தொழிற்சங்க நடவடிக்கையால் சமுர்த்தி பயனாளிகளின் பட்டியலை தயாரிக்க முடியவில்லை.......
சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் போது வெளிப்படைத் தன்மையுடன் அதன் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான பட்டியலைத் தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிப்பதற்கான பணியை சமுர்த்தி அதிகாரிகள் நிராகரித்திருப்பதன் ஊடாக சிக்கல் நிலைமை ஏற்பட்டிருப்பதாக அண்மையில் (10) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.
2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் 2302/23ஆம் இலக்க வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை அனுமதிப்பதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோதே இந்த விடயம் புலப்பட்டது.
சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளைச் செலுத்தும் போது ஊழல் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவு என்றும், இதற்கான பொறுப்பு நலன்புரி நன்மைகள் சபைக்கு உள்ளதாகவும் இங்கு மேலும் தெரியவந்தது. இதற்கமைய இந்தத் தகவல்களைச் சேகரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜேரத்ன குறிப்பிடுகையில், பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய விண்ணப்பதாரிகளால் வழங்கப்பட்ட விபரங்களுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்போது சட்டத்தின் 21 மற்றும் 22வது பிரிவுகளுக்கு அமைய தனது வேலையை இழக்கவேண்டிய நிலை இருப்பதாகவும், இந்தப் பிரிவைத் திருத்தும் வரையில் இது தொடர்பான களப்பணிகளிலிருந்து விலகுவதாக சமுர்த்தி, கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
இந்த 21ஆம் 22ஆம் பிரிவுகளின் ஊடாக பிழையான தகவல்கள் உள்ளீடு செய்யும் அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும், இந்தப் பிரிவு திருத்தப்படும்வரை இந்தத் தகவல்களை சேகரிப்பதை நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாடி ஒரு தீர்வை எட்டுமாறும் குழு அறிவுறுத்தியது. இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வது தொடர்பான முடிவுகளை மாற்று நடவடிக்கையை பின்பற்றி எடுக்குமாறும் குழு பரிந்துரைத்துள்ளது.
அரசாங்க நலன்களைப் பெறுவதற்கான பயனாளிகள்/அதற்குத் தகுதியான குடும்பங்களை ஆரம்ப விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன், நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று இரண்டாம் நிலைத் தகவல்களை சேகரிக்க கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளில் 40% தகுதி அற்றவர்கள் என உலக வங்கியின் கணக்கெடுப்பில் வெளிப்பட்டிருப்பதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய தகுதியில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, அதில் ஒரு சதவீதத்தைத் தமக்காகப் பெற்றுக்கொள்ளும் ஊழல் அதிகாரிகள் இருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த நலன்புரித் திட்டத்தை உரிய வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதற்கு சரியான தரவுகளைக் கொண்ட ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது.
நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்கும்போது தேசிய அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்துவது அவசியம் என்றும் குழு பரிந்துரைத்தது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் பின்னணியில் தேசிய அடையாள அட்டையை சகல குடிமக்களுக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையென்றும், மோசடிகளைத் தடுப்பதற்கு இது முக்கியமான முடிவாக இருக்கும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
எனவே, இந்த ஆவணத்தை தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், ஊழல் மற்றும் மோசடி இல்லாத கலாசாரத்தை உருவாக்க இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.
இதன்படி, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் ஆகியோர் இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுமாறும் குழு அறிவுறுத்தியது.
மேலும், இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, சஹான் பிரதீப் விதான மற்றும் மதுர விதானகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி - தினகரன் இ.பேப்பர்
Comments
Post a Comment