கிரிக்கெட் வீராங்கனை, அடர்ந்த வனப்பகுதியில் சடலமாக மீட்பு.....
ஒடிசாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல்போன ராஜஸ்ரீ ஸ்வைன் எனும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை, அடர்ந்த வனப்பகுதியில் போலீஸாரால் இன்று (15) சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை ராஜஸ்ரீயின் பயிற்சியாளர், அவர் காணாமல் போய்விட்டதாக கட்டாக்கிலுள்ள மங்களபாக் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இந்த நிலையில், குருதிஜாதியா வனப்பகுதியில் அவரின் ஸ்கூட்டர் தனியாக கிடந்திருப்பதை போலீஸார் இன்று கண்டுபிடித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து போலீஸார் வனப்பகுதியை ஆராய்ந்ததில் ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இதனைக் கட்டாக் காவல் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார்.
இருப்பினும் மரணத்துக்கான காரணம் என்னவென்று போலீஸார் தரப்பிலிருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததால், அவரின் பெற்றோர் இதனைக் கொலை எனக் குற்றம்சாட்டிவருகின்றனர். அதைத் தொடர்ந்து போலீஸாரும், இந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்ரீயின் பெற்றோர், புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்காக பஜ்ரகபட்டி பகுதியில் ஒடிசா கிரிக்கெட் சங்கம் (OCA) ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் ராஜஸ்ரீ ஸ்வைன் உட்பட சுமார் 25 மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் அப்பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். பின்னர் ஜனவரி 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் இறுதிப் பட்டியலில் ராஜஸ்ரீயால் இடம்பெறமுடியவில்லை. அடுத்தநாள் வீராங்கனைகள் அனைவரும் அவர்கள் அருகிலிருந்த கிரிக்கெட் மைதானத்துக்குப் பயிற்சிக்கு சென்றனர். ஆனால் ராஜஸ்ரீ, தன் தந்தையைச் சந்திக்க பூரிக்கு செல்வதாக தன்னுடைய பயிற்சியாளரிடம் தெரிவித்திருக்கிறார்' என போலீஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment