அருட்பணி நவாஜிஅடிகளாரின் பார்வையில் பாதர் சாமி பற்றிய ஒரு மடல்....
நேற்று (17) மதியம் அவுஸ்ரேலியா நாட்டிலிருந்து பாதர் சாமியின் மருமகன் சாந்தன் என்னையழைத்து 'நவாஜி அண்ணன், மாமா தூங்கியவர் எழுந்திருக்கவில்லையாம். சுகமில்லையாம் சென்று பார்க்க முடியுமா' என்று கேட்டான். நானும் அவனிடம் 'பணி நிமித்தம் கொழும்பில் நிற்கிறேன். கேட்டு சொல்கிறேன்' என்றேன். ஆனால் அதற்கு 'பாதர் சாமி' நித்திய தூக்கத்திற்கு சென்று விட்டார். அவரது ஆன்மா பரமனில் நித்திய இளைப்பாறுதல் பெறட்டும்.
பேராளுமையின் பேரிழப்பு:
அருட்கலாநிதி டொமினிக் சாமிநாதன் அடிகளார் 21.05.1942இல் மட்டக்களப்பு ஆரையம்பதிக் கிராமத்தில் பிறந்து 24.08.1967இல் கத்தோலிக்க குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு இறக்கும் வரையில் குருத்துவ வாழ்வில் 55 ஆண்டுகளைப் பூர்த்திசெய்து 17.01.2023இல் காலமானார் என்கிற துக்கரமான செய்தியினால் அனைவரும் காவு கொள்ளப்பட்டுள்ளோம். அருட்கலாநிதி சாமிநாதன் அடிகளார் ஒரு வரலாற்று அடையாளமும் வரலாற்று ஆய்வாளருமாவார். அருட்கலாநிதி டொமினிக் சாமிநாதன் என்கிற பன்முக ஆளுமையின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேராளுமையின் பேரிழப்பாகும்.
என்னைப்பாதித்த ஆளுமை:
'தோன்றிற் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்பது பொய்யாமொழிப் புலவன் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. 'பாதர் சாமி' (Fr.Sami) என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற அருட்கலாநிதி டொமினிக் சாமிநாதன் அடிகளாரை நான் முதன் முதலில் சந்தித்த சம்பவம் இன்றும் என்மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. இற்றைக்கு 44 வருடங்களுக்கு முன்பு 1979ம் ஆண்டில் தற்போதைய திருமலை மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலையத்தில் (அன்றைய திருமலை-மட்டுநகர் மறைமாவட்ட சிறிய குருமடம்) சர்வதேச சிறுவர் ஆண்டின் அறிமுகத்தையொட்டி இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் ஒழுங்குசெய்யப்பட்ட விவிலிய வினாவிடை போட்டியிலாகும். அப்போட்டியில் 12 வயதுக்குட்பட்ட குழுவின் ஓர் உறுப்பினராக மூதூர் பங்கிலிருந்து பங்குபற்றியதுடன், அகில இலங்கை ரீதியிலான அறிமுக விவிலிய வினாவிடைப் போட்டியிலேயே வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்ட பெருமையுடைய மூதூர்ப்பங்கு சிறார்களை அன்றைய மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனராக கடமையாற்றிய பாதர் சாமி அவர்கள் 'மஞ்சல் வேனில்' சுற்றுலா கொண்டு சென்றதும் இன்று கூட என்னால் மறக்கமுடியாத பசுமை நினைவுகளாகும். அன்றைய மறைக்கோட்ட, மறைமாவட்ட ரீதியிலான போட்டியினை 'பாதர் சாமி' நெறிப்படுத்திய விதத்தினைப்போன்று இன்றுவரையிலும் நான் கண்டதில்லை. இதனை சொல்வதற்கான காரணம் அவரது செயற்பாடெல்லாம் பங்குபற்றும் சிறார்களின் நலன் சார்ந்தாகவும், அவர்களுக்கு உதவுவதாகவும் அமைந்திருக்கும். அந்நாளிலிருந்தே மிகப்பெரிய ஆளுமையை நான் என்வாழ்வில் சந்தித்துக்கொண்டதாகவே உணர்கின்றேன்.
குருத்துவ உருவாக்குநர்:
'பாதர் சாமி'யும் குருத்துவ உருவாக்கல் பயிற்சியும் என்று நோக்குமிடத்து அதிலே அவர் சாதனை படைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். 1983ம் ஆண்டு வரையிலும் திருமலையில் இயங்கிய அன்றைய திருமலை-மட்டுநகர் மறைமாவட்ட சிறிய குருமடமானது, 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது குருமடமும் அதனை அண்டிய பிரதேசமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. அவ்வேளையில் மறைமாவட்டத்தினை புதிதாக கையேற்ற அன்றைய ஆயர் பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்னை ஆண்டகையின் வழிகாட்டலின்கீழ் 1984ம் ஆண்டில் மட்டக்களப்பிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு தற்போதுள்ள இடத்தில் குருமடம் நிறுவப்பட்டது. அதனை நிர்வகிக்கும் பொறுப்பு 'பாதர் சாமி'யின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. அவர் பொறுப்பேற்றபோது வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே குருமட மாணவர்களாக இருந்தார்கள். அந்நிலைமையை உடனடியாக மாற்றும் கைங்கரியத்திலிறங்க முழுமூச்சுடன் செயற்பட்டார். அவரது அந்த அதிரடியான செயற்பட்டினூடாக மறைமாவட்ட சிறிய குருமட மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியது. அவ்வாறு 1984ம் ஆண்டில் அவரால் புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களுள் இன்று குருவாக பணியாற்றுகின்ற மூன்று குருக்களுள் நானும் ஒருவன் (ஏனையவர்கள் அருட்தந்தையர்கள் அருள்வரதன், திருச்செல்வம்) என்பதில் பெருமையடைகிறேன். இன்று திருமலை மற்றும் மட்டுநகர் மறைமாவட்டங்களில் பணியாற்றுகின்ற பெரும்பாலான நடுத்தர வயதுடைய குருக்கள் அனைவரும் 'பாதர் சாமி' அவர்களின் உருவாக்கலில் வெளிவந்தவர்கள் என்பது வெளிப்படையான உண்மை. அதுமட்டுமல்லாது குருவாக வரவிரும்புகின்ற ஒர் இளைஞனின் கனவு எந்தவொரு காரணியாலும் தடைபட்டுவிடக்கூடாது என்பதிலே கூடிய அக்கறை செலுத்தி அவர்களைக் குருக்களாக கண்டதில் வெற்றியும் கண்டவர் 'பாதர் சாமி'. குருமடத்தில் இணைந்தவர்கள் எல்லோரும் குருவாக வந்துவிடுவதில்லை. அப்படிப்பட்டவர்களும் வாழ்வில் பல்வேறு உச்சங்களை எட்டியுள்ளார்கள் என்றால் அவர்களது உயர்விற்கு 'பாதர் சாமி'யின் பங்களிப்பு கணிசமானதென்றால் மிகையல்ல. அவரது தமிழ், ஆங்கிலம் மற்றும் உலகப் பன்மொழிப்புலமை கண்டு வியந்தவர்களுள் நானுமொருவன். அவரிடமிருந்து கற்ற ஆங்கிலம் மற்றும் ஆங்கில உச்சரிப்பு போன்று வேறு எவரிடமும் கற்கவில்லையென்று பெருமையுடனும் சொல்வேன். குருமடப் பயிற்சியின்போது அவர் காட்டிய கண்டிப்பும், கனிவும் அபரிதமானது. குருமட மாணவர்களின் பல்திறமையினை வளர்க்கும் வண்ணம் அதற்குரிய வளவாளர்களைக் இனம்கண்டு அவர்களினூடான பயிற்சியினால் குருத்துவ பயிற்சிற்கு வளம் சேர்த்தார்.
மறைக்கல்வியின் புதுப்புனல்:
'பாதர் சாமி'யின் அடுத்த பக்கம் மறைக்கல்வி, கல்வி, விவிலிய மற்றும் வழிபாட்டுப் பணியாகும். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் இயக்குனராக அவரது காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்ற காலத்தில் குருத்துவ பயிற்சினை பெற்றதாலும், சங்கம் நிறைவுற்று இரண்டாண்டுகளின் பின்பு குருவாக திருநிலைப் படுத்தப்பட்டதாலும் திருச்சபை பொதுநிலையினருக்குரியது என்கின்ற தாற்பரியத்தை நன்கு புரிந்துகொண்ட 'பாதர் சாமி' அதனை செயற்படுத்துவதில் முழுவீச்சுடன் செயற்பட்டார். அவரது காலத்தில் நன்கு வளர்ச்சி கண்ட பொதுநிலையினர் மறைக்கல்வி மறைத்தூதுப்பணி மறைமாவட்டத்தில் நிலவியதென்றால் அது மிகையல்ல. ஏற்கனவே உருவாக்கப்பட்டு வளர்ச்சி நிலையடைந்த முழுநேர பங்குப்பணியாற்றும் இல்லறத் தூதுவர்கள் (மறைப்போதகர்கள் - Permanent Catechists - இன்று குன்றிப்போன நிலை), குருக்களோ, துறவியர்களோ அற்ற பங்குளில், துணை ஆலயங்களில் தங்கிப் பணியாற்றக்கூடிய பொதுநிலை குழுவாழ்வு சகோதரிகள் (Lay Pastoral Assistants - இன்று முழுமையாக அற்றுப்போய் விட்டது). இவர்களில் சிலர் இன்று பல்வேறு பெண் துறவற சபைகளிலிணைந்து முழுநேர துறவற வாழ்வில் இணைந்துள்ளார்கள். இலங்கைத் திருச்சபையில் சந்தித்த முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னுதாரணமாக முதல் இல்லறத் திருத்தொண்டரை (Lay Married Deacon) உருவாக்கி மறைமாவட்டத் திருச்சபைக்கும், பொதுநிலையினருக்கும் பெருமை சேர்த்த பெருமையில் 'பாதர் சாமி'யின் பங்களிப்பு காத்திரமானது. அதுமட்டுமல்லாது கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியத்தினை மறைமாவட்டத்தில் ஒரு உறுதிமிக்க அமைப்பாக வழிநடத்திய பெருமையும் அவருக்கே உரித்தாகும்.
இன்று மறைக்கல்வி நவீன சமூக வலைத்தளங்களால் வளர்க்கப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம். அவரது காலத்திலிருந்த இரண்டு ஊடக வடிவங்கள் ஒன்று அச்சு ஊடகம் மற்றொன்று ஒலி, ஒளி ஊடகம். அவற்றை மறைக்கல்விப் பணிக்கென முழுமையாக பயன்படுத்தி வெற்றியும் கண்டார். இன்னும் நம்மிற் பலருக்கு ஞாபகமிருக்கலாம் அவரது காலத்தில் மறைமாவட்டத்திலும், மறைமாவட்டத்திற்கு வெளியேயும் நடாத்தப்பட்ட 'அஞ்சல் வழி மறைக்கல்வி' முறையாகும். வீடுகளிலிருந்தவாறே மறைக்கல்வியினை கற்கின்ற முறைமை. இதனூடாக பலரும் நன்மையடைந்தார்கள். அதன் அடுத்த கட்டமாக 1993ம் ஆண்டில் அன்றைய திருமலை-மட்டுநகர் மறைமாவட்ட நூற்றாண்டின் நினைவாக அவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளி விழா ஆண்டில் காலடி பதிக்கும் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய வெளியீடாகிய 'வெட்டாப்பு' பத்திரிகை அவரது பணிக்கு சான்று பகர்கின்றது. அடுத்து பங்குளில் பங்கு திருவிழாக்களின்போதும் ஏனைய விசேட தினங்களில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்கள் (Slides Shows). அதுமட்டுமல்லாது தென்இந்தியாவின் சுவாமி அமலோற்பதாசின் பண்பாட்டுமயமாக்கல் கருத்துக்களை தக்கமுறையில் உள்வாங்கிக்கொண்டு அதனை வழிபாட்டில் பயன்படுத்தி பயன்தரு வழிபாட்டு முயற்சிற்கும் வித்திட்டார். கத்தோலிக்கரின் விவிலியக் கல்வியினை ஊக்குவிக்கும் வண்ணம் அவரது காலத்தில் புனித மிக்கேல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட விவிலியக் கண்காட்சியும்இ மக்கள் விவிலியத்தினை இலகுவாகவும்இ குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள அவர்மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுதற்குரியன.
ஒரு மறைப்பணியாளராக தாண்டவன்வெளி, இருதயபுரம், கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆயித்தியமலை, புல்லுமலை, நாவற்குடா, ஒல்லிக்குளம், திருப்பெருந்துறை போன்ற பங்குகளில் அவர் பணியாற்றியுள்ளார் என நம்புகின்றேன். அத்துடன் ஆயரின் செயலர், இயக்குனர், மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையம், மறைமாவட்ட இளைஞர் மற்றும் சமூகப்பணிகள், மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் ஆணைக்குழு, 'சிலோம்' மருத்துவமனை, மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளர், தூய செபஸ்தியார் ஆண்கள் இல்லப் பொறுப்பாளர் ஆகியவற்றிலும் தமது பணியினை நல்கியுள்ளார். ஆயித்தமலை – புல்லுமலைப் பங்குகளில் ஒரு குருமட மாணவனாக அவரது பலதரப்பட்ட ஆன்மீக மற்றும் மக்கள் நலப்பணிகளை நன்கு அறிவேன். அதேபோன்று அவர் நாவற்குடா பங்கில் பணியாற்றியபோது அவருடன் இணைந்து புதிய மறைக்கல்வி சிந்தனையை செயற்படுத்த முனைந்த முயற்சி பசுமையாய்யுள்ளது. பாடசாலை கத்தோலிக்க பாட புத்தகத்திற்கு அப்பால் பங்கு மறைக்கல்வி வகுப்பினைக்கொண்டு செல்லும் முயற்சியாகும். அதாவது 'மீட்பின் மறைபொருளை' மறைக்கல்வியாக்குகின்ற முயற்சி. இவ்வாறு எப்போதும் பெட்டிக்கு வெளியே சிந்திக்கின்ற மாற்றுச்சிந்தனையாளர் 'பாதர் சாமி' என்றால் மிகையல்ல.
ஒன்றிப்பின்இ உரையாடலின் வழிகாட்டி:
'பாதர் சாமி'யினை நான் உற்றுநோக்குகின்ற அடுத்த பக்கம் அவரது கிறிஸ்தவ ஒன்றிப்புத்தாகமும், பல்சமய உரையாடலுக்கான களமுமாகும். 'உலகோடு உறவாடும் திருச்சபை' எனும் உயரிய நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட வத்திக்கான் சங்கத்தின் இரண்டு முக்கிய மைல்கற்கள். கிறிஸ்தவ ஒன்றிப்பும், பல்சமய உரையாடலுமாகும். இப்பணிக்கு 'பாதர் சாமி' ஆற்றிய பங்களிப்பினைப்போன்று மறைமாவட்டத்தில் வேறு எவரும் ஆற்றியிருக்க முடியாதென்று அறுதியிட்டு கூறுவேன். மறைமாவட்டத்தின் நீண்டகால இயக்குனராக இப்பணியில் அவர் ஆற்றிய பணியினூடாக 'மரபு வழிவந்த திருச்சபைகளின் கூட்டமைப்பினை' உருவாக்குவதில் வெற்றியும்கண்டு அவர்களோடு இணைந்து வருடாந்த 'ஒன்றிப்பு வாரத்தினை' சிறப்பிப்பதிலும், இணைந்த இறையியல் கற்கைநெறிகளை மேற்கொள்வதிலும், 'ஐக்கிய நத்தார் ஒன்றுகூடலை' கூட்டுவதிலும், பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் கண்டுகொள்வதிலும் முழுமூச்சுடன் செயற்பட்டார். மறுபக்கத்தில் கொடிய யுத்தத்தினால் சமய நல்லுறவுகள் அறுபட்டு, பிரிவினைகள் மேலோங்கிய காலத்தில் மேதகு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்சமய ஒன்றியத்தினை பல்சமயத் தலைவர்களுடன் கைகோர்த்து ஆரம்பிப்பதில் காரணகர்த்தாவாக விளங்கியவர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சமாதானத்திற்கான சமயங்களின் பேரவை என்கின்ற பல்சமய அமைப்பு சீரும், சிறப்புடன் இயங்குகின்றதென்றால் அதிலே 'பாதர் சாமி'யின் பங்கு கணிசமானது. இவ்வமைப்பின் யாப்பினை வடிமைப்பது தொடக்கம், அதற்கான உள்ளுர் மற்றும் சர்வதேச மட்ட அங்கீகாரத்தை பெறுவதில் பெரும் பங்காற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது சமய மற்றும் சமூக முறுகல் ஏற்படுகின்ற சூழ்நிலைகளிலெல்லாம் அங்கு பிரசன்னமாகி சமய, சமூக நல்லுறவினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்தவதில் மரணிக்கும் வரையிலும் ஓயாது உழைத்தார். போரினால் நலிவுற்ற கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நலவாழ்விற்காகவும், உரிமைக்காகவும் எங்கெலாம் குரல்கொடுக்க வேண்டுமோ அங்கெலாம் அஞ்சா நெஞ்சுடன் குரல்கொடுத்து போராடிய போராளியுமாவார். புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவராகிய 'பாதர் சாமி' அவர்கள் பழைய மாணவர் சங்கத் தாய்ச் சங்கத்தின் தலைவராகவும் சிறப்புப்பணி ஆற்றியுள்ளமை நோக்கத்தக்கது.
பலம்பொருந்திய அறிவுப்புலமை:
'பாதர் சாமி'யின் இன்னுமொரு பக்கம் அவரது அறிவும், அவரது கல்விப்புலமையும். இன்றும் நம்மத்தியில் வாழ்கின்ற மிகப்பெரிய அறிவுப்பெட்டகமாகவே நான் அவரை நோக்குகின்றேன். அவரது பரந்துபட்ட அறிவும், தெளிவான சிந்தனையும் அவரை ஒரு பலம் பொருந்திய அறிவாளியாகக் காண்பிக்கின்றது. கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, அதிலே கலை, கலாசார பீடத்தின் ஒப்பீட்டு சமயங்கள் மற்றும் சமூக நல்லுறவுத் (Dept. of Comparative Religion & Social Harmony) துறையின் தலைவராகவும், முதுநிலை விரிவுரையாளராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்று பின்னர் அவர்கள் வருகைதரு விரிவுரையாளராகவும், ஆலோசகராகவும் செயற்பட்டது அவரது புலமையினை படம்பிடித்துக் காண்பிக்கின்றது. பல்கலைக்கழகத்தில் தனது பணியினை ஆரம்பிப்தற்கு முன்னதாக யாழ்ப்பாணம் தூய சவேரியார் பெரிய குருமடத்திலும் மற்றும் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் வருகைதரு விரிவுரையாளராக தமது சேவையினை வழங்கியுள்ளார். அவரது கல்விப்புலமை அவரது ஆக்கங்களிலும், நூல்களிலும் வெளிப்படையாகவே காணக்கிடக்கின்றது. திருமலை, மட்டுநகர் மறைமாவட்டங்களின் வரலாற்றினை அறிய விரும்புகின்ற நவீன வரலாற்று மாணவர்கள் அவரது ஆக்கங்களை தவிர்த்து செயற்பட முடியாதென ஆணித்தரமாக கூறுகின்றேன். அவரது அறிவுப்புலமை அவரை சபையில் உயர்ந்த நிலையில் வைத்திருப்பதனை பல்வேறு சம்பங்களில் கண்டுள்ளேன். மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் தலைவராகவும், பின்னர் அதன் பலம்பொருந்திய ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். சிவில் சமூகத்தினை சந்திக்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் சந்திப்பில் பிரிக்கமுடியாத அங்கமாக 'பாதர் சாமி' கடமையாற்றியுள்ளார். அதற்குக்காரணம் அவரது அறிவு மற்றும் பலம்பொருந்திய ஆங்கிலப்புலமையுமே. அரசாங்கத்தால் மேற்கொள்ளபட்ட புதிய சட்டவாக்கப் பணியிலும் (New Constitutional Reforms) தனது பலமான பங்களிப்பினை அவரது ஓய்வுக்காலத்தில் வழங்கியதுடன் அதேவேளையில்இ ஏற்கனவே நடந்து முடிந்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள்இ நல்லிணக்க ஆணைக்குழுவிலும் (Lessons Learnt & Reconciliatory Commission) மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இது அவரது அறிவுப்புலமைக்கு கிடைத்த வெற்றியே.
நிறைவுரை:
கடந்த 55 வருடங்களாக இறைவனின் உன்னத பணியாளராகப் பணியாற்றிய அருட்கலாநிதி டொமினிக் சாமிநாதன் அடிகளாருக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். 'பாதர் சாமி' அவர்களால் நாமும், மறைமாவட்டமும், மட்டக்களப்பு சமூகமும் பெற்றுக்கொண்ட நன்மைத்தனத்திற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவரை மறைமாவட்டப் பணிக்காக உவந்தளித்த இறந்துபோன இவரது பெற்றோருக்கும் சகோதரருக்காவும் இறைவேண்டல் புரிவோம். வாழும் இவரது சகோதர, சகோதரிகள், உறவுகளுக்கு நன்றி கூறுவோம். இவரது பணியால் நலமடைந்த நாம் அனைவரும் இறைவனுக்கு நன்றிகூறி அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாறிட இந்நாளில் இறைவேண்டல் புரிவோம்.
அருட்பணி. அ. நவரெத்தினம் (நவாஜி)
Comments
Post a Comment