ரொனால்டோ எள மெஸ்ஸி: சூப்பர் பவர்களின் மோதல் சௌதியின் தவறுகளை மறைப்பதாக ஆம்னெஸ்டி குற்றச்சாட்டு.....
கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி அரேபியாவில் ஆடிய தனது முதல் ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்துள்ளார். ரியாத்தில் நடந்த பரபரப்பான போட்டியில், மெஸ்ஸியும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக கோல்களை குவித்தார்.
சௌதி கிளப்பான அல்-நாசருடன் இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் அவர் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 1770 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
கால்பந்து உலகின் இரண்டு சூப்பர் பவர்களான மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதிய ஆட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுவாரஸ்யம் மிக்கதாக இருந்தது. சௌதியில் நடந்த இந்தப் போட்டிதான், இந்த இரண்டு சூப்பர்பவர்களும் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. அத்தகைய எதிர்பார்ப்புகள் நிரம்பிய போட்டியின் முதல் கோலை மெஸ்ஸியே அடித்தார்.
ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தும், இறுதியில் மெஸ்ஸி ஆடிய பி.எஸ்.ஜி அணியே 5-4 என்ற கணக்கில் வெற்றியைக் கைப்பற்றியது. சௌதியின் தலைநகரான ரியாத்தில் நட்புரீதியிலான போட்டி என்றாலும், இத்தகைய வாய்ப்பு எப்போதாவது தான் கிடைக்கும் என்பதால், அதற்கு எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே என்று பி.எஸ்.ஜி அணியில் ஆடிய பலரும் நட்சத்திர ஆட்டக்காரர்கள். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மெஸ்ஸி தனது முதல் கோலை ஸ்கோர் செய்தார்.
அரங்கத்தை அதிரவைத்த ரொனால்டோ, மெஸ்ஸி: அரபு நாடுகள் சாதிப்பது என்ன?
சௌதி அரேபியாவின் ஆல் ஸ்டார் 11 அணிக்காக ரொனால்டோ 34வது நிமிடத்தில் முதல் கோலையும் முதல் பாதி முடியும் நேரத்தில் இரண்டாவது கோலையும் அடித்தார். அவரைத் தொடர்ந்து 56வது நிமிடத்தில் அல்-ஹிலால் அணிக்காக விளையாடும் ஜாங் ஹ்யுன்-சூ ஆல் ஸ்டார் அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார். இறுதியாக ஆண்டர்சன் தலிஸ்கா இரண்டாவது பாதியின் இறுதியில் ஆல் ஸ்டார் அணிக்கான நான்காவது கோலை அடித்தார்.
இந்தப் போட்டியில், பி.எஸ்.ஜி அணிக்காக மெஸ்ஸி மூன்றாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஸ்கோர் கணக்கை தொடக்கி வைத்த பிறகு, மார்க்கினோ 43வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். அவரைத் தொடர்ந்து 53வது நிமிடத்தில் ராமோஸ் மூன்றாவது கோலையும், 60வது நிமிடத்தில் எம்பாப்பே நான்காவது கோலையும் அடித்தார். பி.எஸ்.ஜி அணியின் வெற்றியை உறுதி செய்த ஐந்தாவது கோலை 78வது நிமிடத்தில் ஹ்யூகோ எகிடிகே அடித்தார்
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோலுக்கு 34 நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோல் ஆக்கியதன் மூலம் பதிலடி கொடுத்தார் ரொனால்டோ. அவரைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் மார்க்கினோ அடித்த கோலையும் மீண்டும் கோல் அடித்து சமன் செய்தார் ரொனால்டோ.
கத்தார் உலகக் கோப்பையை மெஸ்ஸி வென்ற பிறகு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு வாய்ந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள், அரபு மண்ணில் விளையாடும் போட்டி இது. ரசிகர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து அங்கு அவர்களைக் காண வந்திருந்தனர்.
ஐந்து நிமிடம் கழித்து, பி.எஸ்.ஜியின் ஜுவான் பெர்னட்டுக்கு சேலம்-அல்-டசாரி மீது ஃபவுல் செய்தமைக்காக ரெட் கார்ட் வழங்கப்பட்டது. பார்சிலோனாவும் ரியல் மேட்ரிடும் மோதிக்கொண்ட காலத்தில், தனக்கு எதிராளியாக இருந்த ரொனால்டோவுடன் இந்தப் போட்டியில் நட்புரீதியாக ஆடியபோதும், அந்தப் போட்டியின் தீவிரம் மெஸ்ஸிக்கு நல்ல சவாலை வழங்கியது.
அந்த சவால் அவரது முகத்திலும் பிரதிபலித்தது. அதேவேளையில் நெய்மர் பெனால்டியை தவறவிட்டதும் அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. போட்டியின் அரை நேரம் வந்தபோது, இரு அணிகளுமே 2-2 என்ற கணக்கில் இருந்தனர். இரண்டாவது பாதி தொடங்கியதும் கிலியன் எம்பாப்பே அடித்த பெனால்டி, பி.எஸ்.ஜியை முன்னுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து எம்பாப்பே மீண்டும் வாங்கிக் கொடுத்த பெனால்டி வாய்ப்பில் ஹ்யூகோ எகிடிகே அடித்த கோல், பி.எஸ்.ஜியின் கோல் கணக்கை 5 ஆக உயர்த்தியது. செர்ஜியோ ராமோஸ், மார்க்கினோ போன்ற சென்டர்-பேக் ஆட்டத்தில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களும் பி.எஸ்.ஜியில் இருந்தது அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது.
எப்படியிருந்தது சூப்பர் பவர்களின் மோதல்?
மான்செஸ்டர் யுனைடெடில் இருந்து வெளியேறியதால், அல்-நாசருக்கு ரொனால்டோ வந்த பிறகு, அவர் அந்த அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக நடந்த நட்புப் போட்டி இது. ஞாயிற்றுக் கிழமையன்று அல்-நாசர் அணிக்கான முதல் போட்டியில் ஆடப் போகிறார்.
அதற்கு முன்பாகவே, மத்திய கிழக்கு நாடான சௌதியில் அவர் ஆடிய முதல் ஆட்டமே, அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் மெஸ்ஸியுடன் மோதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை இருவருமே நழுவவிடவில்லை.
நெய்மரின் பாஸை சரியாகப் பிடித்து, மூன்றாவது நிமிடத்திலேயே கோல் அடித்தார். ஆனால், அதற்குத் தான் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்பதை 37 வயதான போர்ச்சுகல் அணியின் கேப்டன் 34வது நிமிடத்தில் நிரூபித்தார்.
பி.எஸ்.ஜி கோல் கீப்பர் கெய்லர் நவாஸ் தனது கைகளால் தடுத்த பந்து, ரொனால்டோவின் முகத்தில் அடித்ததால், அவருக்கு பெனால்டி கிடைத்தது. அந்த பெனால்டி வாய்ப்புக்காக, ரொனால்டோவின் கன்னம் பழுக்க வேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது கோலை அடிப்பதற்கும் அவருடைய ஆட்டத்தில் ஒருவித கோல் பசியும் தீவிரமும் தெரிந்தது. இரண்டாவது கோலை தனது கிளாசிக் ஹெட்டர் மூலமாக அடித்த அந்த போர்ச்சுகல் சூப்பர் பவர், இரண்டு கோல்களுக்கும் சேர்த்து தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியபோது, பார்வையாளர்களும் அவருடன் சேர்ந்து அதைக் கொண்டாடினார்கள்.
இரண்டு வீரர்களுமே 61வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டனர். தங்களுடைய பிரகாசமான கால்பந்து வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் இருவரும் மோதிய அந்த ஒரு மணிநேர ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியை மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் விமர்சித்துள்ளது. சௌதி அரேபியாவின் ஸ்போர்ட்ஸ் வாஷிங் உத்தி 'முழு வீச்சில்' இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
ஆம்னெஸ்டி, பிரிட்டனின் பொருளாதார விவகார இயக்குநர் பீட்டர் ஃபிராங்கெண்டல், 'ரொனால்டோவுக்கு அல் நாசர் அளித்த பெரும் தொகை, சௌதி அதிகாரிகள் மெஸ்ஸியை சுற்றுலா தூதராக முன்னிலைப்படுத்தியது என்று சௌதி விளையாட்டை வைத்து தனது தவறுகளை நன்றாக மறைப்பதாகவும் அது சௌதியுடைய திட்டத்தின் ஒரு பகுதி' என்றும் விமர்சித்துள்ளார்.
'அந்த நாட்டின் பயங்கரமான மனித உரிமைகள் தொடர்பான முந்தைய சிக்கல்களின் மீதிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு, விளையாட்டில் உயரடுக்கு பிரபலங்களைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் முயல்கின்றனர்.
சௌதி அரேபியா விளையாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவது நன்கு தெரிந்த விஷயம். ஆனால், கத்தார் நிறுவனத்திற்குச் சொந்தமான பி.எஸ்.ஜி ரியாத்தில் ஆடியதன் மூலம், தங்களுடைய தவறுகளை மறைத்துக் கொள்வதற்காக இரண்டு நாடுகளுமே இதைப் பயன்படுத்திக் கொண்டது,' என்று கூறியுள்ளார்.
மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பே, நெய்மார் ஆகியோர் ஆடும் பிஎஸ்ஜி அணி கத்தார் அரச குடும்பத்துடன் தொடர்புடைய முதலீட்டாளர்களால் 2011-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது.
'ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற கால்பந்து உலகின் மிகப்பெரிய வீரர்கள், சௌதி அரேபியா, கத்தார் போன்ற இரண்டு நாடுகளிலும் இருக்கும் மனித உரிமை பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது உட்பட, விளையாட்டை வைத்து தவறுகளை மறைப்பதற்கான முகங்களாகத் தாங்கள் பயன்படுத்தப்படுவதையும் எதிர்ப்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்,' என்றும் கூறினார்.
Comments
Post a Comment