அரச சேவையாளர்கள் கொடுப்பனவு இல்லாமல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாரா ? - பிரசன்ன ரணதுங்க

 அரச சேவையாளர்கள் கொடுப்பனவு இல்லாமல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாரா ? - பிரசன்ன ரணதுங்க

அரச சேவையாளர்கள் கொடுப்பனவு இல்லாமல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட தயார் என கடந்த காலங்களில் குறிப்பிட்டார்கள். இந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றால், தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயார் நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் தேர்தலை நடத்த வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என வீடமைப்பு அமைச்சு பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட உள்ளுர்  அதிகார சபைகளுக்கான கட்டுப்பணத்தை (12) வியாழக்கிழமை கம்பஹா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் இருந்து தனது வெற்றியை உறுதிப்படுத்தி அரசாங்கத்தை கைப்பற்றியது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகளை காட்டிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெறும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் ஹெலிகொட்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்து விட்டு, நெருக்கடியான சூழல் ஏற்படும் போது தங்களின் சுய இலாபத்தை கருத்திற் கொண்டு இவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்கள். இவ்வாறானவர்களை மக்கள் முழுமையாக அரசியலில் இருந்து புறக்கணிக்க வேண்டும். சரியோ தவறோ அரசியலில் ஒரு கொள்கைக்கு அமைய செயல்பட வேண்டும்.

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் ஒதுக்கல், சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி சேவைகளுக்கு நிதி ஒதுக்குவது பாரிய போராட்டமாக உள்ளது. இவ்வாறான பின்னணியில் தேர்தலை நடத்த வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

தேர்தலை நடத்த நிதி இல்லை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கொடுப்பனவு இல்லாமல் தேர்தல் நடவடிக்கைகளில ஈடுபட தயார் என அரச சேவையாளர்கள் கடந்த மாதங்களில் குறிப்பிட்டார்கள். தேர்தல்கள் ஆணைக்குழு இதனை பொறுப்பேற்றால், தேர்தலுக்கு நாங்கள் தயார் நிதி நெருக்கடி உள்ள காரணத்தினால் அமைச்சுக்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மானியங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு இல்லை கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் என்றார்.

Comments