அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம்....

 அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம்....

நூறாவது சுதந்திர தினத்தின்போது (2048) இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின் போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பல்கலைக்கழக உபவேந்தர்கள்  உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Comments