அருட்தந்தை டோமினிக் சாமிநாதன் அடிகளார்...........
மறைந்த அருட்தந்தை டோமினிக் சாமிநாதன் அடிகள் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவர் 1942.05.21 அன்று பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை ஆரையம்பதி நொத்தாரிசு பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த வேளையில் அன்றைய காலப்பகுதியில் ஆயராக இருந்த அதிவந்தனைக்குரிய கிளனி ஆண்டகை அவர்களினால் அழைத்துவரப்பட்டு புனித மிக்கேல் கல்லூரியில் தன்னுடைய 12வது வயதில் கல்வியைத் தொடர சேர்க்கப்பட்டிருந்தார். அதேவேளை 05.06.1959 குருமட அனுமதியையும் பெற்றுக்கொண்டார். தன்னுடைய குருமட வாழ்வை ஆரம்பித்த அருட்தந்தை தன்னுடைய முழு கல்வியையும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கற்று முடித்தார்.
கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தன்னுடைய இறையியல் (Theology) முடித்துக்கொண்டு இந்திய நாட்டில் தன்னுடைய மேல்நிலை (M.A) கல்வியை Pune - India குருமடத்தில் நிறைவு செய்து கொண்டார்.
24.08.1967ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது குருத்துவ பணியை மேற்கொண்டிருந்த வேளை 1973 மறைக்கல்வியின் விஷேட கற்கை நெறியினை இந்திய (Bangalore) நாட்டில் நிறைவு செய்தார்
1986ஆம் ஆண்டு ரோம் நகரில் தன்னுடைய மேல் கல்வியினை முடித்துக்கொண்ட இவர் 1993 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ கற்கைநெறிகளை ஆரம்பிப்பதற்கு பெரிதும் உழைத்தவர்.
தன்னுடைய பணி காலத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டத்தின் நிதிப் பொறுப்பாளராக பணி செய்ததோடு மட்டக்களப்பு குருமடத்திற்கு பணிப்பாளராக அதிக காலம் பணி செய்ததோடு நிறைவான குருக்களை மறை மாவட்டத்திற்கு உருவாக்குவதில் அதிக கவனத்தோடு பணிசெய்து வந்தவர். அக்கரைப்பற்று, ஆயித்தியமலை, தாண்டவன்வெளி ஒல்லிக்குளம், நாவற்குடா, திருப்பெருந்துறை போன்ற பங்குகளில் மக்களுடைய விசுவாச வாழ்வு ஆன்மீக செயற்பாடுகள் என அதிக காலம் ஒரு குழுவாக பணி செய்தவர்.
Civil Society, SMC Alumni Association, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உடைய ஒன்றியத்தின் செயல்பாடுகளில் உத்தியோகபூர்வ மொழி பெயர்ப்பாளராகவும் தன்னுடைய பணிக்காலம் முழுதும் பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருட்தந்தையின் மறைவு மறைமாவட்டத்திற்கு பேரிழப்பு.
Comments
Post a Comment