ரஜினி, அஜித், விஜய் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்?
வாரிசு - துணிவு படங்கள் வெளிவந்துள்ள இந்த நிலையில், நடிகர் விஜயை முன்னிறுத்தி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் விவாத மேடையாக மாற்றியுள்ளனர்.
தமிழ் மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட சினிமாத் துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகருக்கென்று எப்போதும் சிறப்பிடம் உண்டு. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். வரிசையில் அந்த இடத்தை நடிகர் ரஜினிகாந்த் எட்டிப் பிடித்தார். சினிமாத் துறையிலும், மக்களாலும் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டார். 4 தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக தொடர்கிறார்.
தமிழ்த் திரையுலகில் தியாகராஜ பாகவதர் காலத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு ரஜினியும் வசூல் சக்கரவர்த்தியாக உயர்ந்ததால் அந்தந்த கால கட்டங்களில் இதுகுறித்த சர்ச்சை பெரியளவில் எழவில்லை. ஆனால், தற்போது ரஜினிகாந்த் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டு, சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போதே அவரது இடத்தை நடிகர் விஜய் பிடித்துவிட்டார் என்ற கூறப்படுவதே சர்ச்சையின் தொடக்கப்புள்ளி.
ஜில்லா - வீரம் படங்களுக்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரே பொங்கலில் விஜய் - அஜித் நடிப்பில் வாரிசு - துணிவு படங்கள் வெளியாகி உள்ள சூழலில், வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜூவின் பேச்சே இந்த சர்ச்சைக்கு வித்திட்டது. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கும் உரிமையை பெற்றிருப்பதால், அந்த படத்திற்கே அதிக திரையரங்குகள் கிடைக்கக் கூடும் என்று கூறப்பட்ட போது, தில்ராஜூவின் சர்ச்சைக்குரிய அந்த பேட்டி வெளியானது.
அஜித்தை விட விஜயே பெரிய ஸ்டார் என்பதால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்ற அவரது பேச்சு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பதிவிட, சமூக ஊடகங்களில் விவாதம் பற்றிக் கொண்டது.
வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், 'விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூர்ய வம்சம் படத்தின் 175வது நாள் விழாவில் நான் சொன்னேன். தற்போது அது நடந்து விட்டது. விஜய் தான் சூப்பர் ஸ்டார்,' என்று குறிப்பிட்டு, ரசிகர்களின் மோதலுக்கு நெய் வார்த்தார்.
இதன் தொடர்ச்சியாக, யூடியூப் தளம் ஒன்றில் பேசிய சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான பிஸ்மி, வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூவின் பேச்சை ஆமோதித்தார். 'தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் வசூல் ரீதியாக நடிகர் விஜயே நம்பர் ஒன்' என்ற அவரது பேச்சால் எரிச்சலடைந்த ரஜினி ரசிகர்கள், நேரடியாகவே அவருடன் வாக்குவாதம் செய்ததும், பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்த நிகழ்வுகளும் அரங்கேறின.
ரஜினி ரசிகர்களின் செயலை இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமானும் கண்டித்தார். 'இன்றைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் உச்சத்தில் இருக்கிறார். இந்த எதார்த்த சூழலை விளக்கி கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக சகோதரர் பிஸ்மியை அச்சுறுத்த முனைந்த ரஜினிகாந்த் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று,' என்று அவர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
'இரும்பன்' பட இசை வெளியீட்டு விழாவிலும் சீமான், 'தமிழ் சினிமாவில் இன்றைய சூப்பர் ஸ்டார் விஜய்தான்' என்ற தனது கருத்தை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். மறுபுறம், நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் குறித்த தனது பேச்சுக்கு புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'விஜயின் வளர்ச்சியை வைத்து அவர் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவில் கூறியதாக வாரிசு இசை மேடையில் சொன்னேன். ஆனால், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும், அஜித் குமார் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் நான் ஒருபோதும் சொல்லவே இல்லை,' என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் யூடியுப் தளத்தில் வாரிசு - துணிவு ஆகிய இரு படங்க ளும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் டிரெண்டிங்கில் நீடிக்கின்றன.
Comments
Post a Comment