தென் ஆபிரிக்க அரங்கில் தமிழ் மொழியை ஒலிக்கச் செய்த தமிழக வீராங்கனைகள்.....

 தென் ஆபிரிக்க அரங்கில் தமிழ் மொழியை ஒலிக்கச் செய்த தமிழக வீராங்கனைகள்.....

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ICC 19 வயதுக்குட்பட்ட மகளிர் T/20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டரங்கினுள் வீராங்கனைகளிடையே இனிய தமிழ் மொழி பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம்பெறும் 3 தமிழக வீராங்கனைகள் மத்தியிலேயே தமிழ் மொழியில் ஆலோசனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் தலைவியும் விக்கெட்காப்பாளருமான தீர்த்தா சதிஷ், வேகபந்துவீச்சாளர் இந்துஜா நந்தகுமார், சுழல்பந்துவீச்சாளர் வைஷ்ணவி மகேஷ் ஆகிய மூவரும் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தங்களது தாய்நாடான இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது இந்த மூவரும் அடிக்கடி தமிழ் மொழியில் கலந்துரையாடியவாறு விளையாடியமை விசேட அம்சமாகும்.

'பரவாலே, நல்லா போட்ற, அப்டியே தான் போயிண்டுரு. வைஷு பின்னாடியிருந்து கொண்டுவா, இந்து கொஞ்சம் மாறி போட்ரு, வரும், வரும்' போன்ற வசனங்களை விக்கெட்டுக்கு பின்னாலிருந்து தீர்த்தா உச்சரிப்பதைக் கேட்கக்கூடியதாக இருந்ததாக செய்தி ஒன்று கூறுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் அனைவருமே இந்திய வம்சாவழி வீராங்கனைகளாவர். குழாத்தில் இடம்பெறும் 15 பேரில் 11 பேர் தமிழ் மொழியில் பரிச்சயம் பெற்றவர்களாம்.

'இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது படபடப்பை ஏற்படுத்துகிறது. பலம் வாய்ந்த அணிகளை எதிர்த்தாடுவதை நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறான அணிகளை எதிர்கொள்வதற்கு இந்த களம் தான் வாய்ப்பளிக்கிறது. இத்தகைய தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து விளையாடுவது அபூர்வம். டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுடன் நாங்கள் விளையாடினால், எங்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டால் நல்ல நிலையை எங்களால் அடைய முடியும். 

ஷஃபாலி (வர்மா), ரிச்சா (கோஷ்) ஆகியோர் விளையாடுவதை பார்ப்பதே ஒரு சிறந்த அனுபவமாகும்' என தோனியின் பரம இரசிகையும் அவரைப் பின்பற்றுபவருமான தீர்த்தா தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் 2018இல் வெளிவந்த விவசாயி ஒருவரின் மகள் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாவதற்கு முயற்சிப்பதை சித்தரிக்கும் கண்ணா திரைப்படத்தைப் பார்த்த பின்னரே தீர்த்தா சதிஷுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாம்.

Comments