மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை சமர்ப்பிப்பு......

 மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை சமர்ப்பிப்பு......

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான 20 முன்மொழிவுகளின் வழிமுறை அமைச்சரவை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை அசௌகரியப்படுத்துவது நோக்கமல்ல என்றும், மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், இலங்கை மின்சார சபை கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

24 மணிநேரமும் 7 மில்லியன் மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதே தமது எதிர்பார்ப்பார்ப்பாகும். 'மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக மின்சார வாரியம் 20 முறைகளை தயாரித்து அமைச்சரவை மற்றும் PUCSLக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,' என்று அவர் மேலும் கூறினார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவது தமக்கு நோக்கம் இல்லையென்றாலும், மின்சார சபை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருப்பதால் தற்போதைய மின் கட்டண முறையின் மூலம் செலவை ஈடுகட்ட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலக்கரி, நாப்தா, டீசல் போன்றவற்றுக்கு பணம் செலுத்துவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 33 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வருவதாகவும் அவற்றில் 21 நிலக்கரி கப்பல்கள் தற்போது வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் பணமில்லாமல் எரிபொருளை வழங்க மறுத்துள்ளதால், அதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கிடைக்கும் வருமானத்தால் செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை எனவும், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு முப்பத்தி நான்கு சதவீத வட்டி கட்ட வேண்டும். கிடைக்கும் வருமானத்தில் செலவினங்களை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியைக் காணமுடியாமல் தற்போது கடும் நிதி நெருக்கடியில் இலங்கை மின்சார சபை சிக்கியுள்ளது

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும், எந்த ஊழியருக்கும் போனஸ் வழங்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை அதிகரிக்காமல் இருக்க ஊழியர்களை சம்மதிக்க வைப்பது சாத்தியமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.


 

Comments