின்றி தேர்வானார். இது இவ்வாறிருக்க, நான்கு உதவித் தலைவர்கள், ஒரு உதவி செயலாளர் (தொழில்நுட்பம்) தெரிவானதுடன் இரண்டாவது உதவி செயலாளர் (நிருவாகம்) மற்றும் உதவிப் பொருளாளர் பதவிகள் வெற்றிடமாகவே இருக்கின்றன.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவராக தெரிவான பின்னர் பேசிய ஜே. ஸ்ரீ ரங்கா, 'பீபாவினால் வழங்கப்பட்ட நிதி முந்தைய நிருவாகத்தினால் முற்றிலும் தவறாக பயன்படுத்தப்பட்டது. எனவே ஊழல் மோசடிகளை ஒழித்துக்கட்டி தூய்மையானதும் கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடியதுமான நிருவாகத்தை ஏற்படுத்துவதே தனக்கு முன்னே உள்ள பிரதான பணி' என்று கூறினார்.

இலங்கை கால்பந்தாட்டத்தில் நாங்கள் நீண்ட பயணம் செய்யவேண்டியுள்ளது. ஆனால், எனக்கோ மிக சொற்ப காலமே வழங்கப்பட்டுள்ளது. இந்த சொற்ப காலத்தில் எம்மால் இயன்றவற்றை செய்துமுடிக்க வேண்டும். எனவே, கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த தேர்தலில் எனக்கு வாக்களித்தவவர்கள் என்னோடு இணைந்து செயற்படுவார்கள் என நம்புகிறேன். அதேவேளை, எனக்கு எதிராக வாக்களித்தவர்களையும் கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக எம்மோடு இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தனது வெற்றிக்கு லீக் தலைவர்கள் வழங்கிய ஆதரவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். எனது வெற்றிக்கு லீக் தலைவர்கள் வழங்கிய ஆதரவே காரணம். பண பலமும் செல்வாக்கும் நிறைந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் நால்வர் எனக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களுக்கும் எனக்கும் பிரச்சினை எதுவும் இல்லை. அவர்கள் எனது நல்ல நண்பர்கள். அவர்களது வற்புறுத்தலால் தேர்தலில் எனக்கு எதிராக வாக்களித்ததாக சிலர் என்னிடம் கூறினார்கள். ஆனால், நான் அவர்களை புறந்தள்ளி வைக்கமாட்டேன். என்னோடு இணைந்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்த வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாக உழைக்கவேண்டும். அது தான் எனது விருப்பம்' என குறிப்பிட்டார்.

'பீபா உலக கிண்ண டிக்கெட்களை வழங்கி வாக்கு வேட்டையில் ஈடுபட்டவர்களையும், எனக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களையும் என்னால் வெற்றிகொள்ள முடியுமாக இருந்தால் எனது எதிர்கால பணியை என்னால் நிறைவேற்ற முடியும் என்பதை இங்கு உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

'எல்லாவற்றுக்கும் மேலாக நிருவாகத்தில் நேர்மையும் ஒழுக்கமும் இருக்கவேண்டும். அடுத்த தேர்தலைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தேர்தலை குறிவைத்து செயல்பட்டதால்தான் இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. இன்று நான் தலைவராக இருக்கலாம். இன்னும் 5 மாதங்களில் வேறு ஒருவர் தலைவராகலாம். ஆனால், நான் தேர்தலைப் பற்றி நினைக்கமாட்டேன். கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டேன்' என கொழும்பு பல்கலைக்கழக கால்பந்தாட்ட முன்னாள் அணித் தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா கூறினார்.

கூட்டுப் பல்கலைக்கழக அணியில் தான் விளையாடியபோது 1990 களின் ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகள் அணியை வெற்றிகொண்டதாகக் கூறிய அவர், இலங்கை அணியினால் மாலைதீவுகளை வெற்றிகொள்ள முடியாமல் போயுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், 'இன்று நான் தலைவராக தெரிவானதும் பெரும்பாலானவர்கள் எனது கடமையைப் பொறுப்பேற்க சம்மேளனத்திற்கு செல்லவேண்டும் என என்னைக் கோரினர். ஆனால், சம்மேளன அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் திறப்பைப் பெற்று அலுவலகத்தைத் திறந்து அலுவலகத்தினுள்ளே செல்லுமாறு என்னைக் கோரினர்.

நானோ, சம்மேளனத்தின் கேட்போர்கூடத்திற்கு சென்றால் போதும் என பதிலளித்தேன். ஏனெனில் சகல கோப்புகளையும் நான் உத்தியோகபூர்வமாகவே பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். கணக்கு விபரங்களை உரிய முறையில் பெற விரும்புகிறேன். யாரேனும் ஒருவர் ஏதேனும் கோப்பை எடுத்துச் சென்றிருந்தால், நான் அலுவலகத்தைத் திறக்கும் போது அங்கு ஏதேனும் கோப்பு இல்லாமல் போனால் அதற்கு என்னால் பொறுப்பெற்க முடியாது' என்றார்.

Comments