தமிழர் தேசத்தை அங்கீகரித்து சமஷ்டி அரசியலமைப்பொன்றுக்கு ஆதரவளியுங்கள் - இந்தியாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்து மூலமாக கோரிக்கை............

 தமிழர் தேசத்தை அங்கீகரித்து சமஷ்டி அரசியலமைப்பொன்றுக்கு ஆதரவளியுங்கள் - இந்தியாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்து மூலமாக கோரிக்கை............

தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இந்தியா முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தமிழ்த் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த எழுத்துமூலமான கோரிக்கையை அவரிடத்தில் கையளித்துள்ளார்.

குறித்த கோரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு,

பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது. கடந்த 75 வருடங்களாக பின்பற்றப்பட்ட கொள்கைகளும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இலங்கையில் சமீபகால ஏற்பட்ட மக்களின் எழுச்சிகள் ஒரு முழுமையான 'முறைமை மாற்றத்திற்கு' தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளமையானது கடந்த காலநிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.

இலங்கையில் இனப்பிரச்சினை நீடிப்பதற்கான முக்கிய காரணங்களில் மிக முக்கியமானதொன்று ஒற்றையாட்சி அமைப்பாகும். இந்நிலையில், இலங்கை அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்கள் அதை நிராகரித்து வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை, மாநிலத்தில் அர்த்தமுள்ள சுயாட்சியை அடைய முடியாது.

13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 வருடங்களின் பின்னர், அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தினை விடவும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. உயர் நீதிமன்றங்களின் 30க்கும் மேற்பட்ட நீதித்துறை தீர்ப்புகள் அதிகாரப்பகிர்வு எதிராகவே உள்ளனரூபவ் மத்திய அரசாங்கம் அனைத்து அதிகாரங்களின் களஞ்சியமாக இருக்கும் என்றே அத்தீர்ப்புக்கள் பொருள்கோடல் செய்கின்றன.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கான அடிப்படையான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று இந்தியா கோரிவருகிறது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதிகாரப்பகிர்வுக்குச் சார்பாக அமையவில்லை.

அந்த வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருதுவதில் கூட கூடுதலான அரசியல் ஆபத்து உள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று கூட்டாட்சிக் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, அதனடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைப்பதன் மூலமே நியாயமான தீர்வை எட்ட முடியும் என்பதை சிங்கள தேசம் மக்களுக்குச் சொல்ல வேண்டும். நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன்,  ஐக்கிய இலங்கைக்குள் வடரூபவ்கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் முன்வைத்துள்ளோம்.

இலங்கைக்கான அரசியலமைப்பு தமிழ் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் மற்றும் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையை நனவாக்க அனுமதிக்க வேண்டும்.

நிறைவாக, பிராந்தியத்தில் பொதுவாகவும் குறிப்பாக தமிழ் தேசத்திலும் இந்தியாவின் சட்டபூர்வமான தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு எங்கள் அமைப்புகளின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம் என்றுள்ளது.

Comments