நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள்: அதிக விலைக்கு முட்டைகளை விற்பவர்களுக்கு எச்சரிக்கை....
அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், வெள்ளை முட்டையொன்று அதிகபட்ச சில்லறை விலையாக 44 ரூபாவிற்கும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் இந்த அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதன் காரணமாக முட்டை வர்த்தகத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் நேற்று அறிவித்தது. இந்தநிலையில் எதிர்காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையானது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ள போதிலும், அந்த விலைக்கு முட்டைகளை விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், அதிகபட்ச சில்லறை விலைக்கு அப்பால் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் தற்போது சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment