மட்டக்களப்பில் இடம்பெற்ற போடியார் திரைப்பட இசை வெளியீட்டு விழா!!
மட்டக்களப்பின் மண்வாசனை வீசும் திரைப்படமாக உருவாகியுள்ள "போடியார்" எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் (28) திகதி இடம்பெற்றது.
விசுவல் ஆர்ட் மூவி நிறுவனத்தின் உரிமையாளர் ப.முரளிதரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதுடன், மட்டக்களப்பு கலைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், விசேட அதிதிகளாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பாமரிப்பு விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதாநந்தனும், கௌரவ அதிதிகளாக தமிழ்சங்கத் தலைவர் சைவப்புரவலர் ரஞ்சிதமூர்த்தி, வர்த்தகசங்கத் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, பேராசிரியர் ஜே.கென்னடி, உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவகப் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன், வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர், குடும்பநல வைத்திய நிபுணர் அருளானந்தம், சிரேஸ்ட விரிவுரையாளர் சதா சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோடீஸ்வரனின் இயக்கத்திலும், AJ.சங்கர்ஜனின் இசையமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை Visual Art Movies நிறுவனத்தின் சார்பில் வைத்திய நிபுணர் அருளானந்தம், சதா சண்முகநாதன், ப.முரளிதரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாகவும், அதற்கு முன்னர் இசைக்கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தயாரிப்பு நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டது.
மீன் பாடும் ஊரு, கார் கூந்தல், நாடும் நல்லால ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டதுடன், 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மட்டக்களப்பின் பிரபலமான பாடலான மீன்மகள் பாடுகிறாள் எனும் பாடலும் உத்தியோகபூர்வமாக இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
பாடல், நடனம், கவிதை, அபிநயம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் மீன்மகள் பாடுகிறாள் எனும் பாடலைப் பாடிய குணம் சவரிராஜா ஆசிரியர் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
Comments
Post a Comment