மைத்திரி உட்பட ஏனையோருக்கு எதிராக சட்டமாதிபர் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் - அநுரகுமார

 மைத்திரி உட்பட ஏனையோருக்கு எதிராக சட்டமாதிபர் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் - அநுரகுமார

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, ஹேமசிறி பெர்னான்டோ, பூஜித ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன மற்றும் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக அடுத்தக்கட்ட சட்டநடவடிக்கையை முன்னெடுக்க சட்டமாதிபர் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உரிய புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதும் பயங்கரவாத குண்டுத்தாக்குதலை  தடுக்க தவறி நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக பதவி வகித்த சிசிர மெண்டிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினர் மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்பை கௌரவமான முறையில் மதிக்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பாதுகாப்பு தரப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக  உயர்நீதிமன்றம் ஏகமனதாக அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு முறை அரசியலமைப்பை மீறியுள்ளார் என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறிய குற்றச்சாட்டுக்காகவே நட்டஈடு செலுத்த அறிவுறுத்தப்பட்டு;ள்ளது.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இவர்களுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தான் நாட்டில் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.குண்டுத்தாக்குதலின் உண்மை காரணி என்ன, உண்மை சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

Comments